கதாநாயகனாகும் எஸ்எஸ்ஆர் பேரன்!


தமிழ்த் திரையுலகில் லட்சிய நடிகர் என்று அழைக்கபட்டவர் எஸ்எஸ்ஆர். இவரது பேரன் எஸ்எஸ்ஆர் ஆரியன் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
1952 முதல் 1980கள் வரை தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல்வேறு தளங்களில் இயங்கியவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். சுமார் 85 படங்களில் நடித்துள்ள எஸ்எஸ்ஆர் பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்களால் இன்றும் நினைவுகூரப்படுகிறார். திமுகவில் இணைந்து பணியாற்றிய இவர் புராண வேடங்களை ஏற்று நடிப்பதை மறுத்தார். இதனால் லட்சிய நடிகர் என அழைக்கப்பட்டார். தற்போது இவரது பேரன் ஆரியன் ‘கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தை ஜித்தன், 1 AM ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்ட ஆர்பிஎம் சினிமாஸ் நிறுவனத்தின் ராகுல் தயாரிக்கிறார். கதாநாயகியாக உபாசனா ராய் நடிக்கிறார். துணை நடிகர்களின் தேர்வு நடைபெற்றுவருகிறது. யா யா, பாடம் ஆகிய படங்களை இயக்கிய ராஜசேகர் இப்படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். சமூக வலைதளங்களினால் தவறான பாதைக்குள் செல்லும் இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஆபத்துகளை விவரிக்கும் படமாக இது உருவாகவுள்ளது.