சென்னை போலீசிடம் குற்றவாளி நாதுராம் ஒப்படைப்பு!


சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளி நாதுராம் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். நாளை (ஜனவரி 26) அவரை போலீசார் சென்னை அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொளத்தூர் நகைக்கடை ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் பல லட்சம் மதிப்பிலான தங்க வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் கொள்ளையர்களை கைது செய்ய சென்னை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். அப்போது மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொலை செய்யப்பட்டது சர்ச்சைக்கு உள்ளாகியது.
இதற்கிடையே நகைக்கடையில் கொள்ளையடித்த நாதுராம் மற்றும் அவனது கூட்டாளியை குஜராத்தில் வைத்து ராஜஸ்தான் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நாதுராமை காவலில் எடுத்து விசாரணை நடத்த ஜேத்தரான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை தான் சுடவில்லை என்று நாதுராம் வாக்குமூலம் அளித்தார். அவர் போலீசிடமிருந்து தப்பிக்க 33 முறை இடம் மாறியது செய்யப்பட்டதும் தெரியவந்தது.
நகைக் கடை கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை கைது செய்து சென்னை அழைத்து வரக் கூடுதல் ஆணையர் ஜெயராம் தலைமையில் இணை ஆணையர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட 10 பேர் கொண்ட தனிப்படை நேற்று முன்தினம் (ஜனவரி 23) ராஜஸ்தான் விரைந்தது.