மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

கேரளா: கொடி ஏற்றியதில் சர்ச்சை!

கேரளா: கொடி ஏற்றியதில் சர்ச்சை!

கேரளாவிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசுப்பணியில் இருப்பவரோ அல்லது பணியாற்றி ஓய்வு பெற்றவரோ மட்டுமே தேசியக்கொடியை ஏற்ற வேண்டுமென்று சுற்றறிக்கை அனுப்பியது கேரள மாநில அரசு. இதனை மீறி, பாலக்காட்டில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் இன்று (ஜனவரி 26) நடந்த குடியரசு தினவிழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கொடியேற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, கேரளாவில் பாலக்காடு அருகிலுள்ள அரசு உதவிபெறும் வியாசா வித்யாபீடம் உயர்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது. இதில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அங்கு தேசியக்கொடி ஏற்றினார். இதற்கு பினராயி விஜயன் தலைமையிலான கேரள அமைச்சரவை எதிர்ப்பு தெரிவித்தது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெறும் விழாக்களின்போது, அரசுப்பணியில் இருப்பவரோ அல்லது பணி ஓய்வு பெற்றவரோ தேசியக்கொடி ஏற்றலாம்; மற்றவர்கள் அதனைச் செய்யக்கூடாது என்று அப்போது சர்ச்சை கிளம்பியது. அப்போது இதற்குப் பதிலளித்த ஆர்எஸ்எஸ் தரப்பு, குடியரசு தினவிழாவிலும் அதேபள்ளியில் மோகன் பகவத் கொடியேற்றுவார் என்று அறிவித்தது.

இதனையடுத்து, கேரளாவிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாநில அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், பள்ளிகளில் அதன் தலைமையாசிரியர் மட்டுமே தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க மோகன் பகவத்தை மையப்படுத்தியே, இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், கேரள அரசின் உத்தரவை மீறிய மோகன் பகவத், தான் சொன்னது போலவே இன்று (ஜனவரி 26) அதே பாலக்காடு பள்ளியில் தேசியக்கொடி ஏற்றினார். அவரது வருகையையொட்டி, அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதுகுறித்துப் பேசிய கேரளா ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்த கேகே பல்ராம், “இந்தப் பள்ளியில் மூன்று நாட்கள் ஆர்எஸ்எஸ் முகாம் நடக்கிறது. இதனையொட்டி மூவர்ணக் கொடியை பகவத் ஏற்றியதில் எந்த தவறும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட வியாசா வித்யா பீடம் உயர்நிலைப்பள்ளியானது, ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் அமைப்பான வித்யாபாரதியால் நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவில் மோகன் பகவத் கொடி ஏற்றியதற்காக, இப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேரள அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 26 ஜன 2018