கலாம் நினைவிடம்: கமலுக்கு பொன்னார் எதிர்ப்பு!


அப்துல் கலாம் நினைவிடத்திலிருந்து கமல் கட்சி தொடங்குவதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இன்று (ஜனவரி 24) செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “கமல் அரசியல் கட்சி தொடங்குவதில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. அதேவேளையில், ஜாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்த அப்துல் கலாம் நினைவிடத்தில் கமல் கட்சி தொடங்க வேண்டாம். கலாம் நினைவிடத்தில் கட்சி தொடங்குவது என்பது அவரை அவமானப்படுத்துவது, கொச்சைப்படுத்துவதாக அமையும்” என்றார்.
ஏற்கனவே ஒரு சமாதி எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் எனக் குறிப்பிட்ட அவர், “கலாம் நினைவிடத்தில் கமல் கட்சியைத் தொடங்கினால், அனைத்து அரசியல்வாதிகளும் ராமேஸ்வரம் வரத் தொடங்கிவிடுவார்கள். இது அவரது புகழுக்கு நல்லதல்ல” என்று கூறினார்.