மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

உ.பி. இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவாரா?

உ.பி. இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவாரா?

உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்காவை போட்டியிட வைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, உத்தரப் பிரதேசத்திலுள்ள பல்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் கேசவ் பிரசாத் மவுரியா வெற்றி பெற்றார். அதேபோல, கோரக்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் யோகி ஆதித்யநாத். கடந்த ஆண்டு நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி கண்டது. உ.பி. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத்தும், துணை முதல்வராக கேசவ் பிரசாத் மவுரியாவும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து, இவர்கள் இருவரும் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இம்மாநிலத்தின் மற்றொரு துணை முதல்வராக தினேஷ் சர்மா இருந்து வருகிறார். வரும் மார்ச் மாதம் கோரக்பூர், பல்பூர் நாடாளுமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால், இங்கு வெற்றி பெற வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளது பாஜக.

இதனை முறியடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் இதே மனநிலையில் உள்ளன. இதனால், இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும்போது வாக்குச்சீட்டுகள் பயன்படுத்த வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திடம் இந்த கட்சிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

அதே நேரத்தில், உத்தரப் பிரதேசத்தில் தாங்கள் இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெற முயற்சித்து வருகின்றனர் அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள். இதற்காக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா வதேராவை களமிறக்க முடிவு செய்துள்ளனர். இதை வலியுறுத்தி, அவர்கள் ராகுலுக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

குறிப்பாக, அலகாபாத் பகுதியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் இந்த செயலின் பின்னணியில் உள்ளனர். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த தொகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவரது குடும்பத்தினருக்கு பல்பூர் தொகுதியோடு நெருங்கிய பந்தம் உண்டு என்பதும் இதற்குக் காரணம்.

உ.பி.யில் பாஜகவை தோற்கடித்தால், அது நாடெங்கும் எதிரொலிக்கும் என்கின்றனர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள். ஆனால், ராகுல் இந்த கோரிக்கையை ஏற்பாரா என்ற சந்தேகமும் காங்கிரஸ் கட்சியில் நிலவுகிறது.

“எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி புத்துணர்வு பெறும். பல்பூரில் பிரியங்கா போட்டியிட்டால், காங்கிரஸ் நிச்சயம் அமோக வெற்றி பெறும். முதலில், அவர் காங்கிரஸ் உறுப்பினராக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் உ.பி. செய்தித் தொடர்பாளர் கிஷோர் வர்ஷனே.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 25 ஜன 2018