மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

விஜயேந்திரருக்கு தமுஎகச கண்டனம்!

விஜயேந்திரருக்கு தமுஎகச கண்டனம்!

சென்னையில் நடந்த ஒரு பொது நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அவமதித்த செயலைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னையில் ஜனவரி 23ஆம் தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுநர் பன்வாரிலால் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால், அப்போது தனது இருக்கையிலேயே அமர்ந்திருந்த விஜயேந்திரர், தேசிய கீதம் இசைக்கும்போது மட்டும் எழுந்து நின்றார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத அவரது செயலுக்குச் சமூக வலைதளத்தில் மட்டுமல்லாது அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

“சென்னையில் ஜனவரி 23 அன்று நடைபெற்ற சமஸ்கிருத அகராதி வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நிற்காமல் அமர்ந்தவாறே இருந்திருக்கிறார். மேடையிலும் அரங்கத்திலும் இருந்த எல்லோரும் எழுந்து நின்றபோதிலும் அவர் மட்டும் அமர்ந்தே இருந்திருக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததன் மூலம் தமிழ் அவமதிக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் பொருள்.

இது செய்தியாக வெளிவந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ள பின்னணியில், சங்கர மடத்திலிருந்து ஒரு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சங்கராச்சாரிகள் எழுந்து நிற்பது மரபல்ல என்று அதில் கூறப்பட்டுள்ளது. தமிழை அவமதிப்பதை ஒரு மரபாகவே கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை.

‘கடவுள் வாழ்த்து பாடப்படுகிறபோது அமர்ந்த நிலையில் தியானம் செய்வது வழக்கம், அப்படித்தான் தமிழ்த்தாய் வாழ்த்தின்போதும் நடந்திருக்கிறது’ என்றும் மடத்தின் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. வருத்தம் தெரிவிக்கவோ இனி அவ்வாறு நடக்காது என்று கூறவோ முன்வருவதற்கு மாறாக, தவறுக்குப் புனித முலாம் பூசி நழுவுகிற யுக்தியாகத்தான் இந்தச் செயற்கையான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை எவரும் புரிந்துகொள்ளலாம்.

சமஸ்கிருதம்தான் தேவ மொழி, தமிழ் நீச மொழி என்ற தமிழைத் தாழ்வாகக் கருதுகிற பிராமணியக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவர் பொது மேடையில் இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறார் என்பது வெளிப்படை. கடவுள் வாழ்த்துக்கு இணையாக தமிழ்த்தாய் வாழ்த்தைக் கருதியது உண்மையானால், ஆலயங்களில் தமிழே இனி முதன்மையான வழிபாட்டு மொழியாக இருக்கும் என்று மடத்தின் சார்பில் அறிவிக்கப்படுமா? விஜயேந்திரர் செயலை நியாயப்படுத்துகிறவர்கள் இதை வலியுறுத்துவார்களா?

தமிழ் உணர்வாளர்கள் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், தனது ஆணவச் செயலுக்காக அவர் வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று தமுஎகச வலியுறுத்துகிறது. இனியும் மத பீட அதிகாரத்தின் பெயரால் இத்தகைய அவமதிப்புகள் நடவாது என்பதை மொழிகளின் சமத்துவத்தை மதித்திடும் அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமுஎகச வேண்டுகிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018