மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

விஜயேந்திரர் மீது குவியும் புகார்கள்!

விஜயேந்திரர் மீது குவியும் புகார்கள்!

தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தபோது எழுந்து நிற்காத விஜயேந்திரர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

ஹெச்.ராஜா தந்தை ஹரிகரன் எழுதிய நூல் வெளியீட்டு விழா கடந்த 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால் காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்கவில்லை. ஆனால் நிகழ்வு முடிந்து தேசிய கீதம் பாடப்பட்ட நிலையில், அதற்கு மட்டும் எழுந்து நின்றார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திவிக, விசிக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் காஞ்சி, ராமேஸ்வரம், திருச்சி, சேலம் உள்பட பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலிடம் விஜயேந்திரர் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் புலிகள், நாணல் நண்பர்கள், ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் இந்தப் புகாரினை அளித்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அனுமன் சேனா அமைப்பைச் சேர்ந்த ராமபூபதி அளித்துள்ள இந்த புகாரில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை எஸ்பிளனேடு காவல்துறையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் துணைத்தலைவர் வழக்கறிஞர் துரைசாமி புகார் அளித்துள்ளார். அவர் இந்திய தண்டனைச் சட்டம் 174 பிரிவின் கீழ் விஜயேந்திரர் மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று (ஜனவரி 25) வெளியிட்டுள்ள அறிக்கையில், "புத்தக வெளியீட்டு விழா நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது ஆளுநர் உள்பட கலந்துகொண்டோர் அனைவரும் எழுந்து நின்றும், விஜயேந்திரர் உட்கார்ந்தபடியே இருந்தார். காரணம், தமிழ் நீஷ பாஷை, சமஸ்கிருதம்போல தேவ பாஷையல்ல என்பதால் அலட்சியத்துடன் தமிழை அவமரியாதை செய்துள்ளார். ஆனால் நாட்டுப் பண் இசைத்தபோது மட்டும் எழுந்து நின்று மரியாதை காட்டியுள்ளார்.மேலும் பெருந்தன்மையோடு, வருத்தமோ, மன்னிப்போ கேட்காமல், அதற்கு ஒரு பொருந்தா விளக்கத்தையும் காஞ்சி மடத்தின் சார்பில் விட்டிருக்கிறார்கள்

தள்ளாத வயதில்கூட, கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளில், கடவுள் வாழ்த்து பாடப்பட்ட நேரத்திலும், நாட்டுப் பண் இசைக்கப்பட்டபோதும் இருவரைப் பிடித்துக்கொண்டே எழுந்து நின்று அவை நாகரிகத்தினைப் பேணிக் காப்பார். எனவே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், "மடாதிபதிகளாக இருந்தால் அரசியல் சட்டம், தேசிய சின்னங்கள், மாநில மாண்புகள் இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டவர்களாக நடந்து கொள்வதும், அதை நியாயப்படுத்துவதும் சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது. விஜயேந்திரரின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டபோது, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுந்து நிற்காதது சங்கடப் படுத்துகிறது. இது தவறான எண்ணப்போக்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும் அபாயமிருக்கிறது.எதிர்காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018