ஏற்ற இறக்கத்தில் ஈரோடு மஞ்சள்!

ஈரோடு மஞ்சள் சந்தையில் இந்த வாரத்துக்கான ஏலத்தில் விரலி மஞ்சள் விலை ஏற்றத்தையும், வேர் மஞ்சள் விலை இறக்கத்தையும் சந்தித்துள்ளன.
ஈரோடு மஞ்சள் சந்தை இந்தியாவிலேயே மிகப்பெரிய மஞ்சள் சந்தையாகும். இங்கு தமிழ்நாட்டினர் மட்டுமின்றி பல்வேறு மாநில வர்த்தகர்களும் வந்து மஞ்சள் வாங்கிச் செல்வது வழக்கம். இந்த வாரத்திற்கான நேற்றைய (ஜனவரி 23) ஏலத்தில் மஞ்சள் விற்பனை போதிய அளவில் இல்லை என்றாலும் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. மைசூரிலிருந்து சந்தைக்கு வரவேண்டிய மஞ்சள் வகையின் வரத்து குறைந்து வருகிறது. பிப்ரவரி மாதத்திலிருந்து தான் மக்கள் அதிகமாக மஞ்சள் வாங்குவார்கள். புதிய மஞ்சள் சந்தைக்கு வருவதால் விலை அதிகரிக்கக் கூடும் என வியாபாரி ஒருவர் தெரிவித்தார். வியாபாரிகள் வட மாநில ஆர்டர்களை மட்டுமே நம்பியுள்ளனர்.