விடுமுறை அளித்தும் விடாமல் போராட்டம்!

கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையிலும், பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போடாடுகிறார்கள் மாணவர்கள். கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கட்டணத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மாணவ, மாணவிகள் கல்லூரிக்குத் திரண்டுவந்து வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 4 நாட்களாகத் தமிழகத்தின் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உள்ளிருப்புப் போராட்டம் என ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடக்கும் வகையில் தமிழகத்தில் சில கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்ட நிலையிலும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இன்று (ஜனவரி 25) வழக்கம்போல் கல்லூரிக்குத் திரண்டுவந்து, கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட மாணவர்கள்!
கல்லூரி விழாவுக்கு வந்த மதுரை மாவட்ட ஆட்சியரை, பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தியும், மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் மாணவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை பசுமலை மன்னர் கலைக் கல்லூரி மாணவர்கள், பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து நேற்று முன்தினம் (ஜனவரி 23) சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நடந்த கல்வீச்சில் 2 அரசுப் பேருந்துகள் சேதமடைந்தன. மாணவர்களைக் கலைக்கக் காவல் துறையினர் தடியடி நடத்தினர். மேலும் பேருந்தைச் சேதப்படுத்தியதாகக் கல்லூரி மாணவர்கள் 7 பேரைத் திருப்பரங்குன்றம் காவல் துறையினர் கைது செய்து நேற்று முன்தினம் நள்ளிரவில் விடுவித்தனர்.
40 மாணவர்கள் கைது!
கோவை காந்திபுரம் பகுதியில் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய வகையில் இருக்கும் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தடையை மீறியதாக 40 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
உள்ளிருப்புப் போராட்டம்!
பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர், வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் 4ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோன்று திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கல்லூரி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர், பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, வகுப்புகளைப் புறக்கணித்து 2ஆவது நாளாகக் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.