மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

புஜாராவின் ‘அரை சதம்'!

புஜாராவின் ‘அரை சதம்'!

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் புஜாரா அரை சதம் கடந்தார்; ரன்களில் அல்ல, எதிர்கொண்ட பந்துகளில். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தான் எதிர்கொண்ட முதல் 53 பந்துகளில் ஒரு ரன்கூட அவர் அடிக்கவில்லை.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்திய, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. கடந்த இரு போட்டிகளில் தோல்வி கண்டு தொடரை இழந்த இந்திய அணி ஆறுதல் வெற்றிக்கான முனைப்புடன் களம் இறங்கியது.

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ரோஹித் ஷர்மாவுக்கு பதில் அஜிங்க்ய ரஹானேவும், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதில் புவனேஸ்வர் குமாரும் சேர்க்கப்பட்டனர். தென்னாப்பிரிக்க அணியில் கேசவ் மகாராஜுக்கு பதிலாக அண்டிலே பெலுக்வாயா சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய், லோகேஷ் ராகுல் களமிறங்கினர். தென்னாப்ரிக்க ஆடுகளங்களில் ஆஃப் சைடுக்கு வெளியே வீசப்படும் பந்துகளை எதிர்கொள்ளத் திணறும் இந்திய அணியின் சோகம் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் ஃபிலாண்டர் பந்தில் ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசப்பட்ட பந்து, ராகுலின் பேட்டின் இன்சைட் எட்ஜை உரசிச் சென்று விக்கெட் கீப்பர் க்வின்டன் டி காக்கிடம் கேட்ச் ஆனது. அதே போல் முரளி விஜய், ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வந்த ரபடாவின் பந்தை டிரைவ் ஆட முயற்சித்துத் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும் புஜாராவும் பொறுப்பை உணர்ந்து ஆட்டத்தைத் தொடர்ந்தனர். மிகவும் பொறுமையாக ஆடிய புஜாரா, ரன் கணக்கைத் துவக்கும் முன்னரே பந்துகளை எதிர்கொள்வதில் அரை சதம் கடந்தார். அவர் தனது 54ஆவது பந்தில் முதல் ரன்னை எடுத்தார்.

தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் இந்திய வீரர்கள் நிலைத்து நின்று ஆடி, ரன் குவிக்கத் திணறிவரும் நிலையில் புஜாராவின் இந்த ‘அரை சதம்’ பாராட்டிற்குரியது. இதனைப் பயன்படுத்தி, ரன்களிலும் அரை சதத்தை எட்டுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புஜாரா இன்னொரு ‘சாதனை’யும் படைத்திருக்கிறார். ரன் விகிதத்தில் 100 %-ஐத் தொட்டிருக்கிறார். வழக்கமாக எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கைக்கு இணையான ரன்களை அடிப்பதையே 100 % ரன் விகிதம் என்பார்கள். புஜாராவின் சாதனை சற்று வித்தியாசமானது. எதிர்கொண்ட ஓவர்களின் எண்ணிக்கைக்கு இணையான ரன்களை அவர் அடித்தார். 44ஆவது ஓவரின் மூன்றாவது பந்து வீசப்பட்டபோது அவர் எதிர்கொண்ட ஓவர்களின் எண்ணிக்கையும் எடுத்த ரன்களின் எண்ணிக்கையும் சமமாக (22) இருந்தன.

மறு முனையில் கேப்டன் விராட் கோலி மிகவும் கவனமாக ஆடினாலும், அவ்வப்போது பவுண்டரிகளை அடிக்கவும் தவறவில்லை. இருமுறை அதிர்ஷ்டவசமாகத் தப்பிப் பிழைத்த கோலி, இதனைப் பயன்படுத்திக்கொண்டு கோலி அரை சதம் கடந்து அசத்தினார். கோலி 54 ரன்னில் நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதன் 24 ஜன 2018