ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் பாதியாகக் குறைப்பு!

தமிழக அரசு கடந்த வாரம் பேருந்துக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ளதால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தனியார் மினி பேருந்துகளிலும் மற்றும் ஆட்டோக்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் பேருந்துக் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், சேலத்தில் ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் பேருந்துக் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், ரயில் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் மக்கள் பயணம் செய்வது அதிகரித்துள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஏற்காடு அடிவாரம் வரை 50 ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ஆட்டோக்களில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அடிவாரம் வரை எங்கு ஏறி, இறங்கினாலும் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டுவந்தது. தற்போது, பேருந்துகளில் ஆரம்பநிலைக் கட்டணம் ரூ.8 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் ரூ.10 கட்டணத்தை ரூ.5 ஆகக் குறைத்து நேற்று (ஜனவரி 23) முதல் வசூலித்துவருகின்றனர். இதனால், சேலத்தில் ஷேர் ஆட்டோக்களில் செல்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பேருந்துக் கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஷேர் ஆட்டோவின் கட்டணத்தைக் குறைத்திருப்பது, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.