மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

ஆண்டாளைத் தொடர்ந்து தமிழ்த்தாய்!

ஆண்டாளைத் தொடர்ந்து தமிழ்த்தாய்!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் இருந்த விஜயேந்திரரின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

சென்னையில், நேற்று (ஜனவரி 23) நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுநர் பன்வாரிலால் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால் அப்போது தனது இருக்கையிலேயே அமர்ந்திருந்த விஜயேந்திரர், தேசிய கீதம் இசைக்கும்போது மட்டும் எழுந்து நின்றார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத அவரது செயலுக்கு சமூக வலைத்தளத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 24) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவின் தந்தையார் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது ஆளுநர் எழுந்து நிற்கிறார். ஆனால், விஜயேந்திர சுவாமிகள் எழுந்து நிற்காதது கண்டிக்கத்தக்கது. திமுக சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதுவும் ஆளுநருக்கு முன்னால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது, தமிழ்த்தாயை அவமானப்படுத்தியதாக நான் கருதுகிறேன். தியானம் என்பது அவருடைய விருப்பம். அவர் எப்படி வேண்டுமானாலும் தியானம் இருக்கலாம். ஆனால், தேசிய கீதம் இசைக்கிறபோது ஏன் தியானத்தில் இல்லை? ஒரு தவறு நடந்துவிட்டது. அதனை மறைப்பதற்காகவே இப்படி தந்திரமாக செய்திகள் பரப்பப்படுகிறது” என்று தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

தமிழர்களின் தேசிய கீதம்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, மேடையிலிருந்து காஞ்சி மடத்தின் இளைய அதிபர் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் இருக்கையில் அமர்ந்திருந்து தமிழை அவமரியாதை செய்துள்ளார். உலகத்தின் மூத்த மொழியான தமிழை விஜயேந்திரர் திட்டமிட்டு அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சங்கராச்சாரியார்கள் எழுந்து நிற்கும் வழக்கம் இல்லை என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டபோது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாகவும், அதனால்தான் விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்றும் சங்கர மடத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. தற்காப்புக்காகப் பெயரளவில் வைக்கப்பட்ட வாதமாக இது தோன்றுகிறதே தவிர, இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்த்தாய் வாழ்த்தின்போது தியானம் செய்ததாக கூறப்பட்ட அவர், தேசிய கீதம் இசைக்கப்படும்போது தியானம் செய்யாமல் எழுந்து நின்று மரியாதை செலுத்தியதை மட்டும் புரிந்துகொள்ள முடியவில்லை.

மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துதான் தமிழர்களின் தேசிய கீதம் ஆகும். தமிழின் சிறப்புகளைப் பட்டியலிடும் தமிழ்த்தாய் வாழ்த்து அனைத்து அரசு விழாக்கள், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள், ஆளுனர், முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கும் விழாக்களில் இசைக்கப்படுவது வழக்கம். ஒரு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்போது அவ்விழாவில் பங்கேற்கும் அனைவரும் எழுந்து நிற்பதுதான் மரபும், மரியாதையும் ஆகும். இதிலிருந்து யாருக்கும் விலக்களிக்க முடியாது.

சென்னையில் நேற்று நடந்த விழாவில் கூட, தமிழராக இல்லாவிட்டாலும், தமிழின் சிறப்பை அறிந்து அதைக் கற்றுவரும் ஆளுனர் புரோகித்தும், மூத்த தமிழறிஞரான சாலமன் பாப்பையாவும் முதுமையையும் பொருட்படுத்தாமல் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தினர். அவ்வாறு இருக்கும்போது, விஜயேந்திரர் மட்டும் தியானம் செய்ததாகக் கூறப்படுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது” என்று தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முழுமையான பாடலை இசைக்க வேண்டும்

அரசு விழாக்களில் நீக்கப்பட்ட பகுதிகளையும் சேர்த்து தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள அவர், “உலகில் பல அரங்குகளில் பல நடைமுறைகள் இருந்தாலும் தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்பதுதான் மரபாகும். இனிவரும் காலங்களிலாவது விஜயேந்திரர் போன்றவர்கள் தமிழின் பெருமையை உணர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நேற்றைய விழாவில் நடந்துகொண்ட விதத்திற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூனியர் காஞ்சி சங்கராச்சாரியாரான விஜயேந்திரர், ஆளுனரும் மற்ற சிலரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நேரத்தில் எழுந்து நிற்காமல், இறுதியில் தேசியகீதம் என்ற ஜன கன மண பாட்டுப் பாடப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றுள்ளார்.

ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந்து, பிறழ் சாட்சிகள் 83 பேரின் தயவால் கொலைக் குற்றத்திலிருந்து, புதுவை செஷன்ஸ் கோர்ட்டில் விடுதலை பெற்று, மேல்முறையீடு செய்யாது தப்பித்துக் கொண்டதால், வெளியில் நடமாடும் இவர், அந்த சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அதுவும் ஆளுனர் போன்றவர்கள் எழுந்து நின்ற நிலையில்கூட, எழுந்து நிற்க மறுத்து, அடாவடித்தனமாக அப்படியே அமர்ந்திருப்பது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

இது அவை நாகரிகத்திற்கேகூட அவமரியாதை அல்லவா? தமிழ் நீச பாஷை - சமஸ்கிருதம் தேவ பாஷை என்று கருதும் - கூறும் புத்திதானே இதற்கு மூலகாரணம்? தள்ளாத வயதில்கூட, கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளில், கடவுள் வாழ்த்து பாடப்பட்ட நேரத்திலும், நாட்டுப் பண் இசைக்கப்பட்டபோதும் எழுந்து நின்று அவை நாகரிகத்தினைப் பேணிக் காப்பாற்றிய வரலாறு நாடறிந்த ஒன்று அல்லவா!

இன்னமும் மொழியிலும் உயர்வு- தாழ்வு மனப்பான்மை, பேதத்தன்மை இவர்களிடம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும்! தமிழ்நாட்டிலிருந்துகொண்டு, தமிழர்களிடம் காணிக்கை கணிசமாகப் பெற்றுக்கொண்டு பிழைக்கும் மடாதிபதியின் தமிழ் அவமதிப்பை - தமிழர்கள் புரிந்துகொள்வார்களா - அம்மேடையில் அமர்ந்திருந்த பட்டிமன்றப் புலவர் சாலமன் பாப்பையா உள்பட தமிழர்களே அடையாளம் காண்பீர்! சங்கர மடம் இதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

சமாதியில் மன்னிப்பு!

ஆண்டாள் குறித்து தினமணி நாளிதழில் வைரமுத்து தவறாக எழுதியதாக புகார் கிளம்பியதையடுத்து வைரமுத்துவும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதியில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பலரும் கூறிவந்தனர். இதையடுத்து வைத்தியநாதன் ஆண்டாள் சன்னதியில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார். அதுபோல், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்த விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணீயம் சுந்திரனார் சமாதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோஷம் வலுவடைந்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணீயம் சுந்தரனார் சமாதிக்கு வந்து விஜயேந்திரர் மன்னிப்பு கேட்கும் வரை தமிழகத்தில் போராட்டம் நடைபெறும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 24 ஜன 2018