மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

மத்திய அமைச்சரைத் தமிழக அமைச்சர் மிரட்டினாரா?

மத்திய அமைச்சரைத் தமிழக அமைச்சர் மிரட்டினாரா?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக அமைச்சரவையைச் சேர்ந்த ஓர் அமைச்சர் மிரட்டியதாகக் கூறியுள்ளார் தமிழக பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணக் கட்டண உயர்வைக் கண்டித்து, கோயம்புத்தூரில் பாஜக சார்பில் நேற்று (ஜனவரி 24) போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜகவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உட்பட கோயம்புத்தூர் பாஜகவைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய எஸ்.ஆர்.சேகர், சில நாள்களுக்கு முன்பு கோவைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்திருந்தபோது, அவரை தமிழக அமைச்சர் ஒருவர் மிரட்டியதாகக் குறிப்பிட்டார்.

“மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வந்தபோது, தமிழக பாஜக சார்பில் அவரைச் சந்தித்துப் பேசினோம். பாதுகாப்புத் துறைக்கு ஒவ்வோர் ஆண்டும் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அந்த தொகையில் சுமார் 10 ஆயிரம் கோடியைக் கொண்டு கோவையில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் பூங்கா அமைக்கப்பட வேண்டும்; அதில் பாதுகாப்பு உதிரிபாகங்களைச் செய்வதற்கான பணிகள் அமையப்பெற வேண்டும். கோவையில் தொழில்நுட்பம் நன்கு தெரிந்த சிறுதொழில், சுயதொழில் விற்பன்னர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்வு கிடைக்க வேண்டும்; கோவையின் பொருளாதாரம் உயர வேண்டும் என்று நிர்மலா சீதாராமனிடம் வேண்டுகோள் விடுத்தோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, பாதுகாப்புத் துறை பூங்கா அமைப்பது பற்றி தெரிவிப்பதற்காக கோவை வந்திருந்தார் மத்திய அமைச்சர். மாலையில், அவர் இந்த திட்டத்தினை அறிவிப்பதாக இருந்தார். அதனைத் தெரிந்துகொண்டு, ஒரு தமிழக அமைச்சர் அவரை வரவேற்க வந்திருந்தார். அவருக்கு அந்த பூங்கா அமைய எவ்வளவு தொகை ஒதுக்கப்படும் என்று தெரியாது. அது தெரிந்திருந்தால், எங்கு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமோ, நேராக அங்கு சென்றிருப்பார். நாம் அறிவித்தால், அவர்கள் வாங்கிவிட்டுப் போய்விடுவார்கள்.

எனவே, எதுவும் சொல்லாமல் மாலையில் கொடிசியா மைதானத்தில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன். அவர் அறிவித்தவுடனேயே, என்னிடம் சொல்லாமல் எப்படி இதனைச் செய்யலாம் என்றார் அந்த உள்ளூர் அமைச்சர். வெறும் 20 கோடி ரூபாய்க் திட்டத்துக்கே, அந்த அமைச்சர் அவரை மிரட்டினார்.

காசு எங்கு இருந்தாலும், சுரண்டி எடுக்கக்கூடிய ஊழல் அரசாக தமிழக அரசாங்கம் இருக்கிறது. ஆகவேதான், இவர்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். ஆயிரம் பேருந்துகளை வாங்கியிருக்கிறார்கள்; ஆகவே, விலை உயர்த்தியிருக்கிறார்கள்” என்று பேசினார் சேகர்.

பாஜகவைச் சேர்ந்த சேகரின் இந்தப் பேச்சு, அதிமுகவில் பெரும்புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த 7ஆம் தேதியன்று கோவையிலுள்ள கொடிசியாவில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூலமாக ராணுவ தளவாடங்கள் தயாரிக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த திட்டத்தை அறிவிக்கவந்த அவரைச் சந்தித்துப் பேசினார் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் வேலுமணி. அப்போதே, அமைச்சர் வேலுமணி இந்த திட்டம் குறித்து நிர்மலா சீதாராமனிடம் பேசியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

கடந்த 22ஆம் தேதியன்று கோவை பாஜகவை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். அப்போது, அமைச்சர் வேலுமணியும் அங்கு இருந்தார். இந்த நிலையில், நேற்று இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் சேகர். இதனால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மிரட்டியது தமிழக அமைச்சர் வேலுமணி தானா என்ற கேள்வி எழுந்துள்ளது

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 25 ஜன 2018