தேசிய வாக்காளர் தினம்: விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!


2011ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி, தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்காளர்களாகத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகத் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்திய வரைபடம்: மாணவிகள் விழிப்புணர்வு
இன்றைய இளைய தலைமுறையினருக்கு வாக்களிக்கும் அவசியத்தை உணர்த்தும் வகையில் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் நூதன முறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.
கும்பகோணம் சாக்கோட்டை அருகே உள்ள இதயா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவிகள் இந்திய வரைபடம் போன்று அணிவகுத்து நின்று பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் கல்லூரியின் மேல் தளத்தில் நின்று பட்டம் பறக்கவிட்டு வாக்களிக்கும் உரிமையை வெளிப்படுத்தினார்கள்.
வாக்காளர் அடையாள அட்டை
சென்னை மாநகராட்சி சார்பில் 8 ஆவது தேசிய வாக்காளர் தின விழா ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
தேசிய வாக்காளர் தினமான தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் வழங்கிய தேசிய வாக்காளர் தினச் செய்தி, இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான தா.கார்த்திகேயன் இந்நிகழ்ச்சியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை வாசிக்க, மாநகராட்சி பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, புதிய வாக்காளர்களான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்திகேயன் வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
விழிப்புணர்வுப் பேரணி
நெல்லையில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினத்தையொட்டி வாகனப் பிரசாரம், விழிப்புணர்வுப் பேரணியில், ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
நெல்லையில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டிப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனிதச் சங்கிலி, வாகனப் பிரசாரம், விழிப்புணர்வுப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கிவைத்தார்.
"வாக்குரிமை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. உலகின் பல நாடுகளில், பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே வாக்குரிமை கிடைத்துள்ளது. இந்தியாவில்தான் சுதந்திரம் பெற்றவுடன் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. சாதி, மதம் மற்றும் பணம் என எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களைச் சேர்த்து, புதிய வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் வெளியிடப்படுகிறது. அனைவரும் அனைத்துத் தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும்" என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.