கட்டண உயர்வு: கடையடைப்புப் போராட்டம்!


பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இன்று முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை அரசு இரு மடங்காக உயர்த்தியுள்ளதால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாகக் கடந்த 5 நாட்களாகத் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் சாலைமறியல் மற்றும் உள்ளிருப்புப் போராட்டம் போன்ற போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.
இந்நிலையில் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்தும், கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தக் கடையடைப்புப் போராட்டம் இன்று (ஜனவரி 25) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நகரில் உள்ள கடைகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை முழுமையாக மூடப்பட்டுள்ளன. அதே சமயம் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கிவருகின்றன.