மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

டிஜிட்டல் திண்ணை: சங்கர மட சர்ச்சை! எடப்பாடிக்கு வந்த டெல்லி போன்!

டிஜிட்டல் திண்ணை: சங்கர மட சர்ச்சை!  எடப்பாடிக்கு வந்த டெல்லி போன்!

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை இன்னும் ஓயவில்லை. சங்கர மடத்தின் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை என அவரைத் தமிழ்ச் சமூகம் வறுத்தெடுத்துவருகிறது. தமிழகத்தில் இந்து அமைப்புகள் தவிர மற்ற எல்லோருமே பெரும்பாலும் விஜயேந்திரருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இது சம்பந்தமாக பேசியவர்கள், ‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்தாததற்கு எல்லோருமே கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். நீங்களும் இதுக்கு கண்டனம் தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும். விஜயேந்திரர் தமிழை அவமதித்திருக்கிறார். அமைச்சர்கள் அதற்குக் கண்டனம் தெரிவிப்பது என்பது வேறு. முதல்வராக நீங்க கண்டிக்கணும்’ என்று சொன்னார்களாம். அதற்கு எடப்பாடியோ, ‘எடுத்தோம் கவுத்தோம்னு எதையும் செஞ்சுட முடியாது. நான் இது சம்பந்தமாக ஆலோசிக்கிறேன்..’ என்று சொல்லிவிட்டாராம். அதன் பிறகு, முக்கிய அமைச்சர்கள் சிலருடன் பேசி இருக்கிறார் எடப்பாடி.

‘சங்கர மடத்துக்கு நாம எப்படி கண்டனம் தெரிவிக்க முடியும்? ஆரம்பத்துல இருந்தே அம்மாவும் மடத்துடன் இணக்கமாகத்தான் இருந்து வந்தாங்க. இப்போ நமக்கும் அவங்க இணக்கமாகத்தான் இருக்காங்க. அது எல்லாத்தையும் விட, மடத்தை நாம் எதிர்ப்பது என்பது பிஜேபியை எதிர்ப்பது மாதிரி. இதை நாம செஞ்சா மத்திய அரசு நமக்கு அழுத்தம் கொடுப்பாங்க. அதனால் இந்த பிரச்னையை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. அமைச்சர்களிடம் யாராவது மீடியாக்காரங்க கேட்டால், பட்டும் படாமல் பதில் சொல்லி சமாளிச்சுக்கட்டும். நீங்க எது சொன்னாலும் அது அரசாங்கமே சொல்வது போல ஆகிடும். இந்த நேரத்தில் அது நமக்கு தேவை இல்லை. நீங்க எதுவும் இந்த விஷயத்தில் கருத்து சொல்லாமல் இருப்பதுதான் நல்லது’ என்று முதல்வரிடம் சொல்லியிருக்கிறார் மூத்த அமைச்சர் ஒருவர்.

‘அதுக்காக யாரு என்ன சொன்னாலும் நாம பேசாமல் இருந்தால், விமர்சனங்கள் வந்தபடியேதானே இருக்கும்?’ என்று எடப்பாடி கேட்டிருக்கிறார்.

அதற்கும் அமைச்சர் ஒருவர், ‘ விமர்சனம் வருவது என்பதை நாம் எப்பவும் தவிர்க்க முடியாது. அது வந்துகிட்டுதான் இருக்கும். அதுக்கு பயந்துகிட்டு இப்போ இந்த விஷயத்துக்கு கண்டன அறிக்கை தேவை இல்லை.’ என்று சொன்னாராம். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட எடப்பாடி, ‘உங்க எல்லோருடைய முடிவும் அதான் என்றால், எனக்கு ஓகே. ஆனால், என்கிட்ட தனிப்பட்ட முறையில் கேட்டால், இதைக் கண்டிக்கணும் என்றுதான் சொல்வேன்..’ என்று சொல்லியிருக்கிறார். எடப்பாடி இப்படி இரண்டு மனதாக இருக்கும் விஷயம் பிஜேபி கவனத்துக்கும் உடனே போயிருக்கிறது. டெல்லியில் இருந்து அடுத்த சில மணி நேரங்களில் எடப்பாடியைத் தொடர்புகொண்டு பேசினார்களாம்.

‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அவர் தியானத்தில் இருந்ததாக விளக்கம் சொல்லிவிட்டார். இனி அந்தப் பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். அரசாங்கமே கண்டிக்க வேண்டிய விஷயமல்ல இது. நீங்க இது சம்பந்தமாக எந்த அறிக்கையும் வெளியிட வேண்டாம். தமிழ்த்தாய் என்பது கடவுள்தானே... மடாதிபதியான விஜயேந்திரரும் கடவுளுக்கு இணையானவர்தான். கடவுள் வாழ்த்து இசைக்கும்போது கடவுள் உட்கார்ந்து இருப்பதில் என்ன தவறு இருக்கிறது? பொதுவாக தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான பிரசாரம் அதிகமாக இருக்கிறது. அதை எப்படி சரி செய்வது என்பது எங்களுக்கு தெரியும். நீங்கள் இந்த விஷயத்தில் அமைதியாக இருங்க...’ என்று சொல்லி இருக்கிறார்கள். எடப்பாடி எந்த பதிலுமே சொல்லவில்லையாம்” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

தொடர்ந்து, ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது ஃபேஸ்புக்.

“தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் உள்ள மிக முக்கியப் பிரமுகர் ஒருவருடன் போனில் பேசியிருக்கிறார். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டார்களாம். ‘ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளுங்கட்சி எங்கெல்லாம் பணம் பதுக்கியிருக்கு என்பதை ஆதாரங்களுடன் உங்களுக்கு சொல்லச் சொன்னோம். எங்க ஆட்களும் சொன்னாங்க. அப்பவே நீங்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அது எல்லாமே பொய்யான தகவல் என சொல்லிட்டீங்களாம். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப எவ்வளவோ வாய்ப்புகள் வந்தும் அதை நீங்க கண்டுக்கவே இல்லை..’ என வருத்தத்துடன் சொன்னாராம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. அதற்கு அந்த திமுக பிரமுகரோ, ‘ அதெல்லாம் முடிஞ்சு போனது. இப்போதான் அவங்க ஸ்டிராங்கா இருக்காங்க. எதுக்கு நாம இடையில் புகுந்து குழப்பத்தை உண்டாக்கணும். எனக்கு குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விருப்பம் இல்லை..’ எனச் சொல்லி இருக்கிறார். ‘வெண்ணையை கையில் கொடுத்தாச்சு. அப்படி இருந்தும் திமுக நெய்க்கு அலைஞ்சுட்டு இருக்கு...’ என்று சொல்லிச் சிரிக்கிறார்கள் தினகரன் ஆட்கள்” என்று ஸ்டேட்டஸ் முடிய... அதற்கு லைக் போட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 25 ஜன 2018