பேருந்து விபத்து: 20 மாணவர்கள் காயம்!


திருத்தணியில் தனியார் பள்ளி பேருந்தின் மீது லாரி மோதியதில், 20 மாணவர்கள் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்துவருகின்றனர். அவர்களுக்கென தனி பேருந்தைப் பள்ளி நிர்வாகம் இயக்கிவருகிறது. நேற்று 40 மாணவர்களுடன் அந்தப் பேருந்து, திருத்தணி- அரக்கோணம் சாலையில் அரக்கோணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த லாரி ஒன்று, பேருந்தை முந்த முயன்றபோது, எதிர்பாராத விதமாகப் பேருந்தின் மீது மோதியது. இதில் 20 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்து அவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர். மற்ற மாணவர்கள் தனியார் கல்லூரிப் பேருந்தில் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இது குறித்து, திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.