மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

சிறப்புக் கட்டுரை: இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

அரவிந்தன்

எந்தப் பந்தை ஆட வேண்டும், எதை விட வேண்டும் என்னும் தேர்வு, பின் காலில் சென்று ஆடும் பழக்கம் ஆகிய இரண்டு அம்சங்களைத் தவிர இந்தியா இன்னொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அது ஸ்லிப் பகுதியில் கேட்ச் பிடிக்கும் திறன்.

‘முயல் பிடிக்கும் நாயை முகத்தைப் பார்த்தே சொல்லிவிடலாம்’ என்று ஒரு சொலவடை உண்டு. ஸ்லிப்பில் நிற்கும் தடுப்பாளர்கள் நிற்கும் விதமே அவர்கள் கேட்ச் பிடிக்கும் லட்சணத்தைக் காட்டிவிடும். தென்னாப்பிரிக்கா போன்ற அணியினர் ஸ்லிப்பில் நிற்கும் விதத்தையும் இந்தியர்கள் நிற்கும் விதத்தையும் பார்த்தால் வித்தியாசம் தெரியும். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆட்டக்காரரும் ஸ்லிப் பகுதியின் சிறந்த தடுப்பாளருமான டெரில் கல்லினன் இந்தியர்கள் ஸ்லிப்பில் நிற்கும் விதத்தில் குறை இருப்பதாகச் சொல்கிறார். க்ரிகின்ஃபோ இணைய தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இந்திய ஸ்லிப் தடுப்பாளர்கள் கால்களை மிகவும் அகற்றி வைத்திருப்பதையும் கைகளை முழங்கால்களில் ஊன்றிக்கொண்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். கால்களை அதிகமாக அகற்றக் கூடாது என்கிறார் அவர். வேகப்பந்து வீச்சாளரின் மட்டையிலிருந்து ஸ்லிப்புக்குப் பந்து வருவதற்கு ஒரு விநாடி நேரம்தான் பிடிக்கும். அதற்குள் பந்தின் திசையைக் கணித்து அங்கே கையைக் கொண்டுபோக வேண்டுமென்றால் கைகளைக் கால்களுக்கிடையில் வைத்திருக்க வேண்டும். கை விரல்கள் விரித்த நிலையில் இரு கைகளையும் சேர்த்து முழங்கால்களுக்கு நடுவில் வைத்திருக்க வேண்டும். உள்ளங்கைகள் வெளிப்புறம் பார்த்த நிலையில் இருக்க வேண்டும் (கீழே உள்ள படத்தில் கல்லினன் செய்துகாட்டுவதைப் பார்க்கவும்).

ஆனால், இந்திய ஸ்லிப் தடுப்பாளர்களோ பெரும்பாலும் கால்களை அகலமாக வைத்திருப்பதுடன் கைகளை முழங்கால்களில் ஊன்றி நிற்கிறார்கள். விராட் கோலி, ஷிகர் தவன் ஆகியோர் இப்படி நிற்பதை முகப்புப் படத்தில் பாருங்கள். சதேஸ்வர் புஜாரா மட்டுமே சரியான விதத்தில் நிற்கிறார்.

முதல் டெஸ்ட்டில் கேசவ் மகராஜ் தன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே கொடுத்த கேட்சை தவன் கோட்டைவிட்டார். மகராஜ் அதன் பிறகு 35 ரன் அடித்தார். 72 ரன் வித்தியாசத்தில் இந்தியா அந்தப் போட்டியை இழந்தது.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற மிகச் சிறந்த தடுப்பாளர்கள் கொண்ட அணியினர் கேட்சை விடுவதே இல்லை என்று சொல்ல முடியாது. விடத்தான் செய்கிறார்கள். தவறுவது மனித இயல்பு. ஆனால், செய்வதை முறையாகச் செய்வது, தொடர்ந்து அதில் தேர்ச்சி பெற உழைப்பது ஆகிய இரண்டு குணங்கள் இருந்தால் தவறுகள் குறையும்.

இது வேறு ஆட்டம்

ஒருநாள் ஆட்டங்கள் நிலைபெற்றுவிட்ட எண்பதுகளிலிருந்தே எல்லா அணிகளிலும் அதிரடி ஆட்டக்காரர்கள் உருவாகிவிட்டார்கள். சச்சின் டெண்டுல்கர், சனத் ஜெயசூர்யா, ஜாவேத் மியாண்டாட், லான்ஸ் க்லூஸ்னர், ரிக்கி பான்டிங், மேத்யூ ஹைடன், ஆடம் கில்கிறிஸ்ட், வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, ஏபி டிவிலியர்ஸ், டேவிட் வார்னர், ரோஹித் ஷர்மா எனப் பலரைச் சொல்லலாம். பந்து வீச்சாளர்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலைத் தொடுக்கும் இவர்கள் டெஸ்ட் ஆட்டங்களில் அதேபோல ஆடுவதில்லை (சேவாக், கில் கிறிஸ்ட் ஆகியோர் விதிவிலக்குகள்). டெஸ்ட் போட்டிகளில் ரன்னை விடவும் ரன் விகிதத்தைவிடவும் விக்கெட் விழாமல் காப்பாற்றுவதே முக்கியம். விக்கெட்களை இழந்தால்தான் ஓர் அணி தோற்கும் என்னும் நிலையில் விக்கெட் மிகவும் முக்கியமாகிவிடுகிறது.

விக்கெட் முக்கியம் எனும்போது தடுத்து ஆடும் ஆட்டத்தில் தேர்ச்சி இன்றியமையாதது. குறிப்பாக, உயிர்ப்புள்ள ஆடுகளங்களில், புயல் வேகப் பந்து வீச்சாளர்களுக்கும் அபாரமான தடுப்பாளர்களுக்கும் எதிராக ஆடும்போது இது மிக மிக அவசியம். ஆட வேண்டிய பந்தை ஆடி, விட வேண்டிய பந்தை விட வேண்டும். நல்ல பந்துகளுக்கு மரியாதை தந்து ஆட வேண்டும். டெஸ்ட் போட்டியில் அடித்து ஆடுவது தவறு என்று இதற்குப் பொருள் அல்ல. சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ரிக்கி பான்டிங், குமார சங்ககாரா ஆகியோர் அடித்து ஆடக்கூடியவர்கள்தான். ஆனால், தேவைப்படும்போது தடுப்பாட்டத்தின் மூலம் அதிக நேரம் களத்தில் நிற்பதற்கும் இவர்களுக்குத் தெரியும்.

நியூஸிலாந்தில் 2009இல் நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 619 ரன் எடுத்தது. இந்தியா 305 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஃபாலோ ஆன் பெற்ற இந்தியா தோல்வியைத் தவிர்க்கப் போராடியபோது கவுதம் காம்பீர் 463 பந்துகள் ஆடி 137 ரன் எடுத்தார். அவருடைய மாரத்தான் ஆட்டத்தின் மூலம் இந்தியா அந்தப் போட்டியை டிரா செய்தது. அதற்கு முன்பு நடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்ததால் இந்த டிரா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது.

முதலிலேயே சொன்னதுபோல, சேவாக், கில் கிறிஸ்ட் ஆகியோர் விதிவிலக்கு. அணி நிர்வாகம் இவர்கள் எப்போதும் அடித்து ஆட ஊக்குவித்தது. அணியில் நின்று ஆடும் வலுவான மட்டையாளர்கள் இருக்கும்போது ஒருவர் இப்படி ஆடலாம். சேவாக் அணியில் இருந்தபோது திராவிட், சச்சி, லட்சுமணன் ஆகியோரும் இருந்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

டெஸ்ட் போட்டிகளுக்குத் தேவையான பொறுமையும் தொழில்நுட்பமும் கொண்ட முரளி விஜய், சதேஸ்வர் புஜாரா ஆகியோரும் நின்று ஆடும் முனைப்பைப் போதிய அளவு வெளிப்படுத்தாததுதான் இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்று இன்னிங்ஸ்களில் குறைவான ரன்களுக்கு ஆட்டமிழந்த கோலி, ஒரு இன்னிங்ஸில் தன் ஆட்டத் திறனை நேர்த்தியாக வெளிப்படுத்தினார். விருத்திமான் சாஹாவுக்குப் பதில் ஆடிய பார்த்திவ் படேல் விக்கெட்டுக்குப் பின்னால் சொதப்பினார். விக்கெட்டுக்கு முன்னால் டெஸ்ட் மட்டையாட்டத்துக்கான அணுகுமுறையை ஓரளவு சரியாகவே வெளிப்படுத்தினார். ஹர்திக் பாண்டியா தன்னை கபில் தேவ் அல்லது சேவாக் என்று நினைத்துக்கொண்டுவிட்டார் போலிருக்கிறது.

ரோஹித்தின் இரண்டுங்கெட்டான் நிலை

ரோஹித் ஷர்மாவின் நிலை சற்றே விசித்திரமானது. அபாரமான மட்டையாட்டத் திறனை வரமாகப் பெற்றிருப்பவர் எனக் கருதப்படும் அவருக்கு டெஸ்ட் போட்டியில் நிலையான இடம் இல்லை. நடப்பு ஆட்டத் திறனின் அடிப்படையில் ரஹானேவுக்குப் பதில் அவர் சேர்க்கப்பட்டார். துணை கேப்டனான ரஹானேவின் இடத்தை நிரப்பும் சுமையுடனும் டெஸ்ட் போட்டியில் தன் திறமையை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்துடனும் களம் இறங்கும் அவருக்கு மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் அழுத்தம் இருப்பதை மறுப்பதற்கில்லை. இரு அணிகளிலுமாகச் சேர்த்து இரண்டு மூன்று பேர் மட்டுமே பிரகாசித்த போட்டிகளில் ஷர்மாவால் சோபிக்க முடியவில்லை என்பதைப் பெரிய பின்னடைவாகப் பார்க்க முடியாது. ஆனால், அடிக்க வேண்டிய பந்துகளைச் சரியாகக் கணிப்பது, கால்களை முறையாக நகர்த்துவது ஆகியவற்றில் அவர் மேலும் கவனத்துடன் இருந்தால் டெஸ்ட் அரங்கில் தனக்கான இடத்தை அவர் உறுதிசெய்து கொள்ளலாம்.

அதேசமயம் தன்னுடைய வலிமையான அடித்து ஆடும் திறனையும் ரோஹித் வெளிப்படுத்த வேண்டும். ரஹானேயின் ஆட்டத் திறனின் பின்னடைவால் மட்டும் ரோஹித் சேர்க்கப்படவில்லை. இந்தியா தென்னாப்பிரிக்காவில் அச்சமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்னும் செய்தியும் அதில் இருக்கிறது. எனவே, ரோஹித் தனது வழக்க்மான ஆட்டத்தை வெளிப்படுத்த முயல வேண்டும். அது அணியின் நிலைமையைக் கணிசமாக உயர்த்த உதவும். ஆனால், தொடக்க நிலை மட்டையாளர்கள் விரைவில் ஆட்டமிழந்தால் அப்படி ஆடுவதற்கான வாய்ப்பு அமையாது என்பதால் முதல் நான்கு பேரில் இருவர் ஓரளவேனும் நின்று ஆடினால், ரோஹித் தன் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்னை உயர்த்தலாம்.

பந்து வீச்சாளர்கள் தரும் நம்பிக்கை

பந்து வீச்சைப் பொறுத்தவரை இந்தியப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்கள். இரண்டாவது டெஸ்ட்டில் அதிக ரன் வித்தியாசத்தில் தோற்றாலும் தென்னாப்பிரிக்காவின் மொத்த விக்கெட்களையும் ஒவ்வொரு முறையும் வீழ்த்தியிருக்கிறார்கள். டெஸ்ட் போட்டியில் வெல்ல மிகவும் அவசியமான திறமை இது. இரண்டாவது டெஸ்ட் நடந்த செஞ்சூரியன் ஆடுகளம் துணைக்கண்டத்து ஆடுகளத்துக்கு இணையானதாகவே இருந்தது. எனினும் அந்த ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்க அணியினருக்கு இணையாக இந்திய வீச்சாளர்களும் பிரகாசித்தார்கள். முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் பெரும்பாலான மட்டையாளர்களைச் சொற்ப ரன்களுக்குள் ஆட்டமிழக்கச்செய்த இந்திய வீச்சாளர்கள் கடை நிலை ஆட்டக்காரர்களை அதிக ரன்கள் அடிக்க விட்டது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதைத் தவிர்த்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம்.

கோலியைத் தவிர, பாண்டியா, பார்த்திவ் படேல், ரோஹித் ஆகியோர் தென்னாப்பிரிக்கக் களங்களுக்கு ஏற்ப ஓரளவேனும் ஆடியிருக்கிறார்கள். விஜய், புஜாரா ஆகியோரின் ஆட்டம் மேம்பட்டால் இந்தியா இந்த அளவுக்கு மோசமாகத் தோற்க வேண்டிய சூழல் உருவாகாது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கும் ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தின் ஆடுகளம் பசுமையாகக் காட்சியளிக்கிறது. இந்திய மட்டையாளர்களைக் கலவரப்படுத்தக்கூடிய நிறம் இது. இரண்டாவது போட்டியில் கிட்டத்தட்ட துணைக்கண்டத்து ஆடுகளமே கிடைத்தும் அதில் ஆடத் திணறிய இந்திய மட்டையாளர்கள் இந்தக் களத்தில் என்ன செய்வர்கள் என்பது சங்கடமூட்டும் கேள்வியாகவே இருக்கிறது. கடந்த இரு நாள்களில் அஜிங்க்ய ரஹானேயும் வலைப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டத்தை வைத்துப் பார்க்கும்போது அவர் களமிறக்கப்படுவார் என்றே தோன்றுகிறது. அவர் யாருக்குப் பதில் களமிறங்குவார் என்பது தெரியவில்லை. ரோஹித்தை நீக்கினால் அவருக்குப் போதிய வாய்ப்பளிக்காமல் நீக்குவதுபோல ஆகிவிடும். ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் ஐந்தாவது பந்து வீச்சாளருக்குப் பதில் கூடுதலாக ஒரு மட்டையாளரைத் தேர்வுசெய்வதே புத்திசாலித்தனம் என்னும் நிலையில் பாண்டியா அல்லது அஸ்வின் நீக்கப்படலாம். பார்த்திவ் படேலுக்குப் பதில் அணியில் இடம்பெறக்கூடிய தினேஷ் கார்த்திக்கும் மட்டை வலுவைக் கூட்ட உதவலாம்.

ரஹானே வெளிநாடுகளில் சிறப்பாக ஆடியிருப்பவர் என்னும் முறையில் அவரது வருகை இந்திய அணிக்கு நல்வரவாகவே இருக்கக்கூடும். ஆனால், முதலிலேயே குறிப்பிட்டபடி ரஹானேவால் மட்டும் இந்தியா கரை சேர்ந்துவிட முடியாது. தொடக்க நிலை ஆட்டக்காரர்கள் ஓரளவேனும் நிலைத்து நின்று ஆடினால்தான் பிறகு வருபவர்களால் ஸ்கோரை உயர்த்த முடியும். நிலைத்து நின்று ஆட வேண்டுமென்றால் ஷாட் தேர்விலும் கால் நகர்விலும் கவனம் செலுத்த வேண்டும். சிறப்பாகச் செயல்பட்டுவரும் பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் விதமாக, கேட்ச் பிடிப்பதில் மேலும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த மூன்று அம்சங்களிலும் முன்னேற்றம் காண்பது இந்தியா வெல்வதற்கான உத்தரவாதமாக இல்லாமல் போகலாம். ஆனால், போட்டி போட்டியாக நடப்பதற்கான உத்தரவாதமாக அது இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்திய அணி திணறுவது ஏன்?

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

புதன் 24 ஜன 2018