மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

விவசாயிகள் ரயில் மறியல்: மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்பு!

விவசாயிகள் ரயில் மறியல்: மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்பு!

‘விவசாயிகள் அமைப்புகளின் சார்பாக ஜனவரி 28ஆம் தேதி நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும்’ என அறிவித்துள்ளார் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

சென்னையில் நேற்று (ஜனவரி 23) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., கே.வரதராஜன், சம்பத், வாசுகி மற்றும் மாநிலக்குழு, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். இந்த மாநிலக் குழு கூட்டம், மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து நடைபெறும்.

தமிழக மக்களைப் பாதிக்கும் பிரச்னைகள், மாநிலத்தில் நிலவிவரும் அரசியல் போக்கு, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன்பின், டி.கே.ரங்கராஜன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வரும் பிப்ரவரி 17-20 தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தூத்துக்குடியில் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதித்ததாகவும் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு கூட்டத்தின் முதல் நாளான நேற்று, பேருந்து கட்டண உயர்வு மற்றும் காவிரியில் நீர் திறந்துவிடாமல் இருப்பது என்ற இரண்டு பிரச்னைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்துள்ளார் ஜி.ராமகிருஷ்ணன்.

“தமிழகத்தில் அன்றாடம் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேருந்து போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள். தமிழக அரசின் ஆண்டு பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ஏற்படும் பற்றாக்குறை 1.5 சதவிகிதம் மட்டுமே. போக்குவரத்துத் துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடு மற்றும் முறைகேடுகளைச் சரி செய்வது, பழுதடைந்த பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்தப் பற்றாக்குறையை சரி செய்திட முடியும்.

மாறாக, பழியைத் தொழிலாளர்கள் மீது சுமத்தி கட்டண உயர்வை நியாயப்படுத்துவது நேர்மையற்ற செயல். மேலும் எதிர்காலத்தில் எரிபொருள், மசகு எண்ணெய் மற்றும் பராமரிப்புச் செலவு உள்ளிட்டவற்றில் ஏற்படும் கூடுதல் செலவினக் குறியீடுகளின் அடிப்படையில் அவ்வப்போது கட்டணம் அதிகாரிகளால் உயர்த்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருப்பது மிகப்பெரும் துரோகம். இதை அனுமதிக்கக்கூடாது” என்று இந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடக் கோரி ஜனவரி 28ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பதாக அறிவித்துள்ளது. “காவிரி டெல்டா பகுதிகளில் பாசனத்துக்காக, 2017ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதிதான் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் சாகுபடி பணிகள் தாமதமாக துவங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

சுமார் 13 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிரிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 60 சதவிகிதம் இப்போதுதான் பால் பிடிக்க துவங்கியுள்ளது. இந்த நிலையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று தண்ணீர் பாய்ச்சினால்தான் முழு மகசூல் எடுக்க முடியும். இல்லையென்றால் மொத்தமும் பதராக போய் விடக்கூடிய ஆபத்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். எனவே, இந்தியப் பிரதமர் அவர்களைத் தமிழக முதலமைச்சர் நேரிடையாகச் சந்தித்து காவிரி பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் பெற முயற்சி எடுக்க வேண்டும்” என்று மாநிலக்குழு கூட்டத்தின் முதல்நாளில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில், விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு ஜனநாயக அமைப்புகளும் பொதுமக்களும் ஆதரவளிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜி.ராமகிருஷ்ணன்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 24 ஜன 2018