சென்சார் இல்லாத ஜிஎஸ்டி!


ராம் கோபால் வர்மா எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கிறார் போல. பொங்கல் பண்டிகை தொடங்குவதற்கு முன்பு அவரது ‘ஜிஎஸ்டி’ எனும் டாக்குமென்ட்ரி டிராமா திரைப்படத்தில் நடித்த மியா மல்கோவாவை வைத்து போஸ்டர் ரிலீஸ் செய்ய சொல்லி பரபரப்பைக் கிளப்பினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த அடல்ட் திரைப்பட நடிகை மியா.
நாட்டில் மிகவும் பரபரப்பைக் கிளப்பிய ஜிஎஸ்டி என்ற சுருக்கத்துடன் ‘God, Sex And Truth’ எனும் திரைப்படத்தை மியா நடிப்பில் இயக்கியிருக்கிறார். Sex குறித்த ஆழமான தத்துவங்களை ஒரு பெண்ணின் உணர்விலிருந்து விளக்கும் படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் போஸ்டர் வெளியிடப்பட்டபோது “சன்னி லியோனுக்கு அடுத்த இந்திய இயக்குநரிடம் நடித்துள்ள இரண்டாவது அடல்ட் நடிகை நான்” என மியா ட்விட் செய்ததில், “நான் இதுவரை சன்னி லியோனை இயக்கியது இல்லை. உன்னைப் போன்ற பேரழகியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம்” என ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார் ராம் கோபால் வர்மா. ஆனால், இதைக் கண்டுகொள்ள யாரும் இல்லை. இந்த நிலையில்தான் ‘God, Sex And Truth’ திரைப்படத்தை ஜனவரி 26ஆம் தேதியன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டார். அதிலும் தனது நையாண்டித் தனத்தைக் காட்டியிருக்கிறார்.
தீபிகா படுகோன் நடித்துப் பல பிரச்னைகளைக் கடந்து வெளியாகும் பத்மாவத் திரைப்படம் ஒருநாள் முன்பே (ஜனவரி 25) ரிலீஸாகிறது. ஜனவரி 26ஆம் தேதி GodSexTruth.Online இணையதளத்தில் என் திரைப்படத்தை ரிலீஸ் செய்கிறேன். சிறந்த பெண் யாரோ அவர் ஜெயிக்கட்டும் என்று கூறியிருக்கிறார் ராம் கோபால் வர்மா. தியேட்டர் ரிலீஸ் செய்யாமல், இணையதளத்தில் ரிலீஸ் செய்வதற்கான காரணம் இருக்கிறது. எப்படியும், சென்சார் துறையிடம் சென்று படத்தைக் கொடுத்தால் அத்தனையையும் கட் செய்து கையில் கொடுத்துவிடுவார்கள் என்பதற்காக, சென்சார் இல்லாத இணையதளத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.