மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

சொதப்பிய இந்திய வீரர்கள்!

சொதப்பிய இந்திய வீரர்கள்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 187 ரன்களை மட்டும் சேர்த்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி தொடரையும் 2-0 எனக் கைப்பற்றி உள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 24) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ரோஹித் ஷர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கம் செய்யப்பட்டு அவர்களுக்குப் பதில் அஜிங்க்ய ரஹானேவும் புவனேஸ்வர் குமாருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல் மற்றும் முரளி விஜய் இருவரும் தேவையற்ற முயற்சி செய்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும், புஜாராவும் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் அடுத்த ராகுல் டிராவிட் என அழைக்கப்படும் புஜாரா அந்த பெயரைக் காப்பாற்றும் வகையில் விளையாடி அசத்தினார். ரஹானே அவர் சந்தித்த முதல் 53 பந்துகளுக்கு ரன் ஏதும் சேர்க்காமல் விளையாடினார். அதன் பின்னர் கோலியும், புஜாராவும் நிதானமாக ரன் சேர்க்கத் தொடங்கினர். எனவே, இந்திய அணி சீராக ரன் சேர்க்க தொடங்கியது. ஆனால், இந்திய அணி 97 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விராட் கோலி 54 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாத ரஹானே இந்த போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறினார். அதன்பின்னர் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடிய புஜாராவும் 179 பந்துகளில் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்திய அணியில் நிலைத்து நின்று விளையாட வீரர்கள் தவறியதால் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது. பார்த்திவ் பாடல் (2), ஹார்திக் பாண்டியா (0), மொஹமது ஷமி (8), இஷாந்த் ஷர்மா (0) என அனைவரும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிலைத்து நின்று விளையாடிய புவனேஸ்வர் குமார் 30 ரன்களைச் சேர்த்து அண்டிலே பெலுக்வாயா பந்தில் ஆட்டமிழந்தார். எனவே, இந்திய அணி முதல் நாள் முடிவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதன் தொடர்ச்சியாக முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஐடன் மார்க்கம் 2 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 ரன்களைச் சேர்த்து 1 விக்கெட்டை இழந்துள்ளது. தொடக்க வீரரின் விக்கெட்டை வீழ்த்திய புவனேஸ்வர் குமார் இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளார். நாளை (ஜனவரி 25) இந்திய அணி வீரர்கள் சிறப்பாகப் பந்து வீசி, தென்னாப்பிரிக்க அணியை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்துவார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018