இடம் மாறிய குழந்தைகள்: நீதிமன்றம் அனுமதி!

அசாம் மாநிலத்தில் பிரசவத்தின்போது இடம் மாறிய இரண்டு குழந்தைகள், வளர்ந்து அவர்களாகத் தீர்மானிக்கும் வரை அவர்களின் புதிய பெற்றோர்களுடன் இருக்கலாம் என்ற அசாம் நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் மங்கல்தோய் மாநிலத்தில் உள்ள சிறிய கிராமமான பட்லிச்சரில், பள்ளி ஆசிரியராகப் பணிபுரிபவர் சஹாபுதீன் அஹமத். இவரது மனைவி 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அதே மருத்துவமனையில் பக்கத்துக்குக் கிராமமான பேஜர்பராவில் வசிக்கும் அனில் போடோவின் மனைவியும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் அங்குள்ள செவிலியர்களின் அலட்சியத்தின் காரணமாக இரண்டு குழந்தைகளும் இடம் மாற்றப்பட்டுவிட்டன. இதனை அறியாத இரண்டு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். பின்னர் குழந்தைகள் வளர வளர தன் குழந்தையிடம் காணப்பட்ட வித்தியாசத்தைக் கண்டு சந்தேகமடைந்த சஹாபுதீன், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அரசு மருத்துவமனையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அப்போது இவர் குழந்தை பிறந்த அதே சமயத்தில் போடோ தம்பதியின் குழந்தையும் பிறந்தது தெரியவந்தது. பின்னர் சகாபுதீன் அவர்களைத் தொடர்புகொண்டபோது அவர்களும் இதே குழப்பத்தில் இருப்பது தெரியவந்தது.
இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் டிஎன்ஏ சோதனை நடைபெற்றது. அப்போது குழந்தைகள் இடம் மாறிய விவகாரம் வெளிச்சத்துக்குவந்தது. பின்னர் இது குறித்து அந்த அரசு மருத்துவமனையின் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சஹாபுதீன் அஹமத், அனில் போடோ இருவரும் இணைந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், "குழந்தைகளின் மீது நாங்கள் கொண்டுள்ள அன்பின் காரணமாக அவர்களை மாற்றிக்கொள்ள விருப்பமில்லை. அவர்கள் வளர்ந்து பெரியவனாகி, சொந்த பெற்றோருடன் வாழத் தீர்மானித்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தனர். அவர்களின் இந்த முடிவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இரண்டு குழந்தைகளும் வளர்ந்து அவர்களாகத் தீர்மானிக்கும் வரை அவர்களின் புதிய பெற்றோர்களுடன் இருக்கலாம் என்ற தீர்ப்பை வழங்கியது.