ஆணவக் கொலை வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி மரணம்!


உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த நீதிபதி அலமேலு நடராஜன் இன்று மரணமடைந்தார்.
கலப்புத் திருமணம் செய்துகொண்டதற்காகத் தலித் இளைஞரான சங்கர் உடுமலைப்பேட்டையில் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தீர்ப்பளித்தார். ஒரே நேரத்தில் 6 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது நாட்டிலேயே இதுதான் முதல் முறை.
ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த இந்தத் தீர்ப்பு ஆணவக் கொலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்தது.
இதுமட்டுமின்றி சில முக்கிய தீர்ப்புகளையும் வழங்கியுள்ள அலமேலு நடராஜன் இன்று (ஜனவரி 25) திடீரென மரணமடைந்தார். உடல் நிலை கோளாறு காரணமாகக் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நீதிபதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் போத்தனூரில் பிறந்த இவர், பள்ளிப் படிப்பை, திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளியிலும், சட்டப்படிப்பை திருச்சி சட்டக் கல்லூரியிலும் பயின்றுள்ளார்.