மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: பயனளிக்காத நேரடிப் பரிமாற்றத் திட்டம்!

சிறப்புக் கட்டுரை: பயனளிக்காத நேரடிப் பரிமாற்றத் திட்டம்!

ஆகேஷ் ரஞ்சன்

புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தால் அதில் கட்டணக் குறைப்பும், சில பயன்களும் அடங்கியிருக்கும். அதே சமயம் முந்தைய முறைக்குச் சிறந்ததாகவும் இருக்கும். ஆனால், அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நேரடி பயன் பரிமாற்றம் (டி.பி.டி) என்ற திட்டம் மேற்கண்ட கொள்கைகள் எதையும் கொண்டிருக்கவில்லை. ஜார்க்கண்ட் மாநிலம் நாக்ரி பிளாக் பகுதியில் இந்த நடைமுறையின் கீழ் உணவு தானியங்களுக்கான மானியம் நீண்ட காலமாக வழங்கப்படவே இல்லை.

நிர்வாகத் தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததே இந்தப் பிரச்னை பரவியதற்குக் காரணமாகும். முந்தைய பொது விநியோகத் திட்டத்தில் (பி.டி.எஸ்) உணவு மற்றும் பொது வழங்கல் துறை கிராமங்களில் உள்ள விநியோகஸ்தர்கள் மூலம் உணவுப் பொருள்களை விநியோகம் செய்தது. அதன்பிறகு ரேஷன் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது இம்முறையில் நேரடி பயன் பரிமாற்ற முறையை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது. இதன்படி மானியத் தொகை போக மீதித் தொகையைக் கொடுத்து முந்தைய காலங்களில் மக்கள் தேவையான பொருள்களை வாங்கி வந்தனர். ஆனால், தற்போது நேரடி பயன் பரிமாற்றத் திட்டம் என்ற பெயரில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை செலுத்தப்படுகிறது. நீண்ட காலமாக வழக்கத்தில் இருந்துவந்த முறையை மாற்றி இம்முறையை ஆளும் மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது.

ஆனால், ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி மாவட்டத்தின் நாக்ரி பகுதியில் இந்தத் திட்டத்தில் பெருமளவில் முரண் காணப்படுகிறது. மத்திய அரசின் பணமில்லாப் பரிவர்த்தனை 2017ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, பொது விநியோகத் திட்டத்தில் நேரடி பயன் பரிமாற்றத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பணமில்லாப் பரிவர்த்தனைகள் நாடு முழுவதும் பல மடங்கு அதிகரித்தது. பயனாளிகள், வியாபாரிகள் என அனைவரும் வங்கிகள் மற்றும் வங்கி நடவடிக்கைகளுக்குக் கட்டாயமாகத் தள்ளப்பட்டுள்ளனர் என்றுதான் கூற வேண்டும்.

நாக்ரி பகுதி மக்களிடம் நிலவும் பெரிய பிரச்னை, முதலில் அவர்களுக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு விட்டதா என்பதே தெரிவதில்லை. நேரடிப் பயன் பரிமாற்றச் சேவையைப் பொறுத்தவரையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலேயே பணம் செலுத்தப்படுகிறது.

பயனாளிகளுக்கு மானியங்கள் குறித்த எந்தத் தகவலும் உடனடியாகக் கிடைப்பதில்லை. தொடக்கத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையிலான மக்கள் பணப்பரிமாற்றம் நடந்தவுடன் குறுஞ்செய்தி மூலம் தகவல் பெற்றனர். மற்றவர்கள் வங்கிக்குச் சென்றுதான் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதை அறிய முடியும். ஆனால், அவர்களால் அந்தப் பணத்தை எடுக்க இயலாது. பரிவர்த்தனை செய்ய இயலும் அளவிலான தொகை வங்கிக் கணக்கில் வரும்வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். சிறு தொகைகளை வங்கிக் கணக்கிலிருந்து எடுக்க வங்கிகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இது பயனாளிகளுக்கு வசதியற்றது என்பது மட்டுமின்றி வங்கி நடைமுறைகளுக்கு எதிரானதுமாகும்.

இதுமட்டுமின்றி நேரடி பயன் பரிமாற்றத்தின் மூலம் வங்கிக் கணக்கில் தொகையைப் பெற்றவர்கள் மிகவும் குறைவே. இப்பகுதியில் உள்ள மொத்த வங்கியில் 4, 5 வங்கிகளில்கூடப் பயனாளிகளுக்கு முழுமையாகப் பணம் கிடைக்கவில்லை. மேலும், பரிவர்த்தனை செய்வதற்கான கட்டணங்களையும் வங்கிகள் நிர்ணயித்துள்ளன. வங்கிக் கணக்குப் புத்தகங்களை அப்டேட் செய்வதற்கான வசதிகளையும் பெரும்பாலான வங்கிகள் முறையாகக் கொண்டிருக்கவில்லை. நாக்ரியில் உள்ள மக்கள் தோராயமாக மூன்று சிக்கல்களை இதில் எதிர்கொள்கின்றனர். முதலில் நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டத்தில் இணைய வேண்டும். இரண்டாவதாக, வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். பின்னர், வங்கிக்குச் சென்று வங்கிக் கணக்கில் மானியத் தொகை செலுத்தப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தச் சிக்கல்களையெல்லாம் எதிர்கொண்ட பிறகுதான் மானியத் தொகையைப் பெற இயலும்.

இப்பிரச்னை மூத்த குடிமக்களுக்கு மிகவும் மோசமாக உள்ளது. அதேபோல, பள்ளி செல்லும் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கும் வங்கிகளின் இத்தகைய நடைமுறைகள் சிரமம் ஏற்படுத்துவதாகவே உள்ளன. இவர்கள் ஒரே பணிக்காகப் பல்வேறு முறை வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் பள்ளிக்குச் சரியாகச் செல்வதிலும் தடை ஏற்படுகிறது. மேலும், இறந்தவர்களின் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை மற்றும் திருமணமான மகளின் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை போன்றவற்றை எப்படிப் பெறுவது என்ற குழப்பங்களும் இந்தப் பகுதி மக்களிடம் நிலவுகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் (என்.எஃப்.எஸ்.ஏ) கீழ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உட்பட அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகும். ஆனால், நேரடி பயன் பரிமாற்றத் திட்டம் அனைவருக்கும் உணவு கிடைப்பதைத் தடுக்கும். உதாரணமாக, இருவர் மட்டுமே உள்ள ஒரு குடும்பத்தில் ஒருவர் பெண் என்றால் அந்தக் குடும்பத்துக்கு அதிகபட்சமாகக் கிலோ ஒன்றுக்கு ரூ.5 வரை வழங்கப்படுகிறது. இதன்படி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் பணத்தை எடுக்க வங்கிக்குச் செல்ல ஆகும் செலவு சற்றுக் கூடுதலாக இருக்கும்.

ரேஷன் கடை விநியோகர்களும்கூட இந்தத் திட்டத்தால் மகிழ்ச்சியடையவில்லை. வங்கிகளுக்குப் பலமுறை அலைய நேரிடுகிறது. உணவுப் பொருள்களை விநியோகித்தல், பணத்தைச் சேகரித்தல் போன்ற பணிகளுக்கிடையில் தொடர்ந்து மாதம் முழுவதும் பலமுறை வங்கிகளுக்குச் செல்ல வேண்டியது இடையூறை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்தப் பிரச்னைகளெல்லாம் குடிமக்கள் ரொக்கப் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளும்போதுதான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இந்த மானியத் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டும் உள்ளனர்.

பிளாக் டெவலப்மென்ட் அதிகாரி (பி.டி.ஓ) ஜனவரி முதல் வாரத்தில் இந்தத் திட்டத்தில் 12,000 பயனாளிகள் உள்ளனர் என்றும், அதில் 9,000 பேர் வெற்றிகரமாகப் பணப் பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர் என்றும், 25 சதவிகிதம் விலக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியிருந்தார். ஆதார் எண் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு குறைகளின் அடிப்படையில் இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற குறைபாடுகள் பொதுமக்களின் குறைகள் மட்டும்தான் என்று கூறுவது நியாயமல்ல. இதில் உணவு மற்றும் பொது வழங்கல் துறையின் நிர்வாகக் குறைபாடுகளும் அடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாகப் பலருக்கு மானியம் கிடைக்கவில்லை என வங்கிகளிலும், பிளாக் டெவலப்மென்ட் அதிகாரியிடமும் பொதுமக்கள் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர். இதையடுத்து நீக்கப்பட்டவர்களையும் இணைக்க வேண்டுமென்று ஜார்க்கண்ட் மாநிலத் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஆதார் அட்டை இல்லாததால் உணவுப் பொருள்கள் கிடைக்காமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டினிச்சாவால் உயிரிழந்த சம்பவங்களும் நடந்தேறின. ஏழை, எளிய மக்களுக்கும் தொழில்நுட்பத்தைக் கட்டாயமாக்கி அம்மக்களுக்கு ஒரு நெருக்கடியான சூழலை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: தி வயர்

தமிழில்: பிரகாசு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018