மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

இலங்கை சட்டதிருத்தத்துக்கு எதிர்ப்பு!

இலங்கை சட்டதிருத்தத்துக்கு எதிர்ப்பு!

இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் அயல்நாட்டு மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று (ஜனவரி 24) சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று, ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.

இலங்கை மீன்வளத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை, ஜனவரி 24ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அந்நாட்டு அமைச்சர் மகிந்த அமரவீர. இந்த சட்டதிருத்த மசோதா மூலமாக, 15 மீட்டர் நீளமுள்ள படகிற்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சமும், 15-24 மீட்டர் நீளமுள்ள படகிற்கு 2 கோடியும், 24-45 மீட்டர் நீளமுள்ள படகிற்கு 10 கோடியும், 45-75 மீட்டர் நீளமுள்ள படகிற்கு 15 கோடியும், 75 மீட்டருக்கும் அதிமுள்ள படகிற்கு 17.5 கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்க முடியும். சம்பந்தப்பட்ட படகின் உரிமையாளரை நீதிமன்றத்திற்கு வரவழைத்து, ஒரு மாதத்துக்குள் வழக்கை தீர்க்க முடியும் என்று சட்ட திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த சட்ட திருத்தம் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்து, அவர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், மனிதநேயமற்ற ஒரு சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருப்பதாகவும், அதனை மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

”இந்தச் சட்டம் முழுக்க முழுக்க இந்திய மீனவர்கள் மீது அபாண்ட அபராதம் விதிக்கவும், இந்திய மீனவர்களின் உரிமைகளைப் பறிக்கவும் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதையும், இதனால் ஏற்படப்போகும் விபரீத விளைவுகளையும் மத்தியில் உள்ள பாஜக அரசு தாமதமாகவேனும் உணர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இச்சட்டத்தை திரும்பப் பெறுமாறு இலங்கை அரசை வலியுறுத்த, தூதரக ரீதியிலான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதன்பொருட்டு, தமிழக முதலமைச்சர் உடனடியாக டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து, முறையிட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்” என்று தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேபோல, இலங்கை அரசின் சட்டதிருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் அதிமுகவை சேர்ந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். தலைமைச்செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தவர், இந்த விவகாரம் குறித்துப் பேசினார்.

அப்போது, காட்டில் விலங்குகள் வேட்டையாடுவதைப் போலவே கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் எண்ணம் கற்பனையான எல்லைக்கோட்டின் மீது இருக்காது என்றார். கச்சத்தீவை மீட்பதுதான், எல்லைப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிரந்தரத் தீர்வு என்று தெரிவித்தார்.

“கடந்த ஆண்டுகளில், இரு நாட்டு மீனவர்களிடையே நான்கு கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது சுருக்கு மடி, இரட்டை மடி, ஊசி வலை ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்று இலங்கை மீனவர்கள் சொன்னதை, தமிழக மீனவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் இழுவலையை 3 அல்லது 5 ஆண்டுகளுக்குள் நிறுத்திவிட்டு, அதன்பிறகு தூண்டில் மூலம் மீன்பிடிப்பதாக உறுதியளித்தனர் தமிழக மீனவர்கள்.

இரு நாட்டு மீனவர்களும் சமரசத்துடன் ஒன்றாக மீன்பிடிக்க ஒத்துக்கொள்ளும் நேரத்தில், இப்போது எல்லை பிரச்சனையை எழுப்பியுள்ளது இலங்கை அரசு. பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலேயே, இந்த சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. கோடிக்கணக்கில் அபராதம், மீனவர் கைது, விசைப்படகு கைப்பற்றுவது என்றிருக்கும் இலங்கை அரசின் அறிவிப்புகளை, சர்வதேச மனித உரிமை மீறலாகத்தான் தமிழக அரசு பார்க்கிறது. பிரதமர் அளவில் அழுத்தம் கொடுத்து, இந்த பிரச்சனையில் மீனவர் நலன்களைக் காக்க நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தார் ஜெயக்குமார்.

அதன்பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தவர், ஏற்கனவே இலங்கை அரசு சட்ட திருத்தம் கொண்டுவரப்போவதாக அறிவிப்பு வந்தபோதே, தமிழக அரசு தனது எதிர்ப்பைத் தெரிவித்தாகக் கூறினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 25 ஜன 2018