மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

எட்டாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு கூடாது!

எட்டாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு கூடாது!

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யவும், அந்த வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு, மாணவர்களின் கல்வி வாய்ப்பைப் பறிக்கும் செயல் எனக் கண்டனம் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

தமிழகத்திலுள்ள பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிரான குரல்கள் அவ்வப்போது எழுவதுண்டு. ஆனால், சில மாநிலங்களில் இந்த நடைமுறை வழக்கத்தில் இல்லை. குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் எட்டாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முறை தமிழகத்திலும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை எதிர்த்துக் குரலெழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது குறித்து இன்று (ஜனவரி 24) அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மத்திய அரசுக்கு விசுவாசம் காட்டும் வகையில் எட்டாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தும் முடிவை எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

“எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறை தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நீண்டகாலமாக அதிகாரபூர்வமற்ற வகையில் நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம்தான் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி சட்டபூர்வமாக்கப்பட்டது. ஆனால், இந்த நடைமுறையை விரும்பாத மத்திய அரசு, அதை மாற்றுவது குறித்து பரிந்துரைக்க 2012ஆம் ஆண்டில் வல்லுனர் குழுவை அமைத்தது. அக்குழுவினர் அளித்த பரிந்துரைப்படி 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. இது தொடர்பான கல்வி உரிமைச் சட்டத்தையும் திருத்தியது.

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தாலும், இவ்விஷயத்தில் மாநில அரசுகள் விருப்பம் போல முடிவெடுத்துக்கொள்ள சுதந்திரம் அளித்திருந்தது. ஆனாலும், பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட 23 மாநிலங்கள் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளன. மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி என்பதற்கிணங்க, பாரதிய ஜனதா வழியில் தமிழக அரசும் எட்டாம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்து விட்டுப் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. இதன்மூலம் எஜமான விசுவாசத்தைக் காட்டுவதற்காக தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் கல்வி வாய்ப்புகளைக் காவு கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 5 அல்லது 8ஆம் வகுப்பில் தோல்வியடைந்தால், அதன் பின் அவர்களைத் தொடர்ந்து படிக்க குடும்பத்தினர் அனுமதிக்க மாட்டார்கள். மாறாக மாணவர்கள் அவர்களின் பெற்றோர் செய்யும் தொழிலுக்கு உதவியாக அனுப்பி வைக்கப்படுவர்; மாணவிகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படும். சமூகத்தைச் சீரழிக்கும் குலக் கல்வி முறையும் குழந்தைத் திருமண முறையும் மீண்டும் தழைத்தோங்குவதைத்தான் அரசு எதிர்பார்க்கிறதா என்பதைத் தமிழக ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் அனைத்து நடவடிக்கைகளையும் பாமக வரவேற்கும் என்று தெரிவித்துள்ள ராமதாஸ், தமிழக அரசு எட்டாம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி ரத்து, பொதுத் தேர்வு முறை அறிமுகம் ஆகிய திட்டங்களைக் கைவிட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

புதன் 24 ஜன 2018