பென் நர்சிங் விருதைப் பெறும் முதல் இந்தியப் பெண்!


பான்யன் என்னும் மனநல மறுவாழ்வு அமைப்பின் இணை நிறுவனர் வந்தனா கோபிகுமாருக்கு 2018ஆம் ஆண்டுக்கான பென் நர்சிங் ரென்ஃபீல்ட் விருது (penn nursing renfield foundation award) அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பாகப் பணியாற்றும் தனிநபருக்கு வழங்கப்படும் பென் நர்சிங் ரென்ஃபீல்ட் விருது, தமிழகத்தைச் சேர்ந்த பான்யன் அமைப்பைச் சேர்ந்த வந்தனா கோபிகுமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவச் சேவை புரிந்துவந்ததால், அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் மார்ச் 21ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் இந்த விருது வழங்கப்படும்.இதனுடன் 63,62,500 ரூபாய் (ஒரு லட்சம் டாலர்) ரொக்கமும் பரிசாக வழங்கப்படும்.
இந்த விருதை பெறவுள்ள வந்தனா கோபிகுமாருக்கு திமுகவின் மகளிரணிச் செயலாளர் மற்றும் எம்.பி. கனிமொழி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மாதவன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.