பணப் பட்டுவடாவைத் தடுக்க முடியவில்லை!

ஆர்.கே. நகரில் பணப் பட்டுவாடவை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் நேற்று (ஜனவரி 23) தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்கு அவருடைய மறைவுக்குப் பின்னர் கடந்த ஏப்ரலில் இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பணப் பட்டுவாடா காரணமாகத் தேர்தல் ஆணையம் அந்த இடைத் தேர்தலை நிறுத்தியது. அதன் பிறகு கடந்த டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது. இடைத் தேர்தலில் தேர்தலில் தினகரன் வெற்றிபெற்றார். தினகரன் பெற்ற வெற்றியானது பணப் பட்டுவாடா செய்து பெற்ற வெற்றி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதியின் பதவிக் காலம் கடந்த 22ஆம் தேதியுடன் முடிவடைந்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நேற்று பதவி ஏற்றுள்ளார். அவரது பதவி ஏற்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
பதவி ஏற்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத், "தேர்தல் நடத்தும் ஒவ்வொரு தடவையும் பணப் பட்டுவாடாவைக் கட்டுப்படுத்துவது என்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. ஒரு கதவை அடைத்தால், வேட்பாளர்கள் வேறு ஒரு கதவைத் திறந்து விடுகிறார்கள்" என்றார்.
ஆர்.கே. நகர் இடைதேர்தல் பற்றிப் பேசும்போது, "இலவசப் பொருட்கள், பணம் வழங்குவது போன்றவற்றைத் தடுக்க முயன்றதில் 23 லட்ச ரூபாய் மட்டுமே ஆர்.கே. நகரில் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் கடந்தமுறை ஆர்.கே. நகரில் 89 கோடி ரூபாய் பிடிபட்டது" என்று சுட்டிகாட்டினார் ஓம்பிரகாஷ் ராவத்.மேலும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை என்றும் கூறினார்.