மொழி குறித்து விமர்சனம்: கொந்தளித்த நீது சந்திரா


போஜ்புரி மொழியைக் கிண்டல் செய்த பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்குப் பதிலளித்துள்ளார் நடிகை நீது சந்திரா.
தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன், யுத்தம் செய், சேட்டை, திலகர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. பிகாரைச் சேர்ந்த இவர் நடிப்பது மட்டுமல்லாமல் போஜ்புரி மொழியில் ‘தேஸ்வா’ உள்பட 2 படங்கள் தயாரித்திருக்கிறார். பல்வேறு விஷயங்களில் தனது கருத்துக்களைத் துணிச்சலுடன் சொல்லக்கூடியவர் நீது சந்திரா.
சமீபத்தில் நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியாகியுள்ள ஐயாரி என்ற இந்தி படத்தின் விளம்பர நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட சித்தார்த்திடம் போஜ்புரி மொழியில் சில வார்த்தைகள் பேசும்படிக் கேட்டுக்கொண்டபோது, போஜ்புரி மொழியை பேசும்போது 'கழிவறை உணர்வு' ஏற்படுவதாகத் தெரிவித்தார்.
தனது தாய்மொழியான போஜ்புரி பற்றி சித்தார்த் மல்ஹோத்ரா பேசியதைக் கேட்டு கோபமடைந்த நீது, இணைய தள பக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவை வெளுத்து வாங்கினார். நீது சந்திரா தன் ட்விட்டர் பக்கத்தில் “நீங்கள் (சித்தார்த் மல்ஹோத்ரா) பேசியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். போஜ்புரி மொழி பற்றி நீங்கள் செய்த விமர்சனத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை. கழிவறையில் இருக்கும் உணர்வு ஏற்படுவதாக நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.