மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: நீட் - தற்கொலைகளையாவது தடுப்போம்!

சிறப்புக் கட்டுரை: நீட் - தற்கொலைகளையாவது தடுப்போம்!

பா.நரேஷ்

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வு சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் நடக்கும் என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியத்தின் இணையதளத்தில், “The syllabus for NEET (UG) 2018 will be exactly same as it was for NEET (UG) 2017. There will no change in the syllabus for NEET (UG)2018” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இந்த ஆண்டின் நீட் தேர்வு குறித்த செய்தியாக வைத்துக்கொள்வோம். கடந்த ஆண்டு நீட் தேர்வு குறித்த சர்ச்சைகளின்போது வெளிவந்த செய்திகளைப் பார்ப்போம். அதில் ஏதாவது ஒன்றுக்காவது தீர்வு எட்டப்பட்டிருக்கிறதா என்று பார்த்தோமானால், ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. தீர்வைப் பற்றி அடுத்து சிந்திப்போம். கடந்த ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாவது வந்திருக்கிறதா என்று பார்ப்போமா?

இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி? ப்ளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தாததற்கு என்ன காரணம்? சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதன் காரணம் என்ன? கல்வித்தரம் இல்லாத நிலையில் நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்? கிராமங்களுக்கும் நகரங்களுக்குமிடையே கல்வித்தரம் வேறுபடும்போது அனைவரும் சி.பி.எஸ்.இ தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும்?

யார் சொன்ன வார்த்தைகள்?

இந்தச் சரமாரியான கேள்விகளெல்லாம் எதிர்க்கட்சிகளோ, அரசியல் ஆதாயத்துக்காகப் பேசும் தலைவர்களோ கேட்டதல்ல. இவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரசிடம் கேட்ட கேள்விகள். சொல்லப்போனால் இந்தக் கேள்விகளெல்லாம் பொதுப்புத்தி உள்ள அனைவருக்கும் வரும் மிகச் சாதாரணமான கேள்விகள். இவைகூட புரிந்துகொள்ளப்படாமல் ஒரு நாட்டின் அரசு செயல்பட்டதால், நீதியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கேட்கப்பட்ட இந்தக் கேள்விகளுக்கு இன்று வரை எந்த பதிலும் இல்லை.

“நீட் தேர்வு தமிழகத்தைச் சேர்ந்த 98% சதவிகித மாணவ, மாணவிகளைப் பாதிக்கும். தமிழக கிராம மக்களின் சமூக, பொருளாதாரத்தைப் பாதுகாக்க நீட் தேர்வைத் தவிர்ப்பது அவசியமானது. நீட் தேர்வைத் தவிர்ப்பது பற்றி பிரதமர் மோடி விரைவில் அறிவிக்க வேண்டும்.”

இந்த வாதத்தை, மத்திய அரசின் அனைத்து செயல்பாடுகளையும் எதிர்பவர்களோ, சமூக விரோதிகளோ எவரும் சொல்லவில்லை.

தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்ன வாக்கியங்கள் இவை. அதுவும் தமிழகத்திலுள்ள மருத்துவத் துறை சார்ந்த பேராசிரியர்களின் கருத்துகளையும், சமூக செயல்பாட்டாளர்களின் ஆய்வுகளையும் கேட்டறிந்து, 20.04.2014இல் பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் உள்ள வாசகங்கள் இவை.

இன்னும் பதில் இல்லை

2018ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில், இன்றுவரை இந்தக் கடிதத்துக்கோ, இது எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டதோ, அந்த சூழ்நிலைகள் இன்று மாநிலத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டதா என்ற எந்த அடிப்படை வினாக்களுக்கோ எந்த பதிலும் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கிறது அதிகார அறிவிப்பு.

“மருத்துவச் சேர்க்கைக்கான தேர்வில் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும். மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை தொடர வேண்டும். நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரிடம் இருந்து விரைவில் ஒப்புதல் பெற்றுத் தர வேண்டும்” என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. குடியரசு தலைவர்கூட மாறிவிட்டார். இன்னும் கருத்து வேறுபாடு மாறவில்லை.

இவையெல்லாம் கடந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகள். நீட் தேர்வின்போது மாணவர்களைத் தீவிரவாதிகளைப் போல சோதித்ததும், ஏற்கெனவே பல குழப்பங்களுக்கு உள்ளாகியிருந்த மாணவர்களைத் தேர்வு எழுதுவதற்கு சில மணித்துளிகள் முன்பு, ஆடைகளைக் கிழித்து, ஆடைகளை அவிழ்த்து சோதித்ததும்... இத்தனை அவமானங்களைத் தாண்டியும் அவர்கள் தேர்வு எழுதியதும் பொன் எழுத்து நிகழ்வுகள்.

இவ்வளவு கேலி ஆட்டங்களுக்கும் மத்திய அரசின் பதில், “தேர்வுகள் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு சோதனைகளும்.”

சரிதான் என்று அனைத்து அவமானங்களையும் மாணவர்கள் ஏற்றுக்கொண்டு நேர்மையாக நடந்துகொண்டனர். ஆனால், தேர்வு நேர்மையாக நடந்ததா? இவ்வளவு வாய் பேசியவர்களின் செயல் எவ்வளவு அறிவிலித்தனமாக இருந்தது தெறியுமா?

“ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாளை உருவாக்கியது ஏன்?” என்ற கேள்வியை எழுப்பி, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தடை விதித்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி அளித்தது என்பது செய்தி. இந்தத் தேர்வில் எங்கே நேர்மையுள்ளது? ஒரே தேர்வு முறை என்பதை ஏற்றத் தாழ்வுகளை நீக்கிவிடும் தாரக மந்திரமாக நாடகமாடிய அதிகாரிகளுக்கு, ஒரே மாதிரியான வினாத்தாள் இருந்தால்தான் அது ஒரே மாதிரியான தேர்வு எனும் குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாமல்தான் செயல்பட்டனர் என்பது வெளிப்படை. அடுத்த நீட் தேர்வே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் இந்தக் கேள்விகளுக்கான விடையில்லை.

இந்த நிலையில் 2017 செப்டம்பர் 1ஆம் தேதி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அவரின் மரணம் எவ்வளவு பெரிய அரசியலாக்கப்பட்டது என்பதும், அதற்கான ஒரு சிறு மறுவினைகூட செய்யாமல் மத்திய அரசு நடத்திய நாடகமும் வரலாறு. இதன் உச்சம், அனிதாவின் தற்கொலையை அசிங்கப்படுத்திய கிருஷ்ணசாமியின் பேட்டிகள். அவர் தன் மகளை மருத்துவம் படிக்க வைக்க எவ்வளவு அசிங்கமான வேலைகளைச் செய்தார் என்பது வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

வழக்கம்போல மே மாதம் நீட் நடைபெறும் என்ற செய்தி வந்தாயிற்று. வழக்கம்போல இன்னொரு அனிதாவின் மரணம் இந்த செப்டம்பருக்குள் வரக்கூடும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 25 ஜன 2018