மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்!

‘பேருந்து கட்டண உயர்வை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்’ என்று தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று (ஜனவரி 23) தெரிவித்துள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை அறிவித்தது. இந்தக் கட்டண உயர்வு கடந்த 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தமிழகத்தின் ஏழை எளிய மக்கள் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. பல இடங்களில் மாணவர்கள் பேருந்துகளை மறித்து போராடி வருகின்றனர்.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, “ஒரு ரூபாய் போட்டால் பிச்சைகாரர்கள்கூட வாங்க மறுக்கும் அளவுக்குத் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதால் பேருந்து கட்டண உயர்வு என்றும் மக்களை பாதிக்காது” என்று தெரிவித்தார். அவர் கூறியது சர்ச்சையானது.
இந்த நிலையில், நேற்று (ஜனவரி 23) சென்னையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, அண்டை மாநிலத்தை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான். டீசல் விலை அதிகரித்ததும் நிர்வாக செலவுகளைச் சாமாளிக்கவே பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளாதாகவும் பேருந்து கட்டண உயர்வை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.