மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: இந்த வருடப் பொருளாதார வளர்ச்சியின் முதல் பலி நீங்கள்தான்!

சிறப்புக் கட்டுரை: இந்த வருடப் பொருளாதார வளர்ச்சியின் முதல் பலி நீங்கள்தான்!

பா.நரேஷ்

இந்த வருடத்துக்கான அரசாங்கத்தின் ஜிடிபி முன்கணிப்பு வெளிவந்துள்ளது. அதில் விவசாய வளர்ச்சி என்பது 2.1 சதவிகிதமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது. அதாவது 2016-17இல் 4.9 சதவிகிதமாக இருந்த விவசாய வளர்ச்சி என்பது 2017-18ஆம் ஆண்டில் 2.1 சதவிகிதமாக குறையும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு சரியாக ஒரு வாரம் முன்புதான் 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளார்ச்சி என்பது 7.3 சதவிகிதமாக உயரும் என்ற கணிப்பை உலக வங்கி வெளியிட்டது.

இங்கே பொருளாதார வளர்ச்சி என்பது யாருடையதாக இருக்கிறது? நாட்டின் பொருளாதார வளர்ச்சியா? நாடு என்பது என்னவாக இருக்கிறது? நாட்டின் மக்களா? அந்த பொருளாதார வளர்ச்சி என்பது மக்களின் வளர்ச்சியா? இல்லவே இல்லை. அது அந்த நாட்டில் முதலீடு செய்த, அந்த நாட்டின் வளங்களை மூலதனமாக வைத்து சம்பாதிக்க நினைக்கும் பெருவணிகர்களின் வளர்ச்சியாக மட்டும்தான் இருக்கும். ஏனெனில் அந்தப் பெருவணிகர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த நாட்டின் வளங்களை மட்டும் சுரண்டினால் அவர்களால் வளர்ச்சியடைய முடியாது. முதலீடு செய்யப்பட்ட அந்த நாட்டின் மக்களையும் சுரண்ட வேண்டும்.

மக்களைச் சுரண்டுவது என்றால் உங்கள் கைகளைக் கட்டிவைத்துத் திருடுவதல்ல. அது உங்கள் கைகளை சுதந்திரமாக விடுவதுபோல விட்டு, அந்தக் கைகளின் மூலம் தங்களுக்கான வேலைகளைச் செய்து முடிப்பது. இதை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அது உங்கள் உழைப்பைச் சுரண்டுவது என்பதாகும். நாடு, மொழி பேதமில்லாமல் பெருநிறுவனங்கள் கடைப்பிடிக்கும் விதிகள் இதுதான். ஒன்று, அந்நாட்டின் வளங்களைச் சுரண்ட வேண்டும்; மற்றொன்று, அந்நாட்டு மக்களையும் அவர்களின் உழைப்பையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பிடுங்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சியின் மாறிவிட்ட முகம்

இங்கே பொருளாதார வளர்ச்சி என்பது என்னவாக இருக்கிறது? காலம்காலமாகப் பொருளாதாரத்தை நிலம் சார்ந்த தொழில்களை மூலமாகக் கொண்டு இயங்கும் ஒரு நாட்டில் உள்ள மக்கள் அனைவரும், தங்கள் வாழ்வாதாரத்துக்காக நிலத்தில் தொழில் செய்பவர்களாகவும், நிலம் சார்ந்த தொழில் செய்பவர்களாகவும் இருக்கும்போது, தடாலடியாகப் பொருளாதார வளர்ச்சியை வெறும் வணிக வளர்ச்சியாக மட்டுமே பார்ப்பதும், நிலம் சார்ந்த தொழில்கள் செய்பவர்களுக்கான வாழ்வாதாரம் குறித்த எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் செயல்படுவதுவும் எவ்வளவு ஆபத்தானது என்பதைத் தெரிந்துகொள்ள, நீங்கள் மெத்தப் படித்த பொருளாதார அறிஞராக இருக்கத் தேவையில்லை. ஒரு சாதாரண பாமரனால்கூட இந்தப் பேராபத்துகளை உணர முடியும்.

இப்படி இருக்க, விவசாயத்தில் வளர்ச்சி என்பதற்கு வாய்ப்பே அளிக்கப் போவதில்லை அல்லது வாய்ப்பே இல்லை எனும் நிலையில் அரசுகள் செயல்படும்போது, விவசாயத்தையும் அது சார்ந்த தொழில்களையும் பிழைப்புக்காகக் கொண்டிருக்கின்ற பல கோடிப் பேர் கொண்ட ஒரு நாடானது, இவை பற்றி கவலைப்படாமல், வெளிநாட்டு முதலீடுகளால் பொருளாதார வளர்ச்சியை எட்டிவிட முடியும் என்று பெரு நிறுவனங்களுக்குக் கதவுகளைத் திறந்துவிடுவதும், அந்தக் கதவுகளை அந்த நாட்டின் மக்கள் மேல் வீசி அவர்களை நசுக்கப் பார்ப்பதும், வளர்ச்சி என்று உங்களால் எப்படி ஒப்புக்கொள்ள முடிகிறது.

இதில் நாம் கருத்தில்கொள்ள வேண்டிய இரண்டு மிக முக்கியமான தகவல்கள் இருக்கின்றன. பொருளாதார வளர்ச்சி என்பதை என்னவாக இந்த அரசு அடைய நினைக்கிறது என்பதும், அப்படி இருந்தால் அது அந்த நாட்டின் மக்களால், மக்களை வைத்து அடைய முடிகிறதா அல்லது வெறும் வெளிநாட்டு முதலீடுகளால் மட்டுமே அந்தப் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்று முடிவெடுக்கிறதா என்பதும்தான்.

விவசாயிகளை அழிக்கும் திட்டம்

சரி, உணவு உற்பத்தி இல்லாமலும், விவசாயம் இல்லாமலும் ஒரு நாடு வளர்ச்சி அடைய முடியுமா என்றால், நிச்சயமாக முடியாது. ஆனால், விவசாயிகளுக்கான மானியங்களை ரத்து செய்வது, விவசாயிகளுக்கான நிலவுடைமை விதிகளைக் கறாராக்குவது என்று தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டையே மத்திய அரசு எடுத்து வருவது அவர்களுக்கே ஆபத்தாக அமையாதா?

கண்டிப்பாகக் கிடையாது. அங்கேதான் சூட்சமம் இருக்கிறது. அவர்கள் அழித்துக்கொண்டிருப்பதும் அழிக்க நினைப்பதும் விவசாயத்தையல்ல, விவசாயிகளை. பின்னர் விவசாயத்தை யார் பார்த்துக்கொள்வார்கள்? இருக்கவே இருக்கிறார்கள், பணக்கார முதலீட்டு வர்க்கத்தினர். இவை யூகங்கள் அல்ல. பில் கேட்ஸ் ஆந்திர மாநிலத்துக்கு வந்தபோது, விவசாயத்தில் தனியார் நிறுவனங்கள் பெரிய முதலீடு செய்ய வேண்டும் என்று விதைத்ததும், மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் அதற்கு எதிர்வினையாற்றாமல் ஆமோதித்ததும், விவசாயிகளிடம், “நிலங்களைத் தனியார் நிறுவனங்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள், தனியார் நிறுவனங்களுடன் கைகோத்து விவசாயம் செய்து லாபம் ஈட்டுங்கள்” என்று சிலர் பிரசாரம் செய்வதும்; பல நாடுகளுக்குச் சுற்றலாப் பயணம் மேற்கொள்ள நேரமிருக்கும் பிரதமர், பக்கத்துத் தெருவில் மானம்கெடப் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளைப் பார்க்க நேரமில்லை என்று ஒதுங்கி நின்றதும் - இன்னும் பல ‘வும்’களும் மேற்சொன்ன கருத்துகளுக்கு நேரடியான ஆதாரங்களாக நம் கண்முன் நிற்கின்றன.

இது வெறும் விவசாயத்தை மட்டும் முன்னிறுத்தியதல்ல. விவசாயிகள் பிரச்னை மட்டுமல்ல. நீங்கள் அதை அப்படித்தான் அணுக வேண்டும் என்று அரசுகளும் பெருநிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன. இது நம் ஒவ்வொருவருக்குமான பிரச்னை. கல்வியில் இருந்து சில்லறை வணிகம் வரை அனைத்தையும் தனியார்மயம் ஆக்கும் வளர்ச்சி நடவடிக்கை. இதில் தனி மனிதரின் பொருளாதாரமும் வாழ்வாதாரமும் எந்த இடத்தில் முன்னிலை வகிக்கிறது? நாடு என்ற போர்வைக்குள் கொள்ளையடிப்பவர்களுக்கு நீங்களும் நானும் எம்மாத்திரம்? நாளை நீங்கள் செய்யும் தொழிலுக்கும் வேட்டு வரும். ஒன்று, உங்கள் தொழிலைத் தனியாரிடம் ஒப்படைத்துவிடுங்கள் அல்லது அவர்களைப் பங்குதாரர்கள் ஆக்கிக்கொண்டு உங்கள் தொழிலைச் செய்யுங்கள் என்பன போன்ற பொருளாதார விதிகள் மிகவும் நாசுக்காக இயற்றப்படும்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 24 ஜன 2018