மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: தன்னை அழகியென்று உணர்ந்த அழகியின் பிரச்னைகள்!

சிறப்புக் கட்டுரை: தன்னை அழகியென்று உணர்ந்த அழகியின் பிரச்னைகள்!

லக்ஷ்மி மணிவண்ணன்

எங்கள் மாமியொருத்தி சிறு வயதில் அழகு. மாமியென்றால் நாங்களும் மாமியென்றுதான் அழைப்பது. அவ்வளவு அழகு. அவளைச் சிறு வயதில் செல்லம் கொஞ்சாதவர்கள் இல்லை.வழிப்போக்கர்கள்கூட நின்று ஏதேனும் கேட்டுவிட்டுக் கடந்து செல்வார்கள். ஒன்றுமே கேட்பதற்கு இல்லாதவர்கள் சமயம் என்ன என்றாவது கேட்பார்கள். திரும்பி பாராமல் அவள் சமயத்தைத் தவறாகச் சொல்வாள். அதை ஒருவர்கூட மறுத்துப் பேசியதில்லை. அவ்வளவு அழகு அவள். சமயத்தைத் தவறாகச் சொல்வதென்றால் ஏழு மணிநேரம், எட்டு மணிநேரம் தவறாக இருக்கும். அவள் எங்களை எடுத்து இடுப்பில் கொஞ்சும்போது காண்பவர்களுக்கு எச்சூறும்.

அவள் அழகாக இருந்ததில் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், அவளும் தன்னை அழகியென்று உணர்ந்ததில் ஒருபாடு பிரச்னைகள். அவளுக்கும் பிரச்னைகள்; சார்ந்தவர்களுக்கும் பிரச்னைகள்.

பின்னர் வயது வெளியில் ஏற ஏற ஒருபாடு பிரச்னைகள். அகத்திலும் புறத்திலும். உள்ளத்தில் வயதாகாதவள் அவள். வளரும்போது முதலில் பிற அழகையெல்லாம் மறுத்தாள். பின்னர் தாக்கத் தொடங்கினாள். தனது அறுபத்தியாறு வயதிலும் அவள் இவ்வாறே பயின்றதில் ஏற்றெடுத்த சிரமங்களை மாமா அறிவார்.

தமிழ் பிராமணர்களின் மனநல பிரச்னைகள் தன்னை அழகியென்றுணர்ந்த அழகியின் மனநலப் பிரச்னைகளை ஒத்ததே!

பிறருடைய கலாசாரங்களை அணுகும் விதம்

இங்குள்ள அனைத்து சமூகத்தினருக்கும் தனிப்பட்ட குடும்ப, சாதி மத, ஆன்மிகப் பழக்கங்கள் உள்ளன. அப்படியில்லாதோர் இல்லை. இந்தத் தனிப்பட்ட வாழ்க்கைப் பழக்கம் செருப்புத் தைப்பவருக்கு இருப்பதைப் போன்றுதான் பிராமணனுக்கும் இருக்கிறது. எல்லோருக்குமே காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. எல்லோரும் தாங்கள் சார்ந்த வாழ்க்கையே மேலானது என்கிற எண்ணம் கொண்டே குழந்தைகளை வளர்க்கிறார்கள். அப்படியே நம்புகிறார்கள். அப்படி நம்பாத குழுவோ, சாதியோ கிடையாது.

ஆனால், பிராமணர்களைத் தவிர்த்துப் பிறருக்குப் பிற கலாசாரங்களிலும் மேன்மையான குணங்கள் இருக்கக்கூடும் என்கிற ஐயமும், இருந்தால் ஏற்க வேண்டும் என்கிற மனோபாவமும் உண்டு. பிராமணர்களில் பலருக்கும் பிற கலாசாரங்கள் உண்டு என்பதே தெரிவதில்லை. தங்கள் குடும்ப நம்பிக்கைகளுக்கு வெளியே பொது வெளியுண்டு என்பதே பெரும்பாலான பிராமணர்களுக்குத் தெரிவதில்லை. அப்படியிருந்தால் அவையெல்லாம் குறைவானவை என மதிப்பிடுகிறார்கள். இஸ்லாமியர்களும் இதுபோன்ற ஒரு மூடுண்ட சமூகமாகவே வாழ எத்தனிக்கிறார்கள்

இத்தனைக்கும் பிராமணர்களே இந்திய வாழ்க்கையில் முதலில் சிதறுண்ட சமூகமாகவும் இருக்கிறார்கள். எங்கெங்கோ பரவியிருக்கிறார்கள். ஆனால், குடும்ப நம்பிக்கைகளுக்கு வெளியே அவர்கள் இதுவரையில் அசலான உலகத்தை இன்னும் காணவில்லை. தங்கள் குடும்ப நம்பிக்கைகளை மட்டுமே ‘ஆதென்டிக்’ ஆகக்கொள்கிற ஒரு தனி பிராந்தியத்துக்குள் அவர்கள் வாழ முயல்கிறார்கள். படைப்பாளிகள், அறிவாளிகள், பிராமண முற்போக்கர்கள் எவரும் இதற்கு விதிவிலக்கில்லை.

பிராமண மனோபாவத்தின் மையமே இந்த, “நான் சொல்வது ஆதென்டிக்” என்னும் தன்மைதான். பிராமண எதிர்ப்பு, பிற முற்போக்குக் கச்சவடங்கள் எனச் சகலத்திலும் பங்கேற்கிற பிராமணர்கள் உண்டு. கடவுள் எதிர்ப்பு பிராமணர்கள், மாவோயிஸ்டு பிராமணர்கள் எல்லாம்கூட இருக்கிறார்கள்.

எனக்கு நிறைய பிராமண நண்பர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்தவ நண்பர்களோடு உறவில் விரிசல் உண்டாக வேண்டுமெனில் பகுத்தறிவை அலட்சியம் செய்தால் போதும். அந்த அளவுக்கு இந்திய பகுத்தறிவும், இந்திய கிறிஸ்தவமும் நெருங்கிய உறவு கொண்டவை. அவர்கள் விலகுகிறார்கள் என்று உணராத வகையில் விலகிக்கொண்டிருப்பார்கள். அதுபோலவே பிராமணர்கள் எந்தத் தரப்பில் நின்றாலும் அவர்களுடைய ஆதென்டிக் என்னும் மனநிலையை நீங்கள் பொருட்படுத்தவில்லையெனில் விலகுவார்கள். பிற விஷயங்கள் எதனை வேண்டுமாயினும் சகித்துக்கொள்கிற பிராமணர்களால்கூட நீங்கள் அவர்கள் கொண்டிருக்கிற இந்த ஆதென்டிக் உளச் சீக்கை மறுத்ததால் தாங்கிக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் தங்கள் தன்னிலையில் கொண்டிருக்கும் மையப் பொருள் இது.

வள்ளலார், நாராயண குரு, வைகுண்டசாமிகள் ஆகியோர் பிராமணர்களின் இந்த உளப்பாங்கைப் பொருட்படுத்தாதவர்கள். இந்த உளப்பாங்கைப் பொருட்படுத்தாதவர்களின் மீது அதிருப்தியும், பழிவாங்கும் மூர்க்கமும் உண்டாகும். தமிழ்ப் படைப்பாளிகளில் இந்த உளப்பாங்கைப் பொருட்படுத்தாதவர் என ஜெயமோகனைச் சொல்ல முடியும். அவர் நாராயண குருவிடமிருந்தோ, அல்லது நித்ய சைதன்ய யதியிடமிருந்தோ இந்த அம்சத்தைப் பெற்றிருக்கக்கூடும். இதைச் சொல்வது என்பது அவரைப் பொதுவில் காட்டிக்கொடுத்தது போலாகுமா? தெரியவில்லை. ஜெயமோகன் பிராமணர்களின் ஆதென்டிக் தன்மையைப் படைப்பு, ஆன்மிகம் எனச் சகல வெளிகளிலும் மெளனமாக மறுக்கும் பிறிதொரு வகையான ஆதென்டிக் தன்மையை முன்வைக்கிறார். இதை நுட்பமாக உணர்ந்துகொண்ட பிராமணர்களுக்கு அவரைச் சகித்துக்கொள்வது சாத்தியமே இல்லை. அவர்கள் பல முகமூடிகள் மூலம் அவரை எதிர்ப்பார்கள்.

பிராமணர்கள் தங்கள் ஆதென்டிக் தன்மையை ஏற்றுக்கொள்கிற எல்லாத் தரப்புகளுடனும் சேர்ந்திருப்பார்கள். இந்த மையப் பொருளில் ஏற்பில்லாதவர்களிடம் துன்புறுவார்கள். பெரியாரெல்லாம் அவர்களுக்குத் தோளில் கைபோட்டுத் திரியுமளவுக்குப் பக்கமே. பிராமணர்களை எதிர்ப்பது என்பதும் கடினமான காரியம் என்பது இந்த நெட்வொர்க் சார்ந்தது.

பிராமணத்தன்மை என்று ஒன்றைச் சுட்டுகிறோமே அது ‘நான் ஆதென்டிக்’ என்கிற உளப்பாங்கில் அமைந்தது. பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல இந்து மதத்திலே, சடங்கிலே, நம்பிக்கையிலே தன்னைக் கொண்டதல்ல அது. இந்த உளப்பாங்கை யார் அடைந்தாலும் அதில் அதில் பிராமணத்தன்மையின் நெட்வொர்க் இணையத் தொடங்கிவிடும். இந்த உளச் சீக்குக்குத் தனிப்பட்ட பிராமணர்களைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. அவர்கள் காலம்காலமாகப் பெற்றுவரும் திருச்சிறப்பு அது. இங்கே பொதுவில் பேசுகிற பல பிராமணர்களின் குரலில் இந்த ‘நான் ஆதென்டிக்’ என்னும் தன்மையைக் காணமுடியும். அறிவுஜீவிகளும் இதில் விலக்கில்லை.

பிராமணர்களும் இஸ்லாமியர்களும்

குடும்ப நம்பிக்கைகளுக்கு இவ்வளவு நம்பகத்தன்மையான ஆதென்டிக் தன்மையைக் கொண்டிருக்கக்கூடிய இருபெரும் சமூகங்கள் என்று பிராமணச் சமூகத்தினரையும் இஸ்லாமியர்களையும் சொல்லலாம். இவர்கள் இருவருமே பொது வெளியிலும் தங்கள் குடும்ப நம்பிக்கைகளைக் கொண்டு செலுத்த விரும்புவார்கள். அவர்கள் குடும்ப நம்பிக்கைகளை அதிகாரத்திடம் மட்டுமே கைவிட்டுப் பணிக்கிறார்கள். உதாரணத்துக்கு ஜெயலலிதாவிடம் இவர்கள் காட்டிய பணிவை நினைவுகூரலாம்.

விஜயேந்திரருக்குப் பொது யோக்கியதை தெரியாது என்று இங்கே சமூக ஊடகங்களில் ஒரு வாதத்தை அப்பாவித்தனமாக முன்வைக்கிறார்கள் பாருங்கள். வேடிக்கையாக இருக்கிறது. பஸ்ஸில் பயணித்தால் சைவ உணவென்றால் ஆரிய பவன் போக வேண்டும், ரயில் டிக்கெட் எடுக்க இப்போது தட்கல் வசதி உள்ளது, தாய்ப்பால் குடிக்கத் தாயின் மார்பில் வாய் வைக்க வேண்டும், கழிவறையில் திரும்பக் கை கழுக வேண்டும் என்றும், இன்ன பிறவற்றையும் ஜெயேந்திரர்களுக்கு எப்போது கற்றுத் தரப் போகிறீர்கள் பிராமணர்களே?

தமிழ் பிராமணர்களில் பெரும்பாலானோர் தமிழ் வாழ்க்கை, அரசியல், சமூகம், உரிமை என அனைத்தையும் வெறுக்கிறார்கள். ஏனெனில் இதனுடன் இணைந்து தங்களுக்கு ஓர் அடையாளமில்லை என்றுணர்கிறார்கள். எப்போதும் அதற்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருக்கிறார்கள் என்பதன்றி இது வேறொன்றுமில்லை. பிராமணர்கள் இப்படி இருக்கக் கூடாது என்றும் நான் சொல்ல மாட்டேன். அவர்களுக்கு அதற்கான சமூகவியல் காரணங்கள் இருக்கலாம். அப்படியிருப்பது வெளிப்படையாக இருக்குமெனில் எவ்வளவு நன்றாக இருக்கும்?

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018