மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

பணம் பாயும் பார் கவுன்சில் தேர்தல்!

பணம் பாயும் பார் கவுன்சில் தேர்தல்!

உயர் நீதிமன்றத்தில் முறையீடு

நேர்மையாகவும் நியாயமாகவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நடைபெற வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் வரும் மார்ச் 28ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டுமென்று வழக்கறிஞர் விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இதுகுறித்த விசாரணை நேற்று (ஜனவரி 23) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஜே.அப்துல் குத்தூஸ் அமர்வில் நடந்தது. இந்த வழக்கில் பார் கவுன்சில் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வில்சன், “இந்தத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முறையாக நடந்து வருகின்றன. தேர்தல் பார்வையாளராக ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இப்படி ஒரு வழக்கே தேவையற்றது; இதை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதாடினார்.

அப்போது விஜய் ஆனந்த் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், “இது தள்ளுபடி செய்ய வேண்டிய வழக்கு அல்ல; மிக முக்கியமான வழக்கு. வழக்கறிஞர்கள் என்பவர்கள் இந்த சமூகத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். அவர்கள் சரியாக இருந்தால்தான் இந்தச் சமூகம் சரியாக இயங்கும். எனவே, வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் பற்றி அவர்கள் கேள்வி கேட்க எல்லா உரிமையும் உள்ளது” என்றார்.

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் பற்றி, கடந்த வாரம் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ராவுக்குக் கடிதம் எழுதிய அட்வகேட் ஜெனரலும் தமிழக பார் கவுன்சில் சங்கத்தின் தற்போதைய தலைவருமான விஜய் நாராயணனும் இந்த வழக்கில் ஆஜரானார். “வழக்கறிஞர்கள் சமூகம் இருபது வருடங்களுக்கு முன் மிகப் பெரும் நற்பெயரைப் பெற்றிருந்தது. ஆனால், ஆண்டுகள் ஆக ஆக வழக்கறிஞர்கள் சமூகத்தின் மதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. வழக்கறிஞர்களின் செயல்பாடுகளை, நடத்தையை கண்காணிப்பதற்குத்தான் பார் கவுன்சில் இருக்கிறது. ஆனால், இப்போது பார் கவுன்சிலே கண்காணிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது” என்று கூறிய விஜய் நாராயணன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் பணம் ஆறாகப் பாய்ந்தோடுவதாகத் தெரிவித்தார். கடந்த 2011 தேர்தலின்போது, சங்க நிர்வாகிகளுக்கு கார் பரிசாகத் தரப்பட்டதாகக் கூறினார்.

“சென்ற தேர்தலிலேயே மூன்று கோடி ரூபாய் வரை பணம் செலவழித்ததாகப் புகார்கள் எழுந்தன. இப்போது, ஒவ்வொரு வாக்குக்கும் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. சேர்மன் தேர்தல், துணை சேர்மன் தேர்தல் உள்ளிட்ட சந்தர்ப்பங்களின்போது தாங்கள் செலவழித்த தொகையை மீட்டெடுத்து விடுவார்கள். இவர்கள் யாருமே உண்மையான நோக்கத்தோடு பார் கவுன்சிலுக்கு வருவதில்லை. அதிகாரத்தை ருசிக்க வேண்டும் என்பதற்காகவே பார் கவுன்சிலுக்கு வருகிறார்கள்.

பார் கவுன்சில் உறுப்பினர்கள் 25 பேர்தான் தமிழகத்தில் இருக்கும் 95 ஆயிரம் வழக்கறிஞர்களின் பிரதிநிதிகளாக செயல்பட வேண்டும். அவர்கள் சரியான நபர்களாக இருந்தால்தான் வழக்கறிஞர் சமுதாயம் சரியாக இருக்கும். எனது மனசாட்சிக்குத் தெரிந்தவரையில், இந்தத் தேர்தலில் பல முறைகேடுகள் நடப்பதை அனுமதிக்க முடியவில்லை. இதுபற்றி நான் கேள்வி கேட்டால், என்னை தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள். எனவே நீதிமன்றம் இதில் தகுந்த ஆணையிட்டு தேர்தல் முறையாக நடத்திட உதவ வேண்டும்” என்றார் விஜய் நாராயணன்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பார் கவுன்சிலுக்கும் நீதிமன்றத்துக்கும் இடையே சுமுகமான உறவு நிலவ வேண்டுமென தெரிவித்தனர். அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனின் கடிதத்தில் உள்ள அம்சம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மேற்கோள் காட்டப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டனர். “நியாயமான, நேர்மையான தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட நடுநிலைத்தன்மை கொண்ட குழுவை உச்ச நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ நியமிக்கலாம். ஆனால், பார் கவுன்சில் தொடர்பான வழக்கு நாளை (ஜனவரி 24) டெல்லி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விசாரணை செய்வது குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெற வேண்டும். ஆதலால், இந்த மனுவை வரும் பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018