மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: காஞ்சி மடத்தைக் கேட்டால் கமலாலயத்துக்கு ஏன் வலிக்கிறது?

சிறப்புக் கட்டுரை:  காஞ்சி மடத்தைக் கேட்டால் கமலாலயத்துக்கு ஏன் வலிக்கிறது?

ஆரா

ஆண்டாள் பற்றி வைரமுத்து பேசியதற்காகப் பொங்கலுக்கு முன்னும் பின்னுமாக அவருக்கு எதிரான போராட்டங்கள் பொங்கின. இதுவரை எந்த பிரச்னைக்கும் வீதிக்கு வராதவர்கள் எல்லாம் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினர்.

தன்னைச் சுற்றியே ஊடகப் புயல் மையம்கொண்டு வீசுவதை உணர்ந்த வைரமுத்து, அதுவும் ஹெச்.ராஜாவின் ஆவேசப் பேச்சுக்குப் பிறகே தன்மீது சர்ச்சைப் புழுதிகள் படிந்திருப்பதை அறிந்த வைரமுத்து, அதே ஹெச்.ராஜாவே தன்னை இந்தச் சர்ச்சையில் இருந்து தற்காலிகமாகக் காப்பாற்றுவார், கல்லெறிதல்களில் இருந்து விடுமுறை வாங்கி தருவார் என்று நினைத்திருக்க மாட்டார்.

ஆம்... ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா எழுதிய தமிழ் - சமஸ்கிருத அகராதி புத்தக வெளியீட்டு விழாவின் மூலமாகச் சர்ச்சை தீபத்தை வைரமுத்துவிடமிருந்து வாங்கிக்கொண்டிருக்கிறார் காஞ்சி சங்கர மடத்தைச் சேர்ந்த இளைய சங்கராச்சாரியாரான விஜயேந்திரர்.

சர்ச்சை என்று ஊடக மொழியில் இதை ஒதுக்கிவிட்டுப் போய்விட முடியாது. ஏனெனில், இன்றைய ஊடகங்களுக்கு ஏதேனும் ஒரு பொருள் வேண்டியுள்ளது. அந்தப் பொருள் கிடைத்துவிட்டால் அதை வைத்து உருட்டுகிறார்கள். அதை உருட்டி க்கொண்டிருக்கும்போதே இன்னொரு பொருள் கிடைத்துவிட்டால், முந்தைய பொருளை விட்டுவிட்டுப் புதிய பொருளை உருட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். முன்பு உருட்டப்பட்ட பொருள் அப்படியே கிடக்கிறது. இப்போது உருட்டிக்கொண்டிருக்கும் புதிய பொருள் எந்த நிமிடமும் வெகு மக்கள் ஊடகங்களால் கைவிடப்படலாம். ஆனால், இதை சர்ச்சை, செய்திப் பொருள் என்று சாமானியமாக நாம் கடந்துவிட முடியாது.

ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மாவின் தமிழ் - சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவுக்கான மேடையிலேயே தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் ராஜா வைத்திருந்த அளவுகோல் புரிந்தது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்திய தேசத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்துக்குள் நாம் பொருந்தியிருக்கிறோம் என்பதே உண்மை. இதுபோன்ற விழாக்களில் இந்திய அரசியல் அமைப்பு, யாருக்கு முதல் மரியாதை வழங்குகிறது என்றால் அரசியல் சாசனப் பதவியில் இருக்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்குத்தான். ஆனால், மேடை எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது? ஆளுநர் உள்ளிட்ட புள்ளிகள் எல்லாம் மேடையின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருக்க, அதே மேடையில் அவர்களைவிடச் சற்றே உயரமாக அமைக்கப்பட்ட இன்னொரு மேடையில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி அமர வைக்கப்பட்டிருக்கிறார்.

ஆளுநர் கலந்துகொள்ளும் விழாவில் அவருக்குத்தான் முதல் மரியாதை தரப்பட வேண்டும் என்பது சட்டமும் மரபும் அறிந்தவர்களுக்குத் தெரியாதது அல்ல. ஆக, இந்த மேடையில் தமிழ்த் தாயை விஜயேந்திரர் அவமதிப்பதற்கு முன்னமே, இந்திய அரசியல் சாசனப் பதவியான ஆளுநர் பதவியில் இருக்கும் புரோகித்தை அவமதித்திருக்கிறார் விழா ஏற்பாட்டாளரான ஹெச்.ராஜா.

இப்போது யார் ஆன்ட்டி இந்தியன்?

தன்னைக் கேள்விகேட்கும் நிருபர்கள் மீதெல்லாம் ‘ஆன்ட்டி இந்தியன்’ முத்திரை குத்தும் ஹெச்.ராஜா, இந்த நிகழ்ச்சியில் ஆளுநரை அவமதித்ததன் மூலம் தனக்குத்தானே ஆன்ட்டி இந்தியன் முத்திரையைக் குத்திக்கொண்டிருக்கிறார். இந்திய அரசியல் அமைப்பை அவமதிப்பது என்பது இந்தியாவை அவமதிப்பது போன்றதுதான். ஆளுநருக்கு எதிராகப் பறக்கும் கறுப்புக் கொடிகள் ஜனநாயகபூர்வமான எதிர்ப்பைச் சட்டத்துக்கு உட்பட்டுக் காண்பிப்பவை. அதனால், ஆளுநருக்கு எதிர்ப்பே அன்றி அவமரியாதை கிடையாது. ஆனால், மேடையில் ஆளுநருக்கு ஓர் ஆசனம் கொடுத்துவிட்டு அதைவிட உயரிய ஆசனத்தை இன்னொருவருக்குக் கொடுத்து அமர வைப்பது என்பது ஆளுநரை அவமதிப்பது. இந்த சர்ச்சையை இதுவரை யாரும் கிளப்பவில்லை.

விஜயேந்திரருக்கு உயரிய மரியாதை அளிப்பதன் மூலம் ஆளுநரை மட்டும் ராஜா அவமதிக்கவில்லை. தமிழையும் சேர்த்தே அவமதித்தார்.

இங்கே காஞ்சி விஜயேந்திரர் வந்திருப்பது சமஸ்கிருதத்தின் குறியீடாகத்தான் அன்றி வேறல்ல. அப்படியென்றால் இந்தியாவின் அரசியல் அமைப்புப் பதவியான ஆளுநர் என்ற பதவி, தமிழ் என்ற பழம்பெரும் மொழி ஆகியவற்றைவிட சமஸ்கிருதத்துக்கு உயரிய இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இப்படியாக ராஜா அவமதித்த பின்னர்தான் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்து நிற்காமல் விஜயேந்திர சரஸ்வதியும் தமிழை அவமதித்திருக்கிறார். காஞ்சி மடம் மீது முற்றுகைப் போராட்டங்கள், அவருக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன. தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்து நிற்காமல், தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்பது என்பது தமிழ்த்தாயையும் பாரத மாதாவையும் அவர் வேறு வேறாகப் பார்க்கிறார் என்பதைக் காட்டுகிறது. தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க வேண்டாம் என்று யாரும் சொன்னதில்லை. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தின்போது ஏன் எழுந்து நிற்கவில்லை என்பதுதான் கண்டனங்களுக்குக் காரணம்.

காஞ்சிக்கு வக்காலத்து வாங்கும் பாஜக

காஞ்சி மடத்தின் மீது விழும் கண்டனக் கணைகளை பாஜக ஏன் எதிர்கொண்டு விஜயேந்திரருக்காக விளக்கம் அளிக்கிறது என்பதுதான் இங்கே அடுத்த குறியீடாகத் தெரிகிறது. மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார்: “காஞ்சி சங்கர மடத்தினர் தமிழுக்கு எள்ளளவும் இழுக்கு ஏற்படுத்த மாட்டார்கள். தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை பற்றி சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது. தமிழுக்காகக் குரல் கொடுப்பவர் விஜயேந்திரர். தற்போது அவருக்கு எதிராக நடக்கும் போராட்டத்தைத் தூண்டிவிட்டுள்ளனர். அவ்வாறு தூண்டிவிட்டது யார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பொன்னார் அவர்களுக்கு நாம் குறிப்பிட விரும்புவது யாதெனில் இந்தப் போராட்டத்தைத் தூண்டிவிட்டவர் விஜயேந்திரர்தான். அவர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்றிருப்பார் என்றால் இந்தப் போராட்டங்கள், கண்டனங்கள் எதுவும் எழுந்திருக்காது. அது ஒருபுறம் இருக்க, கண்டனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய சங்கர மடம் ஒரு சிறு அறிவிப்புடன் ஒதுங்கிக்கொள்ள, சங்கர மடத்தின் குரலாக பாஜக பேசுகிறது.

இந்நிலையில் பாஜகவின் தமிழக அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகம் போன்றோர் தங்களது ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார்கள். 2010ஆம் ஆண்டு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது தனது சக்கர நாற்காலியிலேயே அமர்ந்திருக்கிறார் கருணாநிதி. இதைப் பகிர்வதன் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது கருணாநிதிகூடத்தான் உட்கார்ந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள் கேசவ விநாயகம்கள்.

ஆக, காஞ்சி மடத்தைக் கேள்வி கேட்டால் கமலாலயம் பதில் சொல்கிறது. அதுவும் வன்மமான, விஷமமான பதிலைச் சொல்கிறது.

கருணாநிதி மூட்டுவலியால் அவதிப்பட்டுப் பல வருடங்களாகவே சக்கர நாற்காலியில் அமர்ந்தபடிதான் பொதுப் பணிகளை கவனித்து வந்திருக்கிறார். கருணாநிதி என்ற முதியவர் உட்கார்ந்திருப்பதும், 1969இல் பிறந்த, இன்னும் 50 வயதுகூட ஆகாத விஜயேந்திரர் உட்கார்ந்திருப்பதும் ஒன்றா?

இன்னொரு விஷயமும் கேசவ விநாயகம் போன்றவர்களுக்குத் தெரியும். இந்தத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் முன்பே தமிழ்நாட்டின் மாநில கீதமாக, 1970இல், அதாவது விஜயேந்திரர் ஒரு வயதுக் குழந்தையாகத் தத்திக்கொண்டிருக்கும்போதே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பிரகடனம் செய்து நெஞ்சு நிமிர்த்தி நின்று அதை கௌரவித்தவர் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி.

இந்த விவாதத்தை இன்னொரு கோணத்திலும் நாம் பார்க்கலாம். இதற்கும் கருணாநிதியே வழிகாட்டுகிறார். சில வருடங்களுக்கு முன்பு கருணாநிதி மேடையில் அமர்ந்திருக்கும்போது அவருக்கு முன்னால் பலர் பேசினர். அதில் அந்தத் தமிழ் நடிகையும் ஒருவர். ஒவ்வொரு வார்த்தையையும் தனக்கே உரிய பாணியில் கடித்துத் துப்பித் தமிழை ஒரு வழி செய்துவிட்டார். இது பார்வையாளர்களுக்குச் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது.

அதன் பிறகு பேசிய கருணாநிதி, “தமிழை யாராலும் அழிக்க முடியாது. இதோ சிறிது நேரம் முன்பு இவர் (அந்த நடிகை பெயரைக் குறிப்பிட்டு) கூடத்தான் எவ்வளவோ முயற்சி செய்தார். தமிழை அழிக்க முடிந்ததா?” என்று கேட்டார் கருணாநிதி.

அந்தக் கேள்வியில் தொக்கிநிற்கும் தர்க்கத்தை இதற்கும் பொருத்திக்கொள்ளலாம். விஜயேந்திரர்கள் தங்களை யார் என்று ஒவ்வொரு நாளும் பொழுதும் தெளிவாகக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், என்றைக்கும் தமிழை அவர்களால் அழிக்க முடியாது. தமிழுக்காக யார் நிற்கவில்லை என்றாலும் என்றென்றைக்கும் தமிழ் நிற்கும், காலம் கடந்து நிற்கும்!

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 ஜன 2018