மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

நீதிபதிகள் விவகாரம்: மார்க்சிஸ்ட் புதிய திட்டம்!

நீதிபதிகள் விவகாரம்: மார்க்சிஸ்ட் புதிய திட்டம்!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைப் பதவி நீக்கக் கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்காக மாற்றுக் கட்சியினரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு திரட்டிவருவதாக அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப் , மதன் பி. லோகூர் ஆகிய நால்வரும், கடந்த ஜனவரி 12 காலை செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது, “உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நாங்கள் 4 பேரும் நீதித் துறையில் இருக்கும் பிரச்சினைகள் குறித்த கடிதத்தை சில மாதங்களுக்கு முன்பே தலைமை நீதிபதிக்கு அனுப்பினோம். நீதித் துறையில் இருக்கும் குளறுபடிகள் குறித்து தலைமை நீதிபதியிடம் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை என்பதால் மக்களிடம் தெரிவிக்க விரும்பினோம். நீதித் துறையைச் சரிசெய்யாவிட்டால் நாட்டில் ஜனநாயகம் சீர்கெட்டுவிடும்” என்று தெரிவித்தனர்.

அவர்களது இந்தப் பேட்டி நீதித் துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “உச்ச நீதிமன்ற விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே,நாங்கள் தலையிட்டுத் தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரில், தலைமை நீதிபதியைப் பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தைக் கொண்டுவருவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறோம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக நேற்று (ஜனவரி 23) தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரிக் அன்வரையும், ஐக்கிய ஜனதா தள அதிருப்தித் தலைவர் சரத் யாதவையும் யெச்சூரி சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018