மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

ஓட்டுநரைத் தாக்கிய போலீசார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

ஓட்டுநரைத் தாக்கிய போலீசார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

கார் ஓட்டுநர் மணிகண்டனைத் தாக்கிய புகாரில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த மணிகண்டன் (21), சென்னை தாம்பரத்தில் வசித்துவருகிறார். நேற்று மதியம் ஓஎம்ஆர் சாலையில் பயணியை இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன் சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது காரைப் போக்குவரத்து போலீசார் மறித்துள்ளனர். மணிகண்டன் சிறிது தூரம் சென்று காரை நிறுத்தியுள்ளார். போலீசார் மணிகண்டனிடம் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்துள்ளனர். பின்னர் சீட் பெல்ட் அணியாததற்கும், காரை நிறுத்தாமல் சென்றதற்கும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்து ஏதாவது ஒன்றுக்கு மட்டும் வழக்குப் பதிவு செய்துகொள்ளுமாறு மணிகண்டன் கேட்டுள்ளார். இதையடுத்து, அவரிடம் போக்குவரத்து போலீசார் பணம் கேட்டு மணிகண்டனையும், அவரது குடும்பத்தாரையும் தரக்குறைவாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் அருகில் இருந்த பங்க்குக்குச் சென்று பெட்ரோல் வாங்கி வந்து தன் மீது ஊற்றித் தீக்குளித்துள்ளார்.

உடல் முழுவதும் எரிந்து, ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மணிகண்டனுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் வசந்தாமணி தெரிவித்துள்ளார்.

தீக்குளிப்புக்கு முன்னர், அவர் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில் போலீசார் தன்னை மட்டுமின்றி தனது குடும்பத்தையும் தரக்குறைவாகப் பேசியதால் தீக்குளிக்கப் போகிறேன்” என்று பேசியுள்ளார்.

அவரது வாக்குமூலம் அடங்கிய வீடியோவைப் பெற்றுக்கொண்ட போலீசார், கார் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வன், போக்குவரத்து போலீசார் விஜயகுமார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர். அதன்படி உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கிடையே மணிகண்டனை நேரில் சென்று பார்த்த காவல் ஆணையர் விஸ்வநாதன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

மேலும், மணிகண்டனுக்கு நல்ல முறையில் சிகிச்சையளிக்குமாறு சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018