தேங்காய் உற்பத்தியை மேம்படுத்த நிதியுதவி!

தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்தி தேங்காய் உற்பத்தியை மேம்படுத்தும் 23 திட்டங்களுக்கான நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தேங்காய் உற்பத்தியில் தொழில்நுட்ப வளர்ச்சிகளை மேம்படுத்துவதற்கான 23 மேம்பாட்டுத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாட்டுப் பணிகளை தேங்காய் மேம்பாட்டு வாரியம் மேற்கொள்கிறது. இப்பணிகளுக்கு ரூ.22.69 கோடி செலவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.4.75 கோடி நிதியுதவி அளிக்கவும் மேம்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தேங்காய் உற்பத்தியை ஆண்டுக்கு 521 லட்சமாகவும், தேங்காய் மட்டை உற்பத்தியை 4,200 டன்னாகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலே கூறிய 23 திட்டங்களில் 3 திட்டங்கள் ஆராய்ச்சித் திட்டங்களாகும். 19 திட்டங்கள் தேங்காயின் மதிப்பு கூட்டுத் திட்டங்களாகும். ஒரு திட்டம் சந்தைப்படுத்துதல் திட்டமாகும். தேங்காய் உற்பத்தியை அதிகரித்து தேங்காய் தூள், தேங்காய் எண்ணெய், தேங்காய்ப் பால் மற்றும் சர்க்கரை, தேங்காய் வினிகர் உள்ளிட்ட தேங்காய் தயாரிப்புகளை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.