மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

3ஆவது நாள்: தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்!

3ஆவது நாள்: தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்!

பேருந்துக் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று 3ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு கடந்த வாரம் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், நேற்று (ஜனவரி 23) நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின்போது காவல் துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்திக் கலைத்தனர். மேலும் கல்லூரிகளுக்கு முன் காவல் துறையினர் குவிக்கப்பட்டும் இருந்தனர். இந்நிலையில் இன்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டண உயர்வு : கல்லூரிக்கு விடுமுறை

பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செட்டிக்குளம் பகுதியிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக பெரம்பலூர் அரசுக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் கரந்தை கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாணவர்களைக் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியும் மறுத்துவிட்டனர். பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கலில் உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்துகளை சிறைபிடித்தனர். பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெறக் கோரி 3ஆவது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்த மாணவர்கள், கல்லூரி முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த அரசுப் பேருந்துகளைச் சிறைபிடித்ததோடு பேருந்துகளின் மேற்கூரையில் ஏறி நின்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாமக்கல் - மோகனூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மறியல் கைவிடப்பட்ட போதிலும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்ததால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு வரும் திங்கட்கிழமை கல்லூரி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சாலை மறியல் போராட்டம்

கும்பகோணம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 3ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வெளியே வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். மாணவ, மாணவிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினரின் பேச்சுவார்த்தையை அடுத்து, மறியலைக் கைவிட்ட மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால், சுமார் அரை மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

ஈரோடு மாவட்டம் கரட்டடிபாளையத்தில் அரசு உதவி பெறும் கோபி கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் உரிய தீர்வு கிடைக்கும் வரை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

உள்ளிருப்பு போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். பேருந்துக் கட்டணத்தைக் குறைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர். இதேபோல், திண்டுக்கல்லில் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம் மணல்மேடு அரசு கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்ட மாணவர்கள் கைது

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுக் கலைக்கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அரசுக் கலைக்கல்லூரி வாயில் முன்பு திரண்ட கல்லூரி மாணவர்கள், திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் கேட்காமல் சாலையில் படுத்தபடி போராடினர். இதை அடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்காக, சுமார் 50 காவல் துறையினர் கல்லூரி வளாகம் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டண உயர்வு:வழக்கு தள்ளுபடி

பேருந்துக் கட்டண உயர்வுக்கு மாணவர்களும், பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் கட்டண உயர்வைத் திரும்பப்பெறக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 24 ஜன 2018