மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: தொழில்நுட்பத்தால் மேம்படும் கடலோர மக்களின் வாழ்க்கை!

சிறப்புக் கட்டுரை: தொழில்நுட்பத்தால் மேம்படும் கடலோர மக்களின் வாழ்க்கை!

அஞ்சனா சுவாமிநாதன்

இன்றளவிலும் நேரம் ஒதுக்கி, கைகளால் அழகாக எழுதி, அஞ்சல் அட்டைகளில் நண்பர்களுக்குச் சிறப்பு சந்தர்ப்பங்களில் கடிதம் அனுப்புவதை வழக்கமாகவே கொண்டிருக்கிறேன். இன்றைய மின்னணு உலகில் தபால்காரர் சைக்கிள்கள் மூலம் தபால்களையும் கடிதங்களையும் கொண்டுசென்று விநியோகிப்பது குறைந்துள்ளது. தபால் அனுப்புபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதே இதற்குக் காரணமாகும்.

அண்மையில் கைகளில் அஞ்சல் அட்டைகளை வைத்திருந்த ஒரு தபால்காரரைச் சந்தித்தபோது நான் மிகவும் ஆச்சர்யமடைந்தேன். மிகவும் ஆர்வத்தோடு அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். இந்தக் கடிதங்களை வாராந்திர அஞ்சலாக ஸ்டார்ட் அப் நிறுவனம் அகுவா கனெக்ட் அனுப்புவதாக அவர் கூறினார். இதன்மூலம் அகுவா விவசாயிகளுக்குச் சிறந்த பயிற்சி கிடைக்கிறது. எனக்கு இதைப்பற்றி அறிய வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. ராஜமனோகர் சோமசுந்தரம் என்பவர்தான் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைத்து இதற்கான வழிகாட்டியாகத் திகழ்கிறார். பல்வேறு அகுவா விவசாயிகளையும் இணைத்துள்ளார்.

ராஜமனோகர் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கவில்லை. இவர் ஐ.ஐ.டி. கான்பூரில் பட்டம் படித்தவர். இவர் தொடர் தொழில்நுட்ப முனைவோராகச் செயல்படுகிறார். சிறந்த அனுபவத்துடன் இணையக் கட்டமைப்பு மற்றும் செல்போன் தொழில்நுட்ப ஊக்குவிப்புப் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைகளை அஞ்சல் அட்டைகளுக்குப் பயன்படுத்தி எப்படி அகுவா விவசாயிகளை இணைக்கிறார் என்பது குறித்து பேசியபோது, “நாங்கள் இதன் தொடக்கத்தில்தான் இருக்கிறோம். விவசாயிகளை அதிகளவில் இணைப்பதுதான் முதல் இலக்கு. இதன்மூலம் இவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் தொழிலை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்குவது மற்றும் பயிற்சியளிப்பது நோக்கமாகும்.

இவருடைய பணியால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இவருடன் பேட்டியும் தொடர்ந்தது.

“ஒரு நாள் ரயில் பயணத்தில் சஞ்சய் குமாரைச் சந்திக்க நேர்ந்தது. அது மிகவும் சிறப்பான பயணமாக இருந்தது. சஞ்சய் அகுவா விவசாயி. அந்தப் பயணத்தின் மூலம் அவர் எனக்கு நண்பராகவும், தொழில் பங்குதாரராகவும் இணைந்தார்” என்கிறார் ராஜமனோகர்.

அகுவா விவசாயம் என்றால் மீன் வளர்ப்பு, ஓட்டு மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு, மெல்லுடலிகள், நீர்வாழ் தாவரங்கள் ஆல்கா வளர்ப்பு ஆகியவற்றை நன்னீர் மற்றும் உப்பு நீரில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வைத்து வளர்ப்பதாகும். இது தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் மிகப் பிரபலமான வாழ்வாதார முறையாக விளங்குகிறது. கடல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (எம்.பி.இ.டி.ஏ) தகவலின்படி, 2016-17ஆம் நிதியாண்டில் இந்தியாவின் கடல் பொருள்கள் ஏற்றுமதி 5.8 பில்லியன் டாலராகும். நடப்பு நிதியாண்டில் இதன் மதிப்பு மேலும் அதிகரிக்கும்.

சஞ்சய் குமாருடன் பேசியதில், குறைந்த அளவிலான நிலம் வைத்துள்ள சிறு மற்றும் நடுத்தர அகுவா விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விளக்கினார். அவர்களுடைய பிரச்னைகளுக்கு வழிகண்டு அவர்களை ஊக்குவித்து அகுவா விவசாயத்துக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மற்ற துறைகளில் விவசாயிகள் சந்தை நிலவரம் பற்றியோ, ஏற்றுமதி நிலவரங்கள் குறித்தோ போதிய விழிப்புணர்வற்றவர்களாகவே இருப்பர். இடைத்தரகர்களின் ஆதிக்கம்தான் அத்துறைகளில் அதிகமாக உள்ளது. இதைத் தவிர்த்து விவசாயிகள் நேரடியாகப் பயன்பெறும் வகையில் அடுத்த இரண்டு மாதங்களைச் செலவிட்டு உதவ முடிவெடுத்துள்ளார். இதன்மூலம் அவர்கள் நேரடியாக ஏற்றுமதியாளர்களுடன் தொடர்பு கொண்டு வர்த்தகம் மேற்கொள்ள இயலும்.

இம்முயற்சியில் வங்கியாளர் சண்முக சுந்தரராஜும் இணைந்துகொண்டார். இவர்கள் இணைந்து அகுவா கனெக்ட் நிறுவனத்தை உருவாக்கினார்கள். இந்த நிறுவனம் விவசாயிகளுக்குச் சந்தை வாய்ப்பு, தரமான விதைகள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தியது. "தொடக்கத்தில் நாங்கள் செல்போன் செயலியை உருவாக்கினோம். ஆனால், செல்போன் செயலி விவசாயிகளுக்கு ஏதுவானதாக இல்லை. எனவே, நாங்கள் இலவச அலைபேசி சேவையை அளித்தோம். இந்தச் சேவையின் மூலம் விவசாயிகள் இந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு விளக்கங்களைப் பெறலாம். ஆனால், விவசாயிகளை அலைபேசி எண்ணுக்கு அழைத்துப் பேச வைப்பது சிரமமாக இருந்தது. அடுத்தகட்டமாக நேரடியாக சந்தித்துப் பேச வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இம்மூன்று முறைகளும் இயங்கிக் கொண்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து காகிநாடா 1,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால், ஒவ்வொரு வாரமும் அகுவா விவசாயிகள் சந்திப்பு தவறாமல் நடக்கிறது. கிராமப்புற இந்தியாவின் வேலைகள் எப்படி இயங்குகின்றன, அதற்கு எந்த வகையான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்பது குறித்து அறிய இது ஒரு சிறந்த அனுபவமாகும். இதன்மூலம் இவர்களின் உற்பத்திக்குக் குறைந்தபட்ச லாபம் கிடைப்பது உறுதியாகிறது. சந்தை தொடர்பான போதிய தகவல்கள் கிடைக்காமல் விற்பதால் தான் குறைந்தபட்ச விலை கிடைக்கிறது” என்றார்.

அகுவா கனெக்ட் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. விவசாயிகளை இதில் சேர்ப்பது ஜூலையிலிருந்து தொடங்கியது. இது சுமார் 600 அகுவா விவசாயிகளின் வாழ்வை மாற்றி, அவர்களின் லாபத்தை அதிகரிக்க உதவியுள்ளது. இந்த மையத்துக்கு ஒரு நாளைக்கு தற்போது 40 முதல் 50 அழைப்புகள் வருகிறது. அவர்கள் அகுவா விவசாயம் குறித்தும், உற்பத்தி குறித்தும் பல்வேறு சந்தேகங்களைக் கேட்கின்றனர்.

“எங்களுடைய கள முகவர்கள் தொடர்ச்சியாக விவசாயிகளுடன் இணைப்பிலேயே இருப்பார்கள். தரத்தை அதிகரிப்பது தொடர்பாக தொழில்நுட்ப உதவிகளை அவ்வப்போது செய்துகொண்டே இருப்பார்கள்” என்று ராஜமனோகர் கூறுகிறார். இவர் இப்போது அகுவா கனெக்ட் திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளார். இதன்படி தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி மற்ற மாநிலங்களுக்கும் இதனை விரிவுபடுத்துகிறார். “நாங்கள் குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் எந்தெந்த பகுதிகளில் அகுவா விவசாயிகளுக்கு உதவிகள் தேவைப்படுகிறதோ அந்தப் பகுதிகளுக்கும் இத்திட்டத்தைக் கொண்டு செல்லவுள்ளோம். இதைச் செய்து முடித்தால் மேற்கு வங்கத்தில் உள்ள அகுவா விவசாயிகள் 1,900 கிமீ தொலைவுக்கு அப்பால் உள்ள பாண்டிச்சேரி பண்ணைகளில் இருந்து கூட எளிதில் விதைகள் பெறலாம்” என்றார்.

நன்றி: தி பெட்டர் இந்தியா

தமிழில்: பிரகாசு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 25 ஜன 2018