உள்நாட்டு உற்பத்தி ஆறு மடங்கு உயர்வு!


இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆறு மடங்கு உயர்ந்துள்ளதாகச் சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று (ஜனவரி 23) பேசியுள்ளார்.
உலகப் பொருளாதார மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி 48ஆவது உலகப் பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நான்கு நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (ஜனவரி 22) சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றார். கடந்த இருபதாண்டுகளில் இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்பு கடந்த 1997ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் அப்போதைய பிரதமர் தேவகவுடா பங்கேற்றார்.
எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டில் நேற்று (ஜனவரி 23) இந்தியப் பிரதமர் மோடி, “வளர்ந்த நாடுகள் தங்களின் தொழில்நுட்பங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு அனைத்து நாடுகளும் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் .சமூக வலைதளங்கள் உலகத்தையே மாற்றியிருக்கிறது இணையத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தற்போது போட்டி நிலவுகிறது. இணையப் பாதுகாப்பும், அணு ஆயுதப் பாதுகாப்பும் தற்போது முக்கியமானது. டிஜிட்டல் உலகம் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. உலகில் தொழில்நுட்பமும் இணையமும் அதி சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளன” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசும்போது, “பருவநிலை மாற்றம் உலகுக்கே ஏற்பட்டுள்ள சவால், பருவநிலை மாற்றத்தைக் கையாள ஒன்றிணைய வேண்டும். 1997ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் தேவகவுடா, உலகப் பொருளாதார மாநாட்டுக்கு வந்தபோது இந்தியாவின் மதிப்பு 400 பில்லியன் டாலர், தற்போது அதன் மதிப்பு ஆறு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. தீவிரவாதம் உலகுக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால்” என்றும் பிரதமர் மோடி கூறினார்.
மேலும், உலகப் பொருளாதார மாநாட்டின் மைய கருத்தாக்கத்தைச் சுட்டி பேசும்போது, ‘வாசுதைவ குடும்பகம்’ எனும் உலகமே ஒரே குடும்பம் என்ற இந்தியத் தத்துவத்தைப் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.