சச்சின் படத்துக்குச் சர்வதேச விருது!

கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு ஈரான் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில், விளையாட்டை மையமாகக்கொண்ட சர்வதேச திரைப்படத் திருவிழா நடைபெற்றது. இதில் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன.
அண்ணனின் முயற்சியால், கிரிக்கெட் பயிற்சியாளர் ராமாகாந்த் அச்ரேக்கரிடம் சச்சின் பயிற்சி பெறத் தொடங்குவதிலிருந்து, பயிற்சியாளரின் பல ஒரு ரூபாய் பரிசுகளைப் பெற்றது, வினோத் காம்ப்ளியுடன் இணைந்து விளையாடி சாதனை படைத்தது, சிறு வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனது, அஞ்சலியுடனான காதல், குழந்தைகள், உலகக் கோப்பையைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம், கடைசிப் போட்டி என சச்சினின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் தெரிந்துகொள்ளும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு மே மாதம் வெளியான இந்தப் படம் ஈரான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ஆவணப் படங்களின் பிரிவில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது. அதில் சிறந்த இயக்குநருக்கான விருதை படத்தின் இயக்குநர் ஹெல்மர் ஜேம்ஸ் எர்ஸ்கினும் (Helmer James Erskine) சிறந்த படத்துக்கான விருதை அதன் தயாரிப்பாளர் ரவி பகத்சாண்ட்காவும் (Ravi Bhagchandka) பெற்றிருக்கிறார்கள்.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர் ஹெல்மர், “இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் பற்றிய கதையில் என்னுடைய பணி உலகளவில் பாராட்டப்பட்டதற்குப் பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் நடிகர் சல்மான்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி, வசூல் சாதனை படைத்த ‘சுல்தான்’ படத்துக்கு மூன்று விருதுகள் அளிக்கப்பட்டன. சல்மான் கான் மல்யுத்த வீரராக நடித்திருந்த இந்தப் படம் வெளியான மூன்று நாட்களிலேயே ரூ.105 கோடி வசூல் செய்தது. இந்தப் படத்தில் மல்யுத்த வீரராக தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சல்மான் கானுக்குச் சிறந்த கதாநாயகனுக்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான விருதை அனுஷ்கா சர்மா பெற்றார். இதேபோல், சிறந்த இயக்குநருக்கான விருதை சுல்தான் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் தட்டிச்சென்றார்.