மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

கட்டண உயர்வு : நீதிமன்றம் தலையிட முடியாது!

கட்டண உயர்வு : நீதிமன்றம் தலையிட முடியாது!

கட்டண உயர்வைத் திரும்ப பெறக் கோரி வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் 4ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் வலுத்து வரும் நிலையில் கட்டண உயர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏழை, எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று கூறி தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரசுப் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் திட்டம் தொடரும் என்று நேற்று (ஜனவரி 23) அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் போராட்டம் கைவிடப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்றும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. கட்டண உயர்வைத் திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள், தஞ்சையில் கரந்தை கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள், நாமக்கல் லத்துவாடியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், கும்பகோணம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் உட்பட பல்வேறு கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆங்காங்கு போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு நிர்ணயித்திருக்கும் இந்தக் கட்டண உயர்வால் வீட்டு வேலைக்குச் சென்று வரும் பெண்கள் மிகவும் சிரமப்படுவதாக சென்னையைச் சேர்ந்த ஜோதி என்பவர் கூறியுள்ளார். மாதாந்திரம் ரூ.1500 சம்பளத்திற்காக வேலைக்குச் சென்று வரும் பெண்களிடம் நாள்தோறும் ரூ.100 கணக்கில் பேருந்து கட்டணம் வசூலித்தால் அவர்கள் குடும்பத்தை எப்படி நடத்துவார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனை அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு கட்டண உயர்வுக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் கட்டண உயர்வைத் திரும்ப பெறக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கட்டண உயர்வுக்கு எதிராக முனிகிருஷ்ணன், சித்திரவேலு ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் அரசின் பேருந்துக் கட்டண உயர்வைக் காரணம் காட்டி ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர், பேருந்து, ஆட்டோ , டாக்ஸி என அனைத்திலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்” என்று கூறியிருந்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயணன்,” கடந்த 7 ஆண்டுகளாக பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும் டீசல் விலை உயர்வு, உதிரிப் பாகங்களின் விலை அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.

இரு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம் மனுக்களைத் தள்ளுபடி செய்ததோடு உயர்த்தப்பட்ட கட்டண விவரங்களை அரசு, தனியார் பேருந்துகளில் ஓட்ட உத்தரவிட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018