மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: நீதித் துறையும் காட்சிப் பிழைகளும்

சிறப்புக் கட்டுரை: நீதித் துறையும் காட்சிப் பிழைகளும்

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களில் நீதித் துறையில் ஊழல், உறவினர்களுக்குச் சலுகைகள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தன.

உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசாமிமீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு நாடாளுமன்றத்திலேயே அவருக்காக கபில் சிபல் வாதாடியதெல்லாம் கடந்த காலச் செய்திகள். மகாராஷ்டிரா போன்ற பல உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இன்றைக்கு முதன்முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வர், தலைமை நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டைப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வெளிப்படுத்தியது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மக்களுக்கான பரிகாரம் தரும் மூன்றாவது தூண் தன்னுடைய குறைகளை ஜனநாயகத்தின் நான்காவது தூணிடம் முறையிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், கோகாய், குரியன் ஜோசப், மதன் லோகூர் ஆகியோரின் பத்திரிகையாளர்களின் சந்திப்புக்கான காரணங்கள்:

சஹாரா, பிர்லா குழுமங்கள், மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது லஞ்சம் கொடுத்த வழக்கு, வருமான வரித் துறை சோதனையில் சிக்கிய ஆவணங்களை வைத்து விசாரணை ஆரம்பித்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிர்தவ ராய் ஆகியோர் கடந்த ஜனவரி 2017இல் இவ்வாறு தீர்ப்பு எழுதினார்கள்: “முக்கியமான இடங்களில் உயர் பதவி வகிப்பவர்கள் மீது உதிரித் தாள்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் புலனாய்வு நடத்த இயலாது.” (“Constituted random loose sheets of paper on the basis of which high public functionaries occupying important offices cannot be subjected to investigation.”)

இதுகுறித்து, பிரசாந்த் பூஷன் (எதிராக வாதாடியவர்) கூறுகையில், “ஊழலுக்கு எதிராக நடைபெற்ற யுத்தத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்றச் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளி” என்றார். “2ஜி வழக்கு, நிலக்கரி முதலான வழக்குகளுக்குத் தனிநபர் விசாரணை அமைக்க முடிந்த உச்ச நீதிமன்றத்தால் இதற்கு அமைக்க முடியாமல்போனது ஏன்? நீங்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் சட்டம் உங்களைவிட உயர்ந்தது என்னும் நீதியின் அறத்தையே புதைத்துவிட்டது” என்றார்.

இதற்கிடையில் வருமான வரி செட்டில்மென்ட் கமிஷனில் சஹாரா குழுமம் தானாக முன்வந்து 1,217 கோடி ரூபாயைக் கொடுத்தபோதே தெரியவில்லையா, அங்கே தவறு நடந்திருக்கிறது என்றும் கேட்டார்.

நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைமை அதிகாரியாக இருந்த சவுத்ரி ஓய்வுபெற்ற உடனே மத்தியக் கண்காணிப்புக் குழு ஆணையர் (Central Vigilance Commissioner) பதவியில் நியமிக்கப்பட்டார். இவர் அதற்குத் தகுதியில்லாதவர் என்று தொடரப்பட்ட வழக்கில், சஹாரா பிர்லா குழுமம் செய்துள்ள தவறுகளுக்கு உடனிருந்தவர் என்று ஆதாரங்களை பிரசாந்த் பூஷன் கடந்த ஜனவரி 9இல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைமையில் இருந்துகொண்டு செயலாற்றாமல் 2014இல் சஹாரா குழுமத்துக்கு உதவி செய்தார் என்று வாதிட்டார். ஜனவரி 11இல் வழக்கைத் தள்ளுபடி செய்து சஹாரா பிர்லா குழுமத்தைக் காப்பாற்றி, சவுத்ரி எதிரியான வழக்கை மட்டும் மூன்று ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுள்ளது, உச்ச நீதிமன்ற அருண் மிஸ்ரா அமர்வு.

சவுத்ரிதான் பண மதிப்பழிப்பு என்னும் பெரிய யோசனையைக் கொடுத்து 125 கோடி மக்களை ஒரே இரவில் நடுத்தெருவில் நிறுத்தியவர். இவ்வழக்கை அருண் மிஸ்ராவுக்கு வழங்கக் கூடாது என்றும், அடுத்த தலைமை நீதிபதியாக நீங்கள் வர இருப்பதால் நீங்களும் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும் ஜெகதீஷ்சிங் கேஹர் அமர்வில் கோரிக்கை வைத்தார்கள். நீதிபதி ஜெகதீஷ்சிங் கேஹர் ஒதுங்கிக்கொண்டு வேறு அமர்வுக்கு வழக்கை மாற்றச் சொன்னார். ஆனால், இறுதியில் மீண்டும் அருண் மிஸ்ரா அமர்வுக்கு வந்தது முதலே சிக்கல் ஆரம்பித்துவிட்டது.

மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கு

காமினி ஜெய்ஸ்வால் என்கிற மூத்த வழக்கறிஞர் தொடுத்த வழக்கு அவசர விசாரணைக்காகக் கடந்த நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி செல்லமேஸ்வர் முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றினார். ஐந்து நீதிபதிகள் அமர்வில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இருக்கக் கூடாது; கடந்த ஜனவரியில் (2017) இந்திய மெடிக்கல் கவுன்சில் வழக்கை அவர் விசாரித்துள்ளதால் இதில் அவர் விசாரிக்கக் கூடாது என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கோரிக்கை வைத்தார். இதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

ஆனால், அடுத்த நாளே (நவம்பர் 10) தலைமை நீதிபதி இதே வழக்கை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்து, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் என்பதை ரத்து செய்து உத்தரவிடுகிறார். அந்த உத்தரவில் “தலைமை நீதிபதிதான் அனைத்திலும் முதன்மையானவர். உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த நீதிபதியும் பெஞ்சை ஏற்படுத்த முடியாது” என்றும் சொல்கிறார்.

இதற்கு அடுத்த நாளே (நவம்பர் 11) ஒரு சுற்றறிக்கையை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. அதில் “ஒதுக்கப்படாத, பட்டியலிடப்படாத வழக்குகள் அனைத்தும் இனி, இந்தியத் தலைமை நீதிபதியின் முன்புதான் குறிப்பிடப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல் பழிவாங்கல்?

மூன்றாண்டுகளுக்கு முன்னர் சிபிஐ சிறப்பு நீதிபதியாக இருந்த லோயா நாக்பூர் சென்ற இடத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார். மே மாதம் பொறுப்பேற்ற பாஜக அரசின் முதல் பழிவாங்கல் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

2005இல் சொராபுதீனைப் படுகொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளி அமித் ஷாதான். 2014 ஜூலை முதல் முயற்சி எடுத்து நீதிபதியை வளைக்க முடியாமல் போகவே, டிசம்பர் 1ஆம் தேதி கொன்றுவிட்டார் என்பதே மும்பை வழக்கறிஞர் சங்கத்தின் குற்றச்சாட்டு.

மும்பையில் வழக்கு விசாரணையை மேற்கொண்ட லோயா, திருமணத்துக்காக நாக்பூர் சென்றபோது மரணமடைந்ததும் சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து விசாரிக்கத் தனிநபர் நீதிபதி வேண்டும் என்று மும்பை பத்திரிகையாளர் லோனே தாக்கல் செய்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சந்திரசூட், கவில்கர் அமர்வில் முதல் வழக்காக விசாரணைக்கு வருகிறது. விசாரித்த தீபக் மிஸ்ரா, வழக்கை இன்றே வேறு அமர்வு விசாரிக்கும் என்று கூறிவிட்டு, செல்லமேஸ்வருக்கு அனுப்ப வேண்டிய வழக்கை மீண்டும் அருண் மிஸ்ரா அமர்வுக்கே மாற்றுகிறார்.

இதுகுறித்து உடனே அவரை நேரில் அணுகி செல்லமேஸ்வர் உட்பட நான்கு பேரும் விளக்கம் கேட்க, பதில் இல்லை. இந்த நிகழ்வுகளின் வெளிப்பாடே நான்கு நீதிபதிகளும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்கள்.

தீபக் மிஸ்ரா, பாலி நரிமன், நாகேஸ்வர ராவ், அருண் மிஸ்ரா, சந்தான கவுடா, பானுமதி போன்றோர்மீது சந்தேகப் பார்வையும் ஏற்பட்டுவிட்டது.

இப்படியான நிலையில் உச்ச நீதிமன்றத்தின் சூழல் உள்ளது. இதற்கிடையில் நீதிபதிகளிடையே பிரச்னையைத் தீர்க்க பார் கவுன்சில் ஏழு பேர் கொண்ட குழு அமைத்தது. அந்தக் குழுவும் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பிக்கையைத் தெரிவித்தது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை.

அதிகரித்த அதிருப்தி

உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் நீதிபதிகள் அனைவரும் மதியம் ஒன்றாக உணவு உட்கொள்வது வாடிக்கையான நிகழ்வு. கடந்த வாரம் புதன்கிழமை சர்ச்சைக்குரிய நீதிபதிகள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆகியோர் அமர்ந்து பேசி நல்ல முடிவை எட்டுவார்கள் என எதிர்பார்த்த வேளையில், நான்கு நீதிபதிகளில் ஒருவரான செல்லமேஸ்வர் உடல்நலம் சரியில்லை என அலுவல் பணியில் ஈடுபடவில்லை.

மறுதினம் அதிருப்தி நீதிபதிகள் குரியன் ஜோசப், ரஞ்சன் கோகேய், மதன் பி. லோகுர் ஆகியோர் செல்லமேஸ்வர் இல்லம் சென்று பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரும் நீதிபதி செல்லமேஸ்வர் இல்லம் சென்று ஆலோசனை நடத்தினர். அந்தச் சந்திப்புகளில் தலைமை நீதிபதிகள் பணி ஒதுக்கீடு செய்வது குறித்த முடிவுகளில் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகச் செயல்பட வேண்டும் என அதிருப்தி நீதிபதிகள் கூறியுள்ளதாகவும் அதற்குத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

இதற்கிடையில் நீதிபதிகள் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறைப்படுத்தியிருக்கலாம்; ஒரு சிக்கலான சூழ்நிலையை உருவாக்கிவிட்டார்கள் என்றும் சிலர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை ‘இந்திய உச்ச நீதிமன்றம் - ஒரு தொடக்கம்’ என்ற ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழா புதுடெல்லியில் நடைபெற்றது. ஜார்ஜ் எச்.கட்போய்ஸ் எழுதிய இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், எம்.பி.லோக்குர், அரசியல் தலைவர்களான சல்மான் குர்ஷித், ஜெய்ராம் ரமேஷ், மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் இந்தப் பிரச்னை குறித்து நீதிபதி செல்லமேஸ்வர் பட்டும்படாமலும் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

ஜனநாயக நாடு உயிர்ப்புடன் இருக்க பாரபட்சமற்ற, சுதந்திரமான நீதித் துறை அவசியம். அவ்வகையான நீதித் துறை இல்லாவிட்டால் ஜனநாயகம் தழைக்காது. ஓர் அமைப்பு என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தைப் பற்றி ஆய்வு நடத்தப்பட வேண்டும். இந்த நீதிமன்றம் எடுக்கும் முடிவுகள் ஒட்டுமொத்த மக்களையும், அவர்களது வாழ்க்கையையும் பாதிக்கின்றன.

உச்ச நீதிமன்றம் என்பது, அரசியல் சாசனப்படி ஒட்டுமொத்த நீதித் துறைக்குமான கண்காணிப்பு நீதிமன்றம் அல்ல. ஆனால், நடைமுறையில் அந்த நீதிமன்றம் அத்தகைய பெரிய அளவிலான அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

அவற்றில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் போன்றவற்றில் நேர்முகமாகவும், உயர் நீதிமன்றங்களிலும் கீழமை நீதிமன்றங்களிலும் நீதி பரிபாலனம் தொடர்பான சட்டங்களை வகுப்பதில் மறைமுகமாகவும் உச்ச நீதிமன்றம் கொண்டுள்ள அதிகாரங்கள் அடங்கும்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்திருக்கும் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டியது அவசியம். இது உண்மையான பிரச்சினை. இதற்குத் தீர்வு காண வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டும் என்றார்.

இப்படி இந்திய நீதித் துறை சிக்கலில் இருக்கிறது.

தற்போது உச்ச நீதிமன்றத்தில் 50,000 வழக்குகளுக்கு மேல் தேங்கிக் கிடக்கின்றன. நீதிபதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை.

நீதிபதிகள்மீது குற்றச்சாட்டுகள்

மேலே குறிப்பிட்ட வி.ராமசாமி பிரச்னை நாடாளுமன்றத்துக்கு வந்ததிலிருந்து நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. கடந்த காலத்தில் மும்பை நீதிபதியாக இருந்தவருக்குச் சுற்றுலா நிறுவனம் ஒன்றுடனான தொடர்பு குறித்துப் பிரச்னை எழுந்தது. மற்றொரு நீதிபதி முல்லா, முகமதிய சட்ட நூல் வெளியிட்டு அது தொடர்பாக ஆதாயம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக நீதிபதிகள் மைசூர் சென்றபோது அவர்கள் கேளிக்கை அனுபவித்த முறை குறித்து விமர்சனங்கள் எழுந்தன. கன்னியாகுமரியில் ஒரு காற்றாலை நிறுவனர் விழா நடத்தியபோது அதில் நீதிபதிகள் கலந்துகொண்டது பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. தேவே கவுடா பிரதமராக இருந்தபோது அவரை அன்றைய தலைமை நீதிபதி ஒரு வழக்கு குறித்துச் சந்தித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. 1983 – 84இல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நடவடிக்கைகள் உளவு பார்க்கப்பட்டன என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. நீதிபதிகள் மீது லஞ்சம், தனிப்பட்ட ஒழுக்கக்கேடுகள், வீட்டுமனை ஒதுக்கீடுக்காக ஆட்சியாளரிடம் மண்டியிடுவது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

அவசர நிலை காலத்தில் பிரதமர் இந்திரா காந்தி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியாயப்படி பணி மூப்பு அடிப்படையில் நீதிபதி ஹெச்.ஆர். கண்ணாவை நியமித்திருக்க வேண்டும். ஆனால், நீதிபதி பெக், தலைமை நீதிபதியாகச் சட்டத்துக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டார். அதே காலத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளை வேறு மாநில உயர் நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்யும் முடிவையும் இந்திரா காந்தி அரசு மேற்கொண்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.இஸ்மாயில் இதற்கு முதல் பலிகடா ஆனார். ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பால்கோ (BALCO - Bharat Aluminium Corporation) வழக்கில் 1997இல் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று குறிப்பிட்டது பலவித சந்தேகங்களை எழுப்பியது. இப்படிப் பல தவறுகளை உச்சநீதிமன்ற விவகாரத்தில் சுட்டிக் காட்டலாம். நீதிபதி பி.டி.தினகரன், நீதிபதி பி.கே.ராய், நீதிபதி ஜே.பி. பர்த்திவாலா, நீதிபதி சௌமித்ரா சென் போன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சில வருடங்களுக்கு முன் இடஒதுக்கீடு குறித்து அன்றைய தலைமை நீதிபதி ஆர்.சி.லக்கோட்டி வெளியிட்ட கருத்துகளால் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி, உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் ஒன்றுக்கொன்று முட்டிக்கொண்டன. அன்றைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, சட்ட அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கடுமையான முறையில் குறிப்பிட்டனர். மக்களவைத் தலைவராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி நீதித் துறை தனது எல்லைகளை விட்டுத் தாண்டக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறினார். பண்டித நேரு பிரதமராக இருந்தபோது நிலச் சீர்த்திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தும்போது உச்ச நீதிமன்றம் தெரிவித்த ஆணைகளை எதிர்த்து மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் நாத்பாய் நாடாளுமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறையை அவையில் கடுமையாகச் சாடினார்.

மதிக்கப்படாத உத்தரவுகள்

பல மாநில அரசுகள் நீதிமன்றத்தின் ஆணைகளைக் கிடப்பில் போட்டுள்ளன. முல்லைப் பெரியாறு அணை (கேரளா அரசு), காவிரி நதி நீர் பங்கீடு (கர்நாடக அரசு) ஆகியவை குறித்த ஆணைகள் சம்பந்தப்பட்ட அரசுகளால் முழுமையாக ஏற்றுச் செயல்படுத்தப்படவில்லை. சட்லெஜ் - யமுனா கால்வாய் குறித்த ஆணைகளைப் பஞ்சாப் அரசு மதிக்காமல் நடந்துகொண்டதால் அதற்கு இன்னமும் தீர்வு காண முடியவில்லை. சட்லெஜ் பிரச்னையில் அரியானா, டெல்லி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்லி நகரத்தில் வணிக வளாகங்களை மூடுவது போன்ற வழக்கில் அரசும், பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருந்த பாலியும், நீதிமன்ற ஆணைக்கு எதிராக நடந்துகொண்ட விதம் சர்ச்சையைத் தூண்டியது. ஒருமுறை கேரள அமைச்சர் பணத்தின் கனத்தைக் கொண்டே நீதி கிடைக்கிறது என்று வெளிப்படையாகவே பேசினார். உத்தரப்பிரதேச முதல்வராக முலாயம் சிங் யாதவ் இருந்தபோது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் மகனுக்கு நொய்டாவில் வீட்டுமனை ஒதுக்கியது நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உளவு பார்க்கப்பட்டார்கள் என்று தொடங்கியதிலிருந்து இன்றுவரைக்கும் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளைச் சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது.

இப்படியான ஆரோக்கியமற்ற நிலையில் நீதித் துறை இருந்தால் மக்களுக்கு என்ன தீர்வு கிடைக்கும்?

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கே.எஸ். இராதாகிருஷ்ணன், செய்தித் தொடர்பாளர் - திமுக; இணையாசிரியர், கதைசொல்லி; நிறுவனர், பொதிகை - பொருநை கரிசல். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 26 ஜன 2018