மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

குட்கா விவகாரம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

குட்கா விவகாரம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தமிழக அரசு தயங்குவதைப் பார்த்தால் வழக்கை ஆழ்ந்து விசாரிக்க வேண்டும் என்று தோன்றுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் இன்று(ஜனவரி 25) விசாரணைக்கு வந்தது.

அப்போது,”லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை முடியும் நிலையில் உள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. மாநில அரசு அதிகாரிகள் பெரும்பான்மையானோர் மீது புகார் உள்ளது. குறைந்த மனித சக்தியை வைத்து சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க முடியாது. தேவைப்பட்டால் நீதிமன்றம் கண்காணிக்கலாம். விசாரணை அறிக்கைகளைத் தாக்கல் செய்கிறோம். இதே போல் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளைக் கண்காணித்திருக்கிறது” என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

குட்கா விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற மாநில அரசு தயங்குவது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், “தமிழக அரசு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயங்குவதால், இந்த வழக்கை ஆழ்ந்து விசாரிக்க வேண்டியுள்ளதாகத் தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் ஏதோ தீவிரம் அல்லது சிக்கல் இருப்பதாகவே தோன்றுகிறது” என்றும் கருத்துக் கூறினர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணை மீண்டும் தொடங்கியது. விஜிலன்ஸ் கமிஷனர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியின் கட்டுப்பாட்டுக்குள் வராது. நாங்கள் விசாரணை குறித்து டிஜிபியுடன் விவாதிக்கமாட்டோம். எனவே இந்த வழக்கை விஜிலன்ஸ் துறையே விசாரிக்க அனுமதிக்க வேண்டும். சிபிஐ விசாரணை தேவையில்லை” என வாதிட்டார்.

திமுக தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, “வருமான வரித் துறையிலிருந்து தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முறைகேட்டுக்குத் துணைபுரிந்த அனைத்து அதிகாரிகளையும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் பாதுகாக்க நினைக்கிறது. 4 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம் குட்கா ஊழல் புகாரில் தொடர்புடைய வழக்கு என்பதால் சிபிஐ விசாரிக்க இந்த வழக்கு உகந்தது.

குட்கா ஊழல் புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், காவல் துறையினர், பிற மாநில அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எனப் பலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்புள்ளது. இவர்களின் விசாரணையை நாங்கள் குறைசொல்லவில்லை. ஆனால் பிற மாநில அதிகாரிகள் மீது இவர்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால்தான் சிபிஐ விசாரணை கோருகின்றோம்.

ஹவாலா பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கலால் வரித் துறை தெரிவித்துள்ளதால், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வருகிறது; அதனால் சிபிஐதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள அதிகாரிகள் டிஜிபிக்கு அறிக்கை அளிக்க வேண்டியதில்லை என்றாலும், அவருக்குக் கீழான அந்தஸ்தில் உள்ளவர்கள்தான்; டிஜிபிக்குக் கீழ் உள்ளவர்களால் எப்படி டிஜிபிக்கு எதிராகவோ, அமைச்சருக்கு எதிராகவோ நடவடிக்கை எடுக்க முடியும்? எனவே சிபிஐ விசாரணையே சிறப்பானது” என்று குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 25 ஜன 2018