மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

ஆண்டாள் சர்ச்சை: தீர்த்து வைக்க திமுக, பாஜக போட்டி!

ஆண்டாள் சர்ச்சை: தீர்த்து வைக்க திமுக, பாஜக போட்டி!

இன்று (ஜனவரி 23) காலை 6 மணியளவில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் மதுரையில் இருந்து புறப்பட்டு திருவில்லிப்புத்தூருக்குப் புறப்பட்டார். அங்கே ஜீயரைச் சந்தித்துவிட்டு ஆண்டாள் சந்நிதிக்கும் சென்று , ‘ஆண்டாள் திருவடிகளே சரணம்’ என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.

வைரமுத்துவின் ஆண்டாள் பற்றிய கருத்தைப் பெரிதாக பற்ற வைத்தது பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் மிகக் கடுமையான பேச்சு. அதேநேரம் பாஜக பற்ற வைத்த சர்ச்சையை பாஜகவே மெல்ல அணைத்திருக்கிறது என்பதுதான் இங்கே குறிப்பிடத் தக்கது.

ஆம். தினமணி ஆசிரியரோடு ராமகிருஷ்ணா மடத்துப் பிரமுகர்களும், பாஜகவின் ஊடகப் பிரிவு மாநில தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத்தும் சென்றிருந்தனர். பிரசாத் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசையின் தீவிர ஆதரவாளராக அறியப்படுவர். மேலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கும் மிகவும் நெருக்கமானவர்.

இந்நிலையில் பிரசாத்தின் தொடர் முயற்சியால்தான் வைத்தியநாதன் திருவில்லிப்புத்தூருக்கு இன்று சென்றார் என்று தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் அலையடித்த நிலையில் நாம் இதுபற்றி பிரசாத்திடமே பேசினோம்.

பாஜக ஊடகப் பிரிவின் மாநிலத் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், “நான் தினமணி ஆசிரியரின் மாணவன். பலர் சித்திரிக்கிற மாதிரியான நபர் அல்லர் அவர். அவரைப் பற்றி மிக நன்றாக அறிவேன். வைரமுத்துவின் அந்த வார்த்தைகளைப் பிரசுரிக்க வேண்டாம் என்று சில வைணவர்கள் அவரிடம் சொன்னதாகவும், அதை அவர் மறுதலித்ததாகவும் அவர் மீது புகார்கள் வளைய வந்தன. ஆனால் இன்று காலை தினமணி ஆசிரியர் திருவில்லிப்புத்தூர் ஜீயரை சந்தித்து இரண்டு மணி நேரம் உரையாடியதில் பல பிரச்னைகள் தீர்ந்துவிட்டன’’ என்றார்.

இருவரும் என்ன பேசினார்கள் என்று கேட்டோம்.

”ஜீயர் மிகவும் தன்மையாகவும், கனிவாகவும் பேசினார். ‘நீங்கள் பாரதத்தின் கலைகளையும், ஆலயங்களையும் பற்றியெல்லாம் தினமணியில் எவ்வாறு எழுதுகிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் உங்களை ஆண்டாள் சந்நிதியில் இப்படி நிறுத்தும் அளவுக்கு சூழல் ஆகிவிட்டது’ என்ற ஜீயர்,

’இந்தக் கட்டுரையை பிரசுரிக்க வேண்டாம், அந்த வார்த்தைகளையாவது பிரசுரிக்க வேண்டாம்னு உங்களிடம் கேட்டும், நீங்கள் அதை மறுத்து அப்படியே பிரசுரத்துக்கு அனுப்பினதா சொல்லுகிறார்களே?’ என்று தினமணி ஆசிரியரிடம் கேட்டார்.

அதற்கு தினமணி ஆசிரியர், ‘அப்படி யாரும் என்னிடம் சுட்டிக்காட்டவும் இல்லை, நான் அவர்களை மறுத்துப் பேசவும் இல்லை. இந்த கட்டுரை ஆற்றிய நாளில் என் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டதால் நான் அவரைப் பார்க்க சென்றுவிட்டேன். அதன் பின் ஐந்து நாட்கள் என்னால் பணியில் முழு கவனம் எடுத்துக் கொள்ள முடியவில்லை. மற்றபடி நான் வேண்டுமென்றே அந்த வார்த்தையைப் பிரசுரிக்கவில்லை’ என்று விளக்கம் அளித்தார் தினமணி ஆசிரியர்.

அதையடுத்து ஜீயர், ஆசிரியர் வைத்தியநாதனிடம், ‘வைரமுத்துவையும் இங்கே தாங்கள் வரச் சொல்லி வற்புறுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த தினமணி ஆசிரியர், ‘வைரமுத்துவை நான் சந்தித்து உங்களுடன் பேசியது பற்றி அவரிடம் சொல்கிறேன். உங்களைப் போன்றவர்கள் மனதளவில் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துகிறேன். ஆனால் அவரை இங்கே வரச் சொல்லி என்னால் வலியுறுத்த முடியாது. அது அவர் எடுக்க வேண்டிய முடிவு. நான் அவரை கட்டாயப்படுத்த முடியாது’ என்று சொன்னார்.

அப்போது ஜீயர், ‘இது தெரிந்தோ தெரியாமலோ நடந்துவிட்டது. நாங்கள் அவரை மனிதர்களிடத்தில் மன்னிப்பு கேட்கச் சொல்லவில்லை. ஆண்டாள் தாயாரிடம் வந்துதான் கேட்கச் சொல்கிறேன். அவர் இங்கே வரட்டும், ஆண்டாளைப் பார்க்கட்டும். ‘அம்மா... நான் தவறு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த வார்த்தை உங்களை வணங்கும் கோடானுகோடி பேரைப் புண்படுத்தியிருக்கிறது. அவர்கள் அதை தவறு என்று கருதுகிறபோது நான் என் தாயிடம் மன்னிப்பு கேட்கிறேன்’ என்று அவர் இங்கே வந்து சொல்லட்டுமே. அதில் அவருக்கு ஒரு கௌரவக் குறைவும் வரப் போவதில்லை’ என்று ஜீயர் குறிப்பிட்டார்.

சில நேரங்களில் ஜீயர், தினமணி ஆசிரியர் இருவருமே கண் கலங்கிவிட்டனர். ஜீயரை சந்தித்து முடித்த கையோடு ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று, ஆண்டாள் திருவடிகள் சரணம், ஜீயர் திருவடிகள் சரணம் என்று வணங்கினார் தினமணி ஆசிரியர். உருக்கமான சந்திப்பு இந்த சர்ச்சையில் பாதியை முடித்துவிட்டது. மீதியையும் விரைவில் முடித்துவிடும்’’ என்றார் பிரசாத்.

பாஜகவின் இந்த காய்நகர்த்தலுக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

தினமணி என்ற பாரம்பரிய நாளிதழை பாஜகவினர் சமூக தளங்களில் சகட்டுமேனிக்குத் தாக்கினர். இந்நிலையில் இப்போது நாம் நடத்தும் தாக்குதல் பிற்காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு பாதகம் ஆகிவிடக் கூடாது என்றும் பாஜக மூத்த தலைவர்கள் கருதினர். இந்நிலையில்தான் அவர்கள் தினமணி ஆசிரியருக்கு நெருக்கமான பிரசாத்தின் மூலம் இந்த சந்திப்பை நடத்தச் செய்து சுமுக சூழலை உண்டாக்கியிருக்கின்றனர். பின்னாட்களில் தினமணி தன்னை ஒரேயடியாக எதிர்த்துவிடக் கூடாது என்ற பாஜகவின் பார்வையும் இதில் இருக்கிறது என்றனர் கட்சி வட்டாரத்தில்.

மேலும் ஜீயரின் உண்ணாநோன்பை முடித்துவைத்தது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா என்று ஜெகத்ரட்சகன் கூறியதை பாஜக வட்டாரங்கள் ரசிக்கவில்லை. ஜீயரிடம் பேசிப் பிரச்னையை தீர்க்கும் அளவுக்குக்கூட பாஜக இல்லையா? நமது ஏரியாவில்கூட திமுகதான் விளையாடுகிறதா? இதில்கூட திமுகதான் செல்வாக்கு செலுத்துகிறதா என்ற கேள்வி பாஜகவினர் மத்தியிலேயே எழுந்தது. அதையெல்லாம் முடிவுகட்டும் விதமாகத்தான், தான் பற்ற வைத்த இந்த சர்ச்சையை தானே முன் வந்து அணைக்க ஆரம்பித்திருக்கிறது பாஜக.

தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் இந்தச் சந்திப்பைப் பற்றி இன்றே வைரமுத்துவிடம் அலைபேசியில் பேசிவிட்டார். அப்புறம் என்ன என்பது ஆண்டாளுக்கே வெளிச்சம்!

-ஆரா

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 23 ஜன 2018