மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: ஐ.ஐ.எம்களும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரும்!

சிறப்புக் கட்டுரை: ஐ.ஐ.எம்களும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரும்!

சித்தார்த் ஜோஷி மற்றும் தீபக் மல்கான்

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்) கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களிடையே பன்முகத்தன்மைக்கான பற்றாக்குறை கடுமையாகவே இருக்கிறது. ஐ.ஐ.எம்களில் ஆசிரியர் பன்முகத்தன்மை குறித்து எங்களுக்குக் கிடைத்த புள்ளிவிவரங்கள் மிகவும் மோசமாகவே உள்ளன. 642 ஊழியர்களிடையே பெறப்பட்ட புள்ளிவிவரங்களின்படி வெறும் இரண்டே பேர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் (எஸ்.சி) சேர்ந்தவர்கள். ஒரே ஒருவர் பழங்குடி இனத்தைச் (எஸ்.டி) சேர்ந்தவர். 13 பேர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது ஓ.பி.சி பிரிவினர்.

பொது நிறுவனம் ஒன்றில் காணப்படும் இந்த நிலவரம், ஐ.ஐ.எம்களின் சட்டபூர்வமான தன்மையை பலவீனப்படுத்துகிறது. 40 ஆண்டு காலத்தில் வேண்டுமென்றே சேர்த்தல், தவிர்த்தல் நடைமுறைகள், அரசியல் அமைப்பு மற்றும் சட்ட விதிமுறைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்துவருவது ஆகியவற்றை இதில் நாங்கள் வரிசைப்படுத்தியுள்ளோம்.

ஐ.ஐ.எம்களின் ஆசிரியர் குறித்த மக்கள்தொகை கணக்கெடுப்பு வகை சமூகக் குழு பதிவுசெய்துள்ள புள்ளிவிவரங்களிலிருந்து நாங்கள் இந்தத் தகவல்களைப் பெற்றோம். 13 ஐ.ஐ.எம்களில் 500 ஆசிரியர்களின் புள்ளிவிவரங்கள் அடங்கியுள்ள பட்டியலின்படி நிரந்தர ஊழியர் குழு உள்ளது. மேலும், இது முன்னரே வெளியிடப்பட்ட மிகச் சிறிய தரவுத் தொகுப்பு அடிப்படையில் புதுப்பிக்கப்படுகிறது. 13 ஐ.ஐ.எம்களில் பணியாற்றும் 642 ஊழியர்களில் நான்கு பேர் மட்டுமே எஸ்.சி பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒரே ஓர் ஊழியர் மட்டுமே எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர். 17 ஆசிரியர்கள் ஓ.பி.சி வகையைச் சேர்ந்தவர்கள் என்று பதிவாகியுள்ளது.

பன்முகத்தன்மைப் பற்றாக்குறை

இந்தப் பட்டியல் இரண்டு காரணங்களுக்காக ஐ.ஐ.எம்களில் ஆசிரியர்களிடையேயான பன்முகத்தன்மைப் பற்றாக்குறையை மிகைப்படுத்திக்காட்டியுள்ளது. முதலில், அகபாதாபாத் ஐ.ஐ.எம் (ஐ.ஐ.எம்-ஏ) அனைத்து ஆசிரியர்களையும் ‘மற்றவர்கள்’ பிரிவின் கீழ் நிர்வாக முறையில் வகைப்படுத்துகிறது. எனவே, எந்த ஐ.ஐ.எம்மைச் சேர்ந்த எஸ்.சி அல்லது எஸ்.டி சமூகங்களைச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட இவர்களும் ‘மற்றவர்கள்’வகையிலேயே அடங்குவர். இரண்டாவதாக, அனைத்து ஐ.ஐ.எம்களின் தரவு ஆதாரங்கள் சுய அறிக்கையாகவே உள்ளன. மேலும், எஸ்.சி அல்லது எஸ்.டி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இவர்களது சமூகக் குழு அடையாளத்தை மறைப்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். மூன்றாவதாக, பல ஐ.ஐ.எம்கள் ஆரம்பத்தில் தங்கள் ஆசிரியர் குழுவின் சமூகப் பிரிவுகள் குறித்த தகவல்களை வெளியிட மறுத்தன என்பதால், இந்தப் பட்டியல் தயாரிக்க 15 மாத காலம் ஆனது. அனுபவ ரீதியிலான மற்றும் ஆதார அடிப்படையில் பார்த்தால் இந்த மூன்று தரவுகளில் காணப்படும் இந்த வரையறைகளை உடனடியாகச் சரிசெய்வதால் மட்டுமே தற்போது உள்ள எண்ணிக்கைகளில் பெரிய மாற்றங்கள் ஒன்றும் ஏற்பட்டுவிடாது. ஐ.ஐ.எம்-ஏவில் இடம்பெற்றுள்ள சமூக குழுக்களின் கலவை மற்ற ஐ.ஐ.எம்களிலிருந்து மிக அதிகமாக மாறுபட்டுள்ளது. அல்லது எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஐ.ஐ.எம்-ஏவைவிட மற்ற ஐ.ஐ.எம்களில் இருப்பதாக மிகப் பெரிய அளவில் தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன.

இந்த புள்ளிவிவரங்களின் வரையறைகள் ஐ.ஐ.எம்களில் காணப்படும் சமூக வேறுபாடுகள் உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இந்தியாவில் உள்ள மற்ற பொது நிறுவனங்களைப் போலவே ஐ.ஐ.எம்களிலும் ஒதுக்கப்பட்ட சமூகப் பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று சட்டபூர்மாகக் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறையாக உள்ளது. இவர்களது முதன்மை எம்.பி.ஏ திட்டத்தில் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்காக இடம் ஒதுக்குவது மூலமாக இது மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவில் மேல்தட்டு வர்க்க நிறுவனங்களில் ‘ஒதுக்கப்பட்ட பிரிவினர்’ எனக் குறிப்பிடப்படுவர்கள், பரவலாக இடங்களை அபகரித்துக்கொண்டவர்களாகவோ அல்லது அத்துமீறி வந்தவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இந்த நிலையில் வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட பிரிவைச் சேர்ந்த விரல்விட்டு எண்ணக்கூடிய ஊழியர்கள், தங்கள் சமூக அடையாளத்தை மறைத்தே வைத்திருப்பது என முடிவு செய்திருக்கலாம்.

சமூக நீதியும் சமூகத்தைக் கட்டியெழுப்புதலும்

சமூகக் குழுக்கள் சார்ந்த புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது சமூகத் தவறுகளை மேலும் ஆழப்படுத்தக் கூடியது என ஐ.ஐ.எம்கள் நம்புகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களின் போதாமைகளுக்கு இந்த நம்பிக்கையும் ஒரு காரணம். சமூகத்தின் பல பிரிவினரையும் உள்ளடக்குதல், பன்முகத்தன்மை ஆகிய அழுத்தங்களுக்கு எதிராகத் தங்களைத் தற்காத்துக்கொள்ள சமூகத்தை ஒன்றுபடுத்திக்கட்டி எழுப்புவது (சமூகக் கட்டமைப்பு) சார்ந்த வாதங்களை ஐ.ஐ.எம்கள் பயன்படுத்திக்கொள்கின்றன. இவர்களது இந்த வாதத்தில் உள்ள முரண்பாடுகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ் இந்த அமைப்புகளிடமிருந்து நாம் பெற்ற பதில்களில் தெளிவாகக் காணப்படுகின்றன. பல நிறுவனங்கள் வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்டுவரும் சமூகப் பிரிவினருக்கு முன்னுரிமை அளித்துப் பணியில் அமர்த்துவது என்ற ‘கொள்கை’யைக் கொண்டுள்ளன என்றாலும் இதே நிறுவனங்கள் சமூகப் பிரிவு குறித்த தகவல்களை, அவர்களாகவே தர முன்வந்தாலும்கூட கேட்க மாட்டோம் என்ற ‘கொள்கை’யையும் கொண்டுள்ளன.

ஐ.ஐ.எம்களில் பன்முகத்தன்மை குறைவாக இருப்பதற்கான பிரதான காரணம், வரலாற்று ரீதியாகச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரிடமிருந்து போதுமான அளவு தகுதிபெற்ற, ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் இல்லாமல் இருப்பதுதான் எனப் பொதுவாக இவை குறிப்பிடுகின்றன. மற்ற அனைத்து முக்கிய ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களைப் போலவே ஐ.ஐ.எம்களும்கூட ஆசிரியருக்கான திறமைகளை உருவாக்கும் மற்றும் பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனம்தான் என்ற உண்மைக்கு இது முரண்பாடாக உள்ளது. இங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கினர் அதே நிறுவனங்களில்தான் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர் என்பதை தற்போது பணிபுரியும் ஆசிரியர்களின் கல்வி பின்னணி தொடர்பான புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஐ.ஐ.எம்களில் முதல் எஃப்.பி.எம். அல்லது ஃபெலோ புரோகிராம் இன் மேனேஜ்மன்ட் எனக் குறிப்பிடப்படும் முனைவர் புரோகிராம்கள் 1971இல் தொடங்கப்பட்டன. அப்போது முதல் நாற்பதாண்டுகளில் ஐ.ஐ.எம்களில் 20ஆவது நூற்றாண்டில் ஆறு மிகப் பெரிய திட்டங்கள் நிறுவனப்பட்டு, 1,300க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட அறிஞர்கள் சேர்ந்தனர். ஒரு பொது நிறுவனமாக, ஐ.ஐ.எம்கள், சேர்க்கைக்கான ஓர் ஏற்றுக்கொண்ட நடைமுறை சாதனமாக ஓதுக்கீடுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்ற நிலையில் ஐ.ஐ.எம்கள் கூறிக்கொள்வதைப்போல, ஒதுக்கப்பட்டப் பிரிவினரிடமிருந்து போதுமான அளவில் ஆசிரியருக்கான தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பெறப்படவில்லை என்று எப்படிக் கூற முடியும்?

முனைவர் பட்டங்களுக்கான படிப்பில் ஒவ்வோர் ஆண்டும் சேர்க்கப்படும் மாணவர் எண்ணிக்கையில் எந்த குறைந்த அல்லது அதிகபட்ச வரையறை இல்லை என்றால், ஒதுக்கீட்டு அடிப்படையிலான சமூக நீதிக் கொள்கையைச் செயல்படுத்தப்பட முடியாது.

எப்படி பார்த்தாலும் எந்த ஆண்டிலும் சிறப்பு முனைவர் பட்டத்துக்கான இடங்கள் குறிப்பிட்ட அளவாக இருக்க முடியாது. முனைவர் பட்டச் சேர்க்கைகள், பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளைப் போல இட அடிப்படையில் என்ற சிக்கலில் முடக்கப்படக் கூடாது. இவர்கள் சமூகப் பன்முகத்தன்மை மற்றும் சமூகத்தின் பல பிரிவினரையும் உள்ளடக்குதலுக்கான உகந்த இலக்குகளை அரைமனதாகக் கொண்டிருந்தால்கூட போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், ஐ.ஐ.எம்கள் வேண்டுமென்றே வேறு காரணங்களால் பன்முகத்தன்மை அல்லது சமூக உள்ளடக்கம் என்ற விஷயங்களைக் குறித்து அலட்டிக்கொள்வதில்லை. இங்கு காத்திருப்புப் பட்டியல் என்ற இல்லாத ஒரு பட்டியலின் போர்வையில் முனைவர் பட்டப் படிப்புக்கான காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன.

ஐ.ஐ.எம்களில் முனைவர் பட்டப் படிப்புகளில் சமூக நீதி நடவடிக்கைளில் நடைபெறும் மோசடிகள் பொதுவாக, தற்போது பழைய நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி கிடைப்பதில்லை என்ற அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகின்றன. ஆனால், அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூரு (மிக அதிக முனைவர் படிப்புத் திட்டங்களைக் கொண்ட மிகவும் பழைமையான மூன்று நிறுவனங்கள்) ஐ.ஐ.எம்களில் முனைவர் பட்டப் படிப்புகளைப் பொறுத்தவரையில் உண்மை நிலவரம் வேறு. சமீப ஆண்டுகளில் இவை கணிசமான நேரடி அரசு நிதி ஆதரவுகளைப் பெற்றுள்ளன. ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள முனைவர் பட்டப்படிப்புத் திட்டங்களின் தன்மையைப் பார்க்கும்போது, சூத்திர கோட்டா அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பிற்பற்றுவது சாத்தியமோ அல்லது விரும்பத்தக்கதோ அல்ல. முனைவர் பட்டத்துக்கான மாணவர்களை நியமிக்கும்போது எண்ணிக்கை அடிப்படையிலான சேர்க்கையைப் பின்பற்றும் உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனம் ஒன்றுகூட இல்லை. மேலும், கடந்த முப்பதாண்டு காலத்தில் உலகம் முழுவதும் உள்ள மேனேஜ்மென்ட் கல்வி உள்பட மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் சமூகத்தில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்குவதற்கான தங்கள் உறுதிபாட்டை இரட்டிப்பாக்கி, முனைவர் பட்ட மாணவர் சேர்க்கையில் சமூகப் பன்முகத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முனைப்புகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த முனைப்புகள் எண்ணிக்கை அடிப்படையிலான ஒதுக்கீட்டுகளுக்கு மாற்று வழிமுறைகளை முன்னோடியாகக் கொண்டுள்ளன.

1990களின் ஆரம்பத்தில் நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் சமூகத்தில் ஆண் குழந்தைகளை விரும்பும் கலாசாரப் பாரபட்ச போக்கினால் அதிகரித்த கருக்கலைப்புகள் அல்லது பெண் சிசுக்கொலைகளால் எழுந்த ஆண் பெண் பாலியல் விகிதத்தில் பெண்கள் காணாமல் போய்விட்டதைக் குறித்து எழுதிய கட்டுரையில் “மிஸ்ஸிங் வுமன் (காணாமல் போன பெண்கள்)” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அதே போல ஐ.ஐ.எம்களின் இந்தப் போக்கை நாம் ‘மிஸ்ஸிங் ஸ்காலர்ஸ்’ என்ற வார்த்தையில் விளக்கலாம்.

2016-2017 கல்வி ஆண்டு வரை 1,300க்கும் அதிகமானவர்கள் ஐ.ஐ.எம்களில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இதில் ஐ.ஐ.எம்கள் சமூகப் பன்முகத்தன்மை பற்றாக்குறை விகிதம் காரணமாக, “காணாமல் போன அறிஞர்கள்”20%. அதாவது குறைந்தபட்சம் 270 பேர். அண்மையில் இயற்றப்பட்ட ஐ.ஐ.எம். சட்டம் பல பத்தாண்டுகளாகப் புறக்கணிக்கணிக்கப்படும் வெட்கக்கேடான நிலவரத்தை மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இனியாவது ஐ.ஐ.எம்கள் விதிமுறைகளைப் பின்பற்றுமா?

(கட்டுரையாளர் சித்தார்த் ஜோஷி ஐ.ஐ.எம். பெங்களூரு நிறுவனத்தில் ஃபெலோ, தீபக் மால்கன் ஐ.ஐ.எம். பெங்களூரில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.)

https://thewire.in/214608/iim-sc-st-obc-diversity/

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 25 ஜன 2018