மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

பிரகாஷ் காரத்தின் வெற்றி, மோடியின் வெற்றி!

பிரகாஷ் காரத்தின் வெற்றி, மோடியின் வெற்றி!

காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அக்கட்சியின் முன்னாள் உறுப்பினரும் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜி. மேற்கு வங்காளத்தில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு, கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில், காங்கிரஸுடன் கூட்டணி வேண்டுமென்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்தார். இதற்கு எதிரான மனநிலையில் இருந்தனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பிரகாஷ் காரத்தின் ஆதரவாளர்கள். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில், யெச்சூரிக்கு ஆதரவாக 31 வாக்குகளும், காரத்துக்கு ஆதரவாக 55 வாக்குகளும் கிடைத்தன. இதனால், பொதுக்குழுவின் முடிவில் நிறைவேற்றப்பட்ட கட்சியின் வரைவு அரசியல் தீர்மானத்தில், காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முடிவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளார் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரான சோம்நாத் சாட்டர்ஜி. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறியபோது, இவர் தனது சபாநாயகர் பதவிலிருந்து விலக மறுப்பு தெரிவித்தார். அதனால், இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் பிறகு நீண்டகாலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருந்தவர், தற்போது காங்கிரஸுடன் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்க வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

“இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, பிரகாஷ் காரத்தின் வெற்றி மோடியின் வெற்றிதான். முன்னாள் பொதுச் செயலாளரின் தலைமையில், ஏற்கெனவே கட்சி அழிவைச் சந்தித்தது. அவரது முடிவுகளால், கட்சிக்கு ஏற்பட்ட இழப்பு மிக அதிகம். ஜோதிபாசுவைப் பிரதமராக விடாமல் தடுத்ததில் இருந்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டது வரை இது தொடர்ந்தது” என்று கூறியுள்ளார் சோம்நாத்.

மேலும், “தற்போதுள்ள அரசியல் சூழலில், மேற்கு வங்காளத்தில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க காங்கிரஸுடன் கைகோக்க வேண்டியது அவசியம். மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியைப் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர். இப்போது, அக்கட்சியால் தனியாகச் செயல்பட முடியாது. கூட்டணி வேண்டாம் என்ற முடிவால், கட்சியின் எம்.பிக்கள் எண்ணிக்கை மேலும் குறையும். பொதுமக்களின் ஆதரவை இழந்துவிட்டு, இம்மாதிரியான முடிவுகளை விடாப்பிடியாக மேற்கொள்வதில் முன்னாள் பொதுச் செயலாளர் வெற்றிகரமானவர்” என்று இவர் பிரகாஷ் காரத்தை கிண்டலடித்துள்ளார்.

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குக் குறைந்துவரும் வேளையில், கட்சியின் உள்ளமைப்பைச் சீராக்கும் வேலைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் சோம்நாத் சாட்டர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 24 ஜன 2018