மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

விமர்சனம்: நிமிர் – மூலப் படத்தின் ஆன்மா எங்கே?

விமர்சனம்: நிமிர் – மூலப் படத்தின் ஆன்மா எங்கே?

மதரா

திலீஷ் போத்தன் இயக்கத்தில் மலையாளத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் ‘மகேஷிண்ட பிரதிகாரம்’. இந்தப் படத்தை ‘நிமிர்’ என்னும் பெயரில் இயக்குநர் ப்ரியதர்ஷன் தமிழில் மறு ஆக்கம் செய்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலின், பார்வதி நாயர், நமீதா பிரமோத், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சமுத்திரக்கனி நடிப்பில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

மகேஷிண்ட பிரதிகாரம் பகத் ஃபாசில் நடிப்பில் ரசிகர்களிடையேயும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற படம். சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் பெற்றது.

‘மகேஷின் பழிவாங்கல்’ என இதன் தலைப்பைத் தமிழில் மொழிபெயர்க்கலாம். பழிவாங்கல் என்ற உடனே ரத்தம் தெறிக்கக் கதாநாயகன் வில்லனைப் பழிதீர்க்கும் கதையாக இருக்குமோ என்று எண்ணிவிட வேண்டாம். நமது அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக நாம் எதிர்கொள்ளும் சிறிய பிரச்னைகளுக்காக எடுக்கும் அற்பத்தனமான சபதங்களையும் அதற்காகப் பழிவாங்க முயல்வதையும் வாழ்வின் இயல்பான ஏற்ற இறக்கங்களையும் நினைவுபடுத்தும்விதமாக மகேஷ் என்ற கதாபாத்திரம் வந்துசெல்கிறது.

உண்மையில் மகேஷ் கதாபாத்திரத்தைவிட, படம் அதிகம் காட்சிப்படுத்தியது கதை நிகழும் இடுக்கி நிலப்பரப்பையும் அதன் மனிதர்களையும்தான். மிக முக்கியமாக, கதாபாத்திரங்களின் குணாதிசயங்களைக் கறுப்பு வெள்ளையாகப் பகுக்காமல் சூழ்நிலைகளை முன்வைத்து எடுக்கப்படும் முடிவுகளால் வரையறுத்திருப்பது எளிதில் பார்வையாளர்களை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. பிரதான வேடத்தில் நடித்தவர்கள் முதல் சிறிய கதாபாத்திரத்தில் வந்து சென்றவர்கள் வரை மிகையில்லாத நடிப்பால் ஈர்த்தனர். இந்த இயக்குநரின் அடுத்த படமான தெண்டி முதலும் திருக்காட்சியும் படத்திலும் இதே தன்மைகளைக் காண முடியும்.

மலையாளம், இந்தி திரையுலகில் குறிப்பிடும்படியான பல படங்களை ரீமேக் செய்த ப்ரியதர்ஷன் இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்கிறார் என்ற தகவல் மனதினுள் ஓர் எதிர்பார்ப்பையும் சிறு பயத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியது.

நகலெடுப்பதும் படைப்பூக்கத்துடன் மறு ஆக்கம் செய்தலும்

நாவல், சிறுகதை, திரைப்படம் என எந்த கலைப்படைப்பாலும் ஈர்க்கப்பட்டு அதைத் திரைப்படமாக உருவாக்கும்போது மூலப்படைப்பை அப்படியே நகலெடுக்க வேண்டிய அவசியமில்லை. அதன் ஆன்மாவை உள்வாங்கிக்கொண்டு தனது விருப்பத்துக்கும் கலை ரசனைக்கும் ஏற்ப மாற்றி உருவாக்கும் உரிமை அந்தப் படைப்பாளிக்கு உண்டு. நிமிர் திரைப்படத்திலும் சில மாற்றங்கள் செய்து ப்ரியதர்ஷன் உருவாக்கியுள்ளார். ஆனால், அதன் ஆன்மா சிதையாமல் உருவாகியுள்ளதா... மூலப்படம் உருவாக்கிய அதிர்வுகளை நிமிர் ஏற்படுத்தியுள்ளதா என்பதை அலசுவது அவசியமாகிறது.

தென்காசிக்கு அருகில் உள்ள ஊரில் வசிக்கும் போட்டோகிராபர் ‘நேஷனல்’ செல்வம் (உதயநிதி). எதிர்பாராமல் நிகழும் ஒரு சம்பவத்தில் செல்வத்தை ஊரார்கள் முன் வெள்ளையப்பன் (சமுத்திரக்கனி) அடித்துவிடுகிறார். அவமானம் தாங்காமல், அவரைத் திரும்ப அடித்த பின்னரே செருப்பு அணிவேன் என முடிவெடுக்கிறார். அந்தச் சமயம் அவரது காதலும் கைகூடாமல் போகிறது. இறுதியில் சபதத்தில் ஜெயித்தாரா என்பதுதான் கதை.

மூலப்படத்தில் மகேஷ் என்ற கதாபாத்திரம் இங்கு செல்வம் என்ற பெயரில் வருகிறது. இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்துக் கதை அமைக்கப்பட்டாலும் மலையாளப் படத்தில் அந்த மண்ணின் மக்களின் வாழ்க்கை இயல்பாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும். அதை வசதியாக மறந்துவிட்டு, சம்பவங்களை மட்டும் மாற்றி அமைக்கப்பட்டதாகவே ‘நிமிர்’ படைக்கப்பட்டுள்ளது.

மலையாளப் படத்தின் தொடக்கப் பாடலில் இடுக்கியின் அழகும் வாழ்வும் நிறைந்திருக்கும். ஆனால், இதில் ஜாக்கெட் அணியாத இளம்பெண்கள் அணிவகுத்து நடனமாடுகின்றனர். கோவணம் அணிந்து வயல் வேலைக்குச் செல்கின்றனர். ப்ரியதர்ஷனின் காஞ்சிவரம் படத்தின் கால பின்னணியில் கோவணம் அணிந்து வேலைக்குச் செல்வதைக் காட்டியிருந்தால் ஏற்புடையதாய் இருந்திருக்கலாம். இந்தப் படம் சமகாலப் பின்னணியில் எடுக்கப்பட்டிருப்பதால் உறுத்தலாய் நிற்கிறது.

ஆன்மாவைத் தொலைத்த சித்திரிப்பு

குடும்ப நிர்பந்தத்தின் காரணமாகக் காதலி பிரிந்துசெல்வது இயல்பாகப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் மலையாளத்தில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கதாபாத்திரம் இங்கு ஏமாற்றியதாகக் காட்டப்படுகிறது. இறுதி வரை அந்தக் கதாபாத்திரத்தை நீட்டித்து க்ளைமாக்ஸில் சலிப்பான காமெடியுடன் முடித்திருப்பது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. படத்தின் ஆன்மாவை உள்வாங்காததே இந்தக் குறைகளுக்குக் காரணம்.

பிராமணர் கதாபாத்திரம் பனை ஏறி பதநீர் இறக்கும் வேலை செய்வதும் நம்பும்படியாக இல்லை. அங்கு பலா மரம் என்றால் இங்கு பனை மரம் எனத் தேர்ந்தெடுத்துக்கொண்ட இயக்குநர் கதாபாத்திரத்தின் பின்னணியைப் பதிவு செய்வதில் தடுமாறியுள்ளார். இறப்பு வீடுகளில் புகைப்படம் எடுக்கும் வழக்கமும் இப்போது இங்கு இல்லை. செருப்பு, கேமரா இரண்டும் கதையின் கதாநாயகன் சம்பந்தப்பட்ட பொருள்கள் என்பதால் அதை பிரேம் முழுக்க காட்டிக்கொண்டே செல்வது வலிந்து திணிப்பதாக உள்ளது. இப்படி எல்லா அம்சங்களிலும் புற வடிவங்களை, மேற்பரப்பைத் தாண்டிச் செல்லாத முயற்சியாகவே நிமிர் உள்ளது.

கதாநாயகியின் அப்பாவுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாக வகுப்பறையிலிருந்து கதாநாயகன் கூட்டிச் செல்வதையெல்லாம் இன்னும் எத்தனை படங்களில்தான் காட்டிக்கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. இதில் கவனிக்கவேண்டியது மலையாளத்தில் இந்தக் காட்சி இல்லை என்பதுதான். புதிதாகக் காட்சிகளைச் சேர்ப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், அவை புதிய காட்சிகளாக இருக்க வேண்டாமா?

உதயநிதி ஸ்டாலின் தன்னால் முடிந்த அளவு நடிக்க முயன்றுள்ளார். மலராக நடித்துள்ள நமீதா பிரமோத் கவனம் ஈர்க்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், சமுத்திரக்கனி, மகேந்திரன் தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.

தாமரையின் வரிகளில் தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்களைத் தனியாகக் கேட்கும்போது ஈர்க்கும்படி இருந்தாலும் படத்தோடு ஒன்றவில்லை. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாகப் படம் பிடித்தாலும் கதைக்களத்தின் நிலப்பரப்பின் ஜீவனைப் பார்வையாளர்களுக்குக் கடத்த முடியாமல் மேற்பரப்பிலேயே நிற்கிறது.

நாயகன் திருப்பி அடிக்கப்போகிறான் என்று தெரிந்ததும் அவனுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் ஒரு ஆட்டோவில் பின் தொடர்ந்து செல்வது ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது. ஆனால், இதில் ஒரே சமயத்தில் பத்து ஆட்டோக்களில் தொங்கிக்கொண்டு செல்வது, க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் மழை பெய்வது போன்ற காட்சிகள் தமிழ் சினிமா என்றால் இவையெல்லாம் இருக்க வேண்டும் என்னும் வெகுளித்தனமான நம்பிக்கையையே காட்டுகின்றன.

மூலப்படத்தின் ஆன்மாவை உறிஞ்சிவிட்டு வெறுமனே சக்கையை மட்டும் படைத்துள்ளார் ப்ரியதர்ஷன். படம் நிமிர்ந்து நிற்காமல் போவதற்குக் காரணம் இதுதான்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 26 ஜன 2018