இரு மொழி ரீமேக்கில் சமந்தா

கன்னடத்தில் வரவேற்பைப் பெற்ற ‘யு-டர்ன்’ படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிப்பது உறுதியாகியுள்ளது.
பவன்குமார் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ராதிகா சேத்தன், திலீப் ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து 2016ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான படம் ‘யு-டர்ன்’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் ஷ்ரத்தா பத்திரிகை நிருபராக நடித்திருந்தார். இதன் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது சமந்தா நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குற்றப் பின்னணியை மையப்படுத்தி உருவான இந்தப் படத்தின் கதையைத் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்து இயக்கவிருக்கிறார் பவன்குமார். சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீநிவாசா தயாரிப்பில் உருவாகவிருக்கும் இதன் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவிருக்கிறது.
விஷால் ஜோடியாக `இரும்புத்திரை’ படத்தில் நடித்துமுடித்திருக்கும் சமந்தா, சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும், விஜய் சேதுபதியுடன் `சூப்பர் டீலக்ஸ்' மற்றும் `மகாநதி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.